சிறுகதைப் போட்டி – 23 : உணர்வுகள் தொடர்கதை – புதுவை பிரபா

பாதியிலே நிறுத்திவிட்டு, வெடுக்கென்று எழுந்தாள். இப்போதெல்லாம், தொலைக்காட்சி நாடகங்கள் கூட எதிரிகளாகி இருந்தன, அன்பரசிக்கு. துணைக்கு இருந்த தாயாரும், போன வாரம் புறப்பட்டு போனதிலிருந்து, ராட்டினம் போல், மேலும் கீழுமாக அவளது உள்ள உணர்வுகள் சுழலத் தொடங்கியிருந்தது. எதிலும் நிலைகொள்ளாமல் தவியாய் தவித்தாள்.

செல்பேசியை கையில் எடுத்தாள். அவள் விரல் நுனி பட்டு, தொடுதிரை ஒளிர்ந்தது. அதில், மணிமாறன் கைகளைக் கட்டிக்கொண்டு  புன்னகைத்தபடி இருந்தான்.  அன்பரசி, கழுத்தை, சற்று லேசாக  திருப்பி,  உற்றுப்பார்த்தாள். அவள் விரல்களால் அந்த பிம்பத்தை தடவத்தடவ, அது நாலாபுறமும் மிதந்துமிதந்து, நடுநிலையடைந்தது.   அன்பரசி பெருமூச்சி விட்டாள்.

அன்பரசிக்கு திருமணமாகி நேற்றோடு முப்பது நாட்கள் முடிந்திருந்தது. அவள் பார்க்க அழகாய் இருந்ததாலும், மேலைநாட்டு நாகரீகம் எனும் பெயரில் உடலோடு ஒட்டிக்கொள்ளும் ஆடைகளைப் போட்டுக்கொண்டு தலைவிரி கோலமாய் சுற்றித் திரியாமல், இந்தக் காலத்திலும் தாவணி, புடவை என்று உடுத்திக்கொண்டிருந்ததாலும் மணிமாறனுக்கு அவளைப் பார்த்ததும் பிடித்துவிட்டது. அவனும்,  கை நிறைய பணம் சம்பாரிக்கும் கட்டிட பொறிஞர் என்பதாலும்,             ‘அமைதியான பையன் ‘ என்று சுற்றத்தாரிடம் பெயரெடுத்து வைத்திருந்ததாலும், அன்பரசியின் அப்பாவிற்கு அவனை பிடித்துப்போய்விட்டது. பெண் பார்க்கும் படலத்தில் மணிமாறனுக்கும் சரி, அன்பரசிக்கும் சரி, முதல் முயற்சியே வெற்றியில் முடிந்தது.

“மாப்ள, அபுதாபியில வேல பார்க்கிறாருங்கிறது உங்களுக்கு தெரியும். கல்யாணம் முடிஞ்சதும், கையோட பொண்ண கூட்டிட்டு போக முடியாது… ஆறேழு மாசமாகும். அதனால… உங்களுக்கு இதுல ஆட்சேபனை ஏதுமில்லைன்னா, சீக்கிரம் ஒரு முகூர்த்தத்தப் பார்த்து, கல்யாணத்த முடிச்சிடலாம்”,  தரகர் அன்று சொன்னபோது….

“என்னங்க… எப்டிங்க இது? கல்யாணமான உடனே, இவள தனியா விட்டுட்டு… அவரு ஒரு எடத்துல.. இவ ஒரு எடத்துலன்னு.. சரியா வருமாங்க?” அன்பரசியின் அம்மா ரகசியமாய் தன் கணவரிடம் கேட்க,

“ எல்லாம் சரியா வரும். நீ பேசி எதையும் சொதப்பி விட்டுடாத. நல்ல வரன். கண்ணமூடிக்கிட்டு ஒத்துக்குவோம்.” என்றார் அவர்.

ஒரு பெண்ணின் மனசு ஒரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பார்கள். அம்மா அப்போது, ஏன் அப்படிச் சொன்னாள் என்று அன்பரசிக்கு இப்போது விளங்கியது.

அன்பரசியின் அருகில் கிடந்த செல்பேசி “ சின்ன சின்ன ஆசை… சிறகடிக்கும் ஆசை…” என்று பாடியதும், துடித்து பிடித்து எடுத்து,

“ என்னங்க… ஹலோ.. கேக்குதுங்களா? எப்டி இருக்கீங்க? “ என்றாள்.

“ நல்லா  இருக்கேன் செல்லம். பன்னி… காலையிலதான பேசனோம். அதுக்குள்ள… பேசி பத்து நாள் ஆனா மாதிரி விசாரிக்கிற… சொல்லுடி… என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” மறுமுனையில் மணிமாறனின் குரல்.

“ ஆமாம்… காலையில பேசினேன்தான். ஆனா… பத்தல. உங்க கிட்ட பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்குங்க… உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு. உங்க கைய பிடிச்சிகிட்டு… “ குரல் கம்மியது.

“ ஏய் … லூசு.. அழறியா? அழாதடி. இன்னும் கொஞ்ச நாளு. உன் பேப்பெர்ஸ்லாம் மூவ் பண்ணிகிட்டுதான் இருக்கேன். கூடிய சீக்கிரம் கூட்டிவந்து… கூடவே வச்சிக்கிட்டு… ம்ம்ம்ம்…. ஏய்.. அன்பு .. அன்பு?”

“ சொல்லுங்க. லைன்லதான் இருக்கேன். நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா… என்னால, உங்கள நெனைக்காம இருக்க முடியல. எனக்கு நீங்க வேணும்… அவ்ளோதான்.”

“நீ ஒன்….னும் சரி இல்ல. அதுவும் உங்க அம்மா ஊருக்கு போனதுல இருந்து, பொலம்பல் ஜாஸ்தியாயிடுச்சி. சரி… தனியா இருந்தா  இப்படித்தான் இருக்கும். ஒன்னு செய்யவா? எங்க அம்மாக்கு போன் பண்ணி… உன்கூட ஒரு வாரம் வந்து தங்கிட்டு போகச் சொல்லவா?”

“ வேணாம். வேணாம். நானு… எங்கூட இருக்கணும்னு ஆசைப்படறது.. உங்களைத்தான். உங்க அம்மாவ இல்ல.”

“ஐயோ… சரி … சரி.. நீ ஏதாவது புத்தகங்கள் படி… காலேஜ் டேஸ்ல, கவித எழுதுவன்னு சொன்னியே… அதுபோல எதாவது எழுது… அன்பு..”

“ம்க்கும் . அதுக்கெல்லாம் இப்போ மூட் இல்ல.”

“சரி.. அந்த கீழ் வீட்டு அருணா இன்னிக்கி வரல?”

“ம்கூம். இன்னும் காணோம். வருவா… “

“சரி நீ சாப்ட்டு வேளையோட படு. காலையில பேசலாம். ஓக்கே?”

“ம்ம்..“

கலங்கியிருந்த கண்களை துடைத்துக்கொண்டாள். அவளைக் கேட்காமலேயே அவள் நினைவுகள், பின்னோக்கி ஓடி ஓரிடத்தில் நின்றது.

கண்மூடி கண் திறப்பதற்குள் அவளது திருமணம் முடிந்திருந்தது. ஒரு அடுக்ககத்தின் மூன்றாவது மாடியில் வீடு பார்த்து, தனிக்குடித்தனம் வைக்கப்பட்டார்கள். மணிமாறன் வெளிநாடு போன பின்பு, அன்பரசிக்கு பாதுகாப்பு இருக்காது என்ற காரணம் சொல்லி பெரியோர்கள் தடுக்க முயற்சித்தபோது, அவர்களை ஏதேதோ சொல்லி சமாளித்து, அன்பரசியிடம் இப்படி சொல்லியிருந்தான், அவன்.

“ ஆறு மாசம் கழிச்சி உன்ன அங்க கூப்டுக்கிறனா… இல்ல நானே இங்க வந்து செட்டில் ஆகிடறேனான்னு தெரியல. ஆனா… இந்த பதினஞ்சு நாளு… செம்மையா வாழணும்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்காகவாது, நாம தனி வீட்ல இருந்தேதான் ஆகணும் “

பதினைத்து நாட்கள் மணிமாறனும் அன்பரசியும் அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தார்கள். இருவரும் ஏறத்தாழ ஒரே அலைவரிசையில் சிந்திக்கக்கூடியவர்களாக இருந்ததாலும், அவர்களுக்குள்ளான புரிந்துணர்வில் எந்த சிக்கலும் எற்படாததாலும், இனிமையாகவே கழிந்தன அந்த தினங்கள்.

புதிதாய் திருமணம் ஆகும் பெரும்பாலானோர்களுக்கு இடையில்  முதல் ஒன்றிரண்டு மாதங்கள், வீண் விவாதங்கள் எதுவும் ஏற்படுவது அரிதுதான். ஆசை அறுவது நாள், மோகம் முப்பது நாள் என்பதற்கிணங்க, ஆசையும் மோகமும்  ஆட்சி செய்யும் அந்த ஆரம்ப காலகட்டத்தில், மன வருத்தங்கள்  வருவதில்லை. அதற்கு பிறகும், அனுசரணையுடனும் புரிந்துணர்வுடனும் வாழும் தம்பதியினரே இல்வாழ்வில் வெற்றிபெறுகிறவர்களாகிறார்கள். உண்மையும் புரிதலும் கொண்ட மணவாழ்க்கை அமைவதென்பது வரம்.

அன்பரசிக்கு அந்த இரண்டு வார வாழ்க்கை வித்தியாசமானதாக இருந்தது. ஆனால்… அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. மணிமாறன், அவள் அருகில் வரும்போதெல்லாம், உள்ளிருந்து கசியும் வெட்கத்தையும் தனக்குள்ளேயே பூக்கும், தயக்கத்தையும் மனதார ரசித்தாள். பெண்மையின் மாறுபட்ட பரிணாமங்களை, மணிமாறனின் காதலால் தனக்குள்ளேயே  உணர்ந்து, அந்த அற்புத தருணங்களுக்காக மறுபடி மறுபடி  ஏங்கித் தவித்தாள். இருபத்தி மூன்று வயது இளமை, இவைகளை அவளுக்குள் செய்யாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

மறுபடியும் “ சின்ன சின்ன ஆசை… சிறகடிக்கும் ஆசை…” பாடியது.

“ஹலோ… சொல்லுங்க…”

“ஒண்ணுமில்ல அன்பு… நீ அழுதுகிட்டே போன் பேசனியா… அதான். மனசு கஷ்டமா இருந்தது. மறுபடி உன்கிட்ட பேசலாமேன்னு…”

“ம்ம்”

“சரி… உனக்கு இப்போ என்ன வேணும் அன்பு?”

“உங்க கேள்வியிலையே அதுக்கான பதில் இருக்குங்க…”

“புரியல “

“ என்ன வேணும்னு கேட்டது… கேள்வி… அன்புங்கிறது பதில். ஆமாங்க. எனக்கு உங்க அன்பு வேணும். உங்க அரவணைப்பு வேணும். உங்கள கட்டி பிடிச்சிக்கணும். உங்க மார்ல சாஞ்சிக்கணும் “

“அன்பு… தோ ..பாரு… எனக்கு மட்டும் ஆச இருக்காதா?  என்ன பண்றது… என்னோட வேல.. நம்ம குடும்பத்துக்கான பணத்தேவ… இதையும் பாக்கணுமில்ல”

“நான் வேணான்னு சொல்லலீங்க. ஆனா…  நாம வாழ வேண்டிய வயசு இதுதாங்க. இந்த வயசுல, நம்முடைய ஆசாபாசங்கள பலிகடாவாக்கிட்டு, பணத்துக்கு பின்னாடி ஓடறதும், நம்மோட உணர்வுகள கசக்கி வீசிட்டு, சொத்துபத்துகள சேக்க நாயா பேயா அலையறதும் அபத்தமானதுன்னு நெனைக்கறேன் நானு. “

“நீ சொல்றது எல்லாம் புரியுது அன்பு… ஆனா… “

‘கீச் கீச்’  என கிளிகள் கூட்டமாய் கத்தியது.

“சரி… யாரோ காலிங்பெல் அடிக்கிறாங்க போல… நீ போய் பாரு அன்பு. நான் காலையில பேசறேன்.”

“அருணாவாதான்  இருக்கும். சரிங்க… வச்சிடறேன்…”

செல்பேசியை வைத்துவிட்டு, கதவை திறந்தாள் அன்பரசி.

சில்லென காற்று அவள் தேகத்தை சிலிர்க்கச் செய்தது. மூன்றாவது மாடியில் அந்தப்பக்கம் அருணா நின்றிந்தாள்.

“என்னக்கா… ஒரு மாதிரி இருக்கீங்க?” தமிழிலக்கியம் இரண்டாமாண்டு படிக்கும் அருணா, கையில் நோட்டு புத்தக சகிதமாய் உள்ளே நுழைந்தபடியே கேட்டாள்.

“அதலாம் ஒண்ணுமில்ல அருணா… சரி ஏன் இன்னிக்கி இவ்ளோ லேட்டு?”

“அய்யோ.. அக்கா.. அத ஏன் கேக்கறீங்க. இன்னிக்கி கிளாஸ்ல.. சாரி ..சாரி… வகுப்புல… “ அருணா தலையில் கைவைக்க,

“அருணா… ‘சாரி’யும் … இங்கிலீஷ் தான். தமிழ் படிக்கறீயே… முடிஞ்சவரைக்கும் ஆங்கிலம் கலக்காம தமிழ்ல பேசுன்னு சொன்னா… முடியல இல்ல உன்னால… சரி நீ சொல்ல வந்தத சொல்லு “ அன்பரசி சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்தாள்.

“ம்ம்… இருங்கக்கா முயற்சி பண்றேன். தர்ட் இயர். முடிகிறதுக்குள்ள.. ஐயோ…  சரி… இத கேளுங்கலாம். இன்னிக்கி குறுந்தொகைல ஒரு பாட்டு நடத்தனாங்கக்கா. வெள்ளி வீதியார்னு ஒரு பெண் புலவர் எழுதனது. செமையா இருந்துது… அதோட அர்த்தம் பாதி பாதிதான் புரிஞ்ச மாதிரி இருந்துதா… அதுக்கு விளக்கம் கேட்டா… என் ப்ரென்ட்ஸ் வித்யாவும் ஸ்டெல்லாவும் ஒன்னுகடக்க ஒன்னு சொல்லி ஓட்டிட்டு இருந்தாங்களா.. அதுலதான் டைம் போனதே தெரியலக்கா. நீங்க படிச்சி பாருங்கலாம்” அருணா புத்தகத்தைப் பிரித்து அந்த பக்கத்தை எடுத்து கொடுத்தாள்.

குறுந்தொகை-27

திணை : பாலை

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால், நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது, என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல், என் மாமைக் கவினே

 வெள்ளி வீதியார்-

 அன்பரசி படித்துமுடித்து நீண்ட பெருமூச்சு விட்டாள்.

“என்னக்கா… உங்களுக்கு முழுசா புரியுதா?” அருணா கேட்டாள்.

“புரியுது. நல்லா… புரியுது.  வெள்ளி வீதியார் ஒரு பெண்ன்னுதான சொன்ன?”

“ஆமாக்கா… அவ்வையார் மாதிரி…”

“ம்ம். அதான்…இப்படி எழுத முடிஞ்சிருக்கு ”

“அக்கா… ரொம்போ நாலா கேக்கறேன் நீங்க ஒரு கவித எழுதி தாங்கலாங்க்கா.” அருணா ஆர்வமாய் கேட்டாள்.

“ எனக்காகத்தான், சங்க காலத்துலேயே,  வெள்ளி வீதியாரே ஒரு பாட்டு எழுதிவச்சிட்டு போயிருக்காங்களே… அப்புறம் நான்வேற என்ன புதுசா எழுத?”

“என்னக்கா சொல்றீங்க? எனக்கு புரியல” அருணா தலையை சொரிந்தபடியே  கேட்க,

“ இப்போலாம் உனக்கு புரியாது அருணா… புரிய வேண்டிய அவசியமும் இல்ல… நீ படி.” என்று சொல்லிவிட்டு, மறுபடி அந்த பாடலை படிக்கத் தொடங்கினாள், அன்பரசி.

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here