சிறுகதைப் போட்டி – 10 : சிறைப் பறவை – அருண்குமார்

மாநகரங்களின் வளர்ச்சி மாநிலத்தின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த வளர்ச்சியின் பின்னால் எத்தனை எத்தனை மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தெருவில் விடப்பட்டனர் என்பது பெரும்பாலும் பலரால் கவனிக்கப் படுவதில்லை. கவனிக்கப்படும் அளவிற்கு அவர்கள் அரசாங்கத்திற்கு முக்கியமானவர்களாகவும் இருப்பதில்லை.
கொல்கத்தா, பம்பாய், டெல்லி, பெங்களூர், ஐதராபாத், சென்னை என இந்தியாவின் மாநகரங்கள் எதை எடுத்து கொண்டாலும் வானுயர்ந்த கோபுரம் போன்ற கட்டிடங்கள் மட்டும் அதன் அடையாளமாக இருப்பதில்லை‌. அதன் விளைவாக தெருவில் அனாதைகளாக விடப்பட்ட பல மக்களும் அதன் அடையாளம் தான்.

அந்த மண்ணின் பூர்வகுடிகளான அவர்கள் குடிசையில் வசித்து ஓடி விளையாடி மோண்டு கழுவி படுத்து உறங்கிய இடங்கள் தான் இன்று பல மாடி கொண்ட அலுவகங்களாகவும் குளுகுளு அறைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.
அவர்களின் இடத்தை பிடுங்கி கொண்ட அரசு அதன்பின் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இன்றும் நடு இரவில் போலீஸ் வந்து துரத்துவதை நாம் பார்க்கலாம். சுவரேறி குதித்து திருடுபவன் எந்தவித கவலையுமின்றி திருடிவிட்டு சென்று கொண்டிருக்கும் இதே ஊரில் ஒதுங்க இடமின்றி தவிக்கும் மக்கள் சாலையோரங்களில் உறங்க அனுமதியின்றி தவிக்கும் அவலநிலை தான் இங்குள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் குடிசைகளாகவும் சேரிகளாகவும் இருந்த போது கண்டுகொள்ளாதவர்கள் இப்போது வந்து இவர்களால் தான் நகரத்தின் அழகு பாழ்படுகிறது என்று ஒப்பாரி வைப்பது நகைமுரண் தான். நோய்க்கான மருந்தை அளிக்காமல் நோய் வந்தவனை கொன்று விடுவது போன்றது தான் இது போன்ற குடிசை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதும்.
இன்றும் தெருவோரங்களில் படுத்து உறங்குபவர்கள் மீது வாகனம் ஏற்றப்பட்டு அவர்கள் இறக்கும் நிகழ்வு தொடர்ச்சியாக நடப்பது தான்‌. சிலநேரங்களில் பணம் கொடுத்தும் சில நேரங்களில் அதுவும் இல்லாமலும் கூட இது போன்ற சம்பவங்கள் கடந்து செல்லப்படுகிறது. இன்னும் சில நேரங்களில் அவர்களை சமூகவிரோதிகளாக அறிவித்து அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படும் நிகழ்வும் நடக்கின்றது.
எல்லா குற்றங்களையும் அரசின் மீது சுமத்தி விட்டு நாம் நல்லவர்களாக ஒதுங்கி விட முடியாது. காய்கறி வாங்க சுற்றி பார்க்க சூப்பர் மார்க்கெட், படம் பார்க்க விதவிதமான மால்கள் என நம் வாழ்க்கை தரமே முற்றிலும் மாறி விட்டது. முதலாளித்துவமும் உலகமயமாக்கலும் நம் வாழ்க்கையை அப்படியே மாற்றியிருக்கின்றன. அதனில் மூழ்கி இப்போது நாம் வெளியில் வர முடியாமல் இருக்கிறோம். அதில் தப்பிக்க முடிந்தவர்கள் அந்த மாலுக்கு உள்ளேயும் மாட்டி கொண்டவர்கள் மாலுக்கு வெளியேயும் இருக்கின்றனர்.
அப்படி மாட்டிக்கொண்ட பல குடும்பங்களுள் ஒரு குடும்பம் தான் குருசாமியின் குடும்பம். தெருவிலேயே வாழ்பவன். எப்படியோ அதேபோல் ஒரு குடும்பத்தில் இருந்து ஒருத்தியை மணமுடித்து மகிழ்ச்சிக்கு அர்த்தமே தெரியாமல் வாழ்ந்து வருபவன். ஏதோ அன்றைய தினம் எந்த வாகனமும் வராததால் உடனிருப்பவர்கள் நேரத்தில் உறங்கி விட்ட பயனால் அவனுக்கும் ஒரு மகன் பிறந்தது. பின்னர் திரும்பவும் ஒரு நாளில் கூடியதால் இன்னொரு மகளும் பிறந்தது.
நூறுநாள் வேலை திட்டம் வருடத்தில் சில நாட்கள் சோறு போட மீதி நாட்களுக்கு வேறு வேலைகளை தேடி அலைந்தான். அடிக்கடி செப்டிக் டேங்க் அடைப்பு எடுக்கும் வேலைக்கும் செல்வான். ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலைக்கும் செல்வான். ரோடு போடுவது வீடு கட்டுவது என கிடைக்கும் எல்லா வேலைக்கும் செல்வான்.
மனைவி, குழந்தை பிறந்த சில வருடங்களில் இறந்து விட தனி ஒருவனாக தன் மகனையும் மகளையும் கவனித்து கொண்டிருந்தான்.
நேற்று இரவு ஒரு பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருக்கும் போது போலீஸ் வந்து துரத்தி விட அவர்கள் பாதி இரவில் இரண்டு கிலோமீட்டர் தாண்டி வேறொரு பிளாட்பாரத்தில் போய் தூங்கினர். காலையில் எழுந்து பொது பாத்ரூமில் குளித்து விட்டு வெளியே வந்தால் பிள்ளைகளின் கண்களில் பசி தான் தெரிந்தது. அதனை தாண்டி செல்ல முடியாமல் இன்னைக்கு அப்பா வேலைக்கு போயிட்டு வந்துடறேன்.
வந்தவுடனே உங்களுக்கு அப்பா சாப்பாடு வாங்கி தர்றேன்னு சொல்லிட்டு கிளம்புனார். பசங்க அப்பா வந்துடுவாருங்கற நம்பிக்கைல அவர் சொன்ன இடத்துல உட்கார்ந்து மண்ணுல விளையாடிட்டு இருந்தாங்க. நூறு நாள் வேலைத் திட்டம் இன்று இல்லாததால் வேறு வேலை தேடி சென்று கொண்டிருந்தார்.
ஹார்பரில் சென்று பார்த்தால் இன்றைய கூலிகளை ஏற்கெனவே தேர்ந்தெடுத்து விட்டதால் வேலை இல்லை என்று சொல்லி விட்டனர். அங்கிருந்து கிளம்பி வந்து சிக்னலில் நின்ற கார்களின் கண்ணாடியை துடைக்க ஆரம்பித்தார்.
இரண்டு சிக்னலில் கண்ணாடியை துடைத்து எட்டு ரூபாய் சில்லறையை சேகரித்தார். மாநகரின் வெயில் கொடுமை அதிகமாக இருந்தது. இரண்டு நாளாக சாப்பிடாமல் இருந்தது தலையை சுற்றியது. அப்படியே படுத்து விடலாம் போல இருந்தது அவருக்கு. அப்போது சில பள்ளி குழந்தைகள் சீருடையில் சாலையை கடந்து கொண்டிருந்தனர். நம் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையுமா என்ற யோசனையில் ஆழ்ந்தார்.‌ அது அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்றெண்ணி எழுந்தவர் துணியை கீழே இருந்து எடுக்கும் போது அதில் ஒட்டியிருந்த மண்ணை துடைக்க மறந்து விட்டார். அப்படியே துடைத்த போது கண்ணாடியில் கோடு விழுந்து விட்டது.
அந்த கார் காரன் இறங்கி வந்து அவரை அடிக்க ஆரம்பித்து விட்டார். அடித்த அடியில் கையில் இருந்த சில்லறைகளும் சிதறி ஓடி விட்டன. அப்புறம் சிக்னல் போட்டு விட்டதால் அவர் கிளம்பி சென்று விட சிதறிய சில்லறைகளை தேடினார். அதில் ஐந்து ரூபாய் மட்டும் கிடைக்க அதை எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
அவருக்கும் பசி மயக்கம் வருவது போன்று இருந்தது. ஆனால் கண்ணில் அவரின் குழந்தைகளின் வரிவடிவம் தெரிந்தது. வேறு எங்காவது பிறந்திருந்தால் இப்படியா இருந்திருப்பார்கள் என்ற எண்ணத்தை அவரால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. அவர்களுக்கு வேண்டியதை தர இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று முடிவெடுத்து கொண்டு வேறு வேலை எதாவது கிடைக்குமா என்று தேடி சென்றார்.
அப்போது ஒரு பெரிய ஓட்டலின் வெளியே பெரிய தகராறாக இருந்தது. என்னவென்று சென்று பார்த்தார். அங்கே செப்டிக் டேங்க் அடைப்பு எடுக்க வர வேண்டியவர் வராமல் இருந்தார். இன்றே அடைப்பு எடுக்க வேண்டிய நிலை. யாராக இருந்தாலும் பரவாயில்லை. கூட்டி வாருங்கள். ஐநூறு ரூபாய் தருகிறேன் என்றார். அந்த பணம் மட்டும் அவர் கண் முன் வர அவர் அதனை செய்ய ஏற்று கொண்டார்.
அவர் குழந்தைகள் மாலையும் ஆனவுடன் பசியினால் துடித்து கொண்டிருந்தன. மாலை வேளையில் பக்கத்தில் உள்ள பூங்காவிற்கு சென்றிருந்தனர். அங்கே வந்த மற்ற குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. அவர்களின் உடையை பார்த்து ஏங்கி கொண்டிருந்தனர்.
உடனே அவர்களது பெற்றோர் அந்த குழந்தைகளுக்கு சிற்றுண்டி வாங்கி வந்தனர். அதை பார்த்த அவர்களுக்கு அவர்களின் அப்பாவின் நினைவு தான் வந்தது. அவர் வந்து விடுவாரா. வந்து நம் பசியை போக்கி விடுவாரா என்றெண்ணி கொண்டிருந்தனர். அண்ணன் தனது தங்கையிடம்,
“அப்பா வந்துடுவாரு. நமக்காக தான் சாப்பாடு வாங்க போயிருக்காரு. டெய்லியும் இப்படித்தான லேட் பண்ணுவாரு. ஆனா வந்துடுவாரு. கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ”.
பின்னர் இங்கு அவரின் அப்பா வேலையில் இறங்க ஆயத்தமானார். தினமும் எவ்வளவு நேரமானாலும் சாப்பாடு வாங்கி கொண்டு சென்று விடுவோம். இன்று இந்த பணத்தில் நல்ல சாப்பாடே வாங்கி தந்து விடலாம். இன்னும் சில நாட்களுக்கும் இது உபயோகமாக இருக்கும். திரும்பி வருவோமா என்று தெரியாமலேயே அவன் உள்ளே இறங்கினான்.
அந்த டேங்க் மிஷின் வைத்து மட்டுமே எடுக்கப்பட வேண்டும். அதன் ஆழம் அதிகம். அதற்கு பதினைந்தாயிரம் செலவு ஆகும். அதனால் தான் மனிதர்களை இறக்கி எடுக்கும் முறையை பின்பற்றினர். ஏற்கெனவே இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே போல ஒருவர் செய்த போது இறந்து போயிருந்தார். அப்போதில் இருந்து அந்த பக்கத்தில் இருந்தவர்கள் யாரும் அந்த வேலைக்கு வருவதில்லை.
அவன் உள்ளே இறங்கினான். ஆரம்பத்தில் வேலையை செய்து கொண்டிருந்தவன் பின்னர் நேரம் ஆக ஆக அவனை அறியாமலேயே கீழே கீழே சென்று கொண்டிருந்தான். பின்னர் அவன் உணர்ந்து மேலே வர முயற்சி செய்ய விஷவாயுவால் தாக்கப்பட்டான். கை கால்கள் வேலை செய்யாமல் போக மீண்டும் மீண்டும் மேலே வர முயற்சி செய்ய வழியின்றி கண்கள் மட்டும் அவன் குழந்தைகளை தேடி கொண்டிருந்தது. பசியினால் வாடி கொண்டிருக்கும் அவனை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் குழந்தைகளையே நினைத்து கொண்டிருந்தான். பின்னர் உணர்ச்சிகளை இழந்து அவன் கீழே செல்ல ஆரம்பித்தான்.
அவன் உணவு கொண்டு வருவான் என்று காத்திருந்த குழந்தைகள் அப்பா வருவார் என்று நம்பியிருந்து காத்திருந்து மயங்கி விழுந்தனர்.
குறுந்தொகை 92

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடும் சிறைப் பறவை,
இறை உறை ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரை கொண்டமையின், விரையுமாம் செலவே. 

ஆசிரியர்: தாமோதரனார்

திணை: நெய்தற் திணை – தலைவி சொன்னது

பொருளுரை:   சூரியன் மறைந்த அகன்ற வானத்தில் வளைந்த சிறகுகளை உடைய பறவைகள் உணவை அலகில் தூக்கிக் கொண்டு, உயர்ந்த கடம்ப மரத்தில் உள்ள தங்கள் கூடுகளுக்குச் சென்று, குஞ்சுகளின் வாயில் திணிக்கும். அவை பரிதாபத்திற்கு உரியவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here