சிறுகதைப் போட்டி – 18 : உயிர்ப்பசி உணர்ந்தவர்கள் – சில்வியாமேரி

1991ம் வருஷம் மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஒருநாள்

வழக்கம் போல் அன்றைக்கும் காலையில் முருகேசன் கண் விழிக்கும் போது நீண்ட நேரமாகி விட்டிருந்தது. அவனுடைய அம்மா வீட்டில் இருக்கும் வரைக்கும் இந்தப் பிரச்னை இல்லை. அவள் இரவுகளில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அவனை விழித்திருக்கவே விடமாட்டாள்.

அவன் புத்தகம் படித்துக் கொண்டிருந்தாலும் ஏதாவது எழுதிக் கொண்டிருந்தாலும், ‘போதுண்டா மூடி வச்சுட்டுத் தூங்குடா; நாளைக்குக் காலையில நேரத்தோட எழும்பி வேலைக்குப் போக வேணாமா…..!” என்று சொல்லி விளக்கை அணைத்துத் தூங்கச் செய்து விடுவாள்.

சென்னையில் வேலை கிடைத்து வந்ததும் முருகேசன் முதலில் திருவல்லிக்கேணியில் அறை எடுத்துத்தான் தங்கி இருந்தான். ஆனால் அறைகளின் சுத்தமின்மையும் எப்போதும் அது இரைச்சலாகக் கிடப்பதும் அவனால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது.

அதுவும் விடுமுறை தினமென்றால் மேன்சனே சோப்பு நுரையில் மிதப்பது போல் எப்போதும் யாராவது துணிக்கு சோப்புப் போட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லா அறைகளிலும் போதையும் புகை மண்டலுமாய் இருந்ததை அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

அவனுடைய வேலை ஸ்தலமும் தாம்பரத்தில் இருந்ததால் தினசரி பாதிநேரம் பயணத்திலேயே கழிந்து உடம்பும் சூடேறிப் போனது. அப்போது தான் பேசாமல் தாம்பரத்திலேயே ஏதாவது வீட்டில் ஒரு அறையெடுத்துத் தங்கி விடலாம் என்று முயற்சி செய்தான்.

ஆனால் அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. வீடிருந்து விசாரித்த இடங்களில் எல்லாம் ஒரே குரலில் பேச்சிலர்களுக்கு வீடு குடுக்க மாட்டேனென்று அழிச்சாட்டியம் பண்ணினார்கள். அம்மாவை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டால் ஹோட்டல் உணவிலிருந்தும் விடுதலை கிடைக்குமென்று நினைத்து ஊருக்குப் போய் அம்மாவிடம் சொல்லவும் அவளும் சம்மதித்தாள்.

முடிச்சூர் சாலையில் ஒரு வீடிருப்பதாய் அறிந்து, அம்மாவுடன் தங்கப் போவதாய்ச் சொன்னதும் வீடு குடுக்க சம்மதித்தார்கள். இரண்டே அறைகள். நுழைந்ததும் சமையலறை. அடுத்தது ஒரு சிறிய ஹால். குளியலறையும் கழிவறையும் இரண்டு குடும்பங்களுக்குப் பொதுவாய் வெளியில் இருந்தன. அம்மாவிற்கும் தனக்கும் எதேஷ்டம் என்று குடி வந்து விட்டான்.

ஆனால் அம்மா சென்னைக்கு வந்து மிகச்சில நாட்களே முருகேசனுடன் தங்கி இருந்தாள். ”ஊராடா இது, ஒரு மனுஷ முகம் பார்த்து பேசமுடியுதா? எல்லோரும் கதவடைச்சு உள்ளேயே இருந்துக்கிறாங்க. நான் இன்னும் ஒரே ஒரு மாசத்துக்கு இங்கேயே இருந்தேன்னா எனக்குக் கண்டிப்பாப் பைத்தியம் புடிச்சுடும்…..!” என்று சொல்லிவிட்டு கிராமத்திற்கே திரும்பிப்போய் விட்டாள்.

அவள் போன்பின்பு அவ்வப்போது “எங்க உங்க அம்மாவக் காணல….” என்று ஹவுஸ் ஓனர் விசாரித்துக் கொண்டுதான் இருந்தார். முருகேசனும், “கிராமத்துக்கு போயிருக்காங்க; வந்துடுவாங்க….” என்று கொஞ்சநாள் சமாளித்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அவனால் அந்த காம்பௌண்டிலிருக்கும் யாருக்கும் எதுவும் பிரச்னை இல்லை என்பதாலும் அவன் காலையில் கிளம்பிப் போனால் பெரும்பாலும் இரவு நீண்ட நேரம் கழித்துத்தான் வீடு திரும்புகிறான் என்பதாலும் அவனை வீட்டை காலி பண்ணச் சொல்லாமல் சகித்துக் கொள்ளத் தொடங்கினார்.

முருகேசன் அவசர அவசரமாய்க் குளித்து வேலைக்குக் கிளம்புவதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்தால் ஊரே அமைதியில் உறைந்து கிடந்தது. ஒரு அணக்கமும் இல்லாதது போல் இருந்தது. கடைகள் எல்லாம் மூடிக் கிடந்தன. அவன் வழக்கமாக சாப்பிடும் ஹோட்டலும் மூடிக் கிடந்தது.

சாலையில் வாகனங்கள் கூட அதிகம் இயங்கவில்லை. என்னாயிற்று? எதுவும் பந்த்தா என்று யோசித்தபடி பிரதான சாலைக்கு வந்தால் தெருவெல்லாம் பாட்டில்கள் உடைக்கப்பட்ட கண்ணாடி சில்லுகள், அறுந்த செருப்புகள் மற்றும் என்னன்னவோ பொருட்கள் சிதறிக் கிடந்தன.

முருகேசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஓரிடத்தில் ராஜீவ்காந்தியின் போட்டோவிற்கு மாலை போட்டு ஒரு மரடேபிளின்மேல் வைத்திருந்தார்கள்.

அய்யய்யோ என்று மனதிற்குள் அலறியபடி இன்னும் கொஞ்சதூரம் நடந்தபோது பேப்பர் விற்கும் கடையும் மூடிக் கிடந்தது. ஆனால் கடைக்காரர் மூடிய கடைக்கு முன்னால் உட்கார்ந்து பயந்த முகத்துடன் அன்றைய தினசரிகளை விற்றுக் கொண்டிருந்தார்.

முருகேசனும் ஒரு தினசரியை வாங்கிப் பார்த்த பின்பு தான் அவனுக்கு விஷயம் தெரிந்தது. நேற்று இரவு ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசிவிட்டு இறங்கி வரும்போது அவருக்கு அருகில் போன இலங்கையைச் சேர்ந்தவள் என்று அறியப்படும் தற்கொலைப்படைப் பெண் போராளி  ஒருத்தர் இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில்  ராஜீவ்காந்தி உட்பட இருபது பேர்களுக்கும் மேலானவர்கள் இறந்து போய் விட்டார்கள் என்று.

முருகேசனுக்கு மனதுக்கு மிகவும் துக்கமாக இருந்தது. அறைக்குத் திரும்பிப் போய் விட்டான்.

ரொம்ப நேரத்திற்கு ராஜீவ்காந்தி பற்றியே அவனுடைய மனது அசைபோட்டுக் கொண்டிருந்தது. ரொம்பச் சின்ன வயதிலேயே பிரதமராகி அரசியலில் உற்சாகமாக உழைத்துக் கொண்டிருந்த, இளைஞர்களுக்கெல்லாம் ரோல் மாடலாக விளங்கிய ஒருத்தர் இப்படியா சுக்கல் சுக்கலாகச் சிதறிப் போக வேண்டும் என்று முருகேசனுக்கு மனசு விசனமாக இருந்தது.

ராஜீவ் காந்தி இறந்து போன துக்கத்தையும் மீறிக்கொண்டு, மெதுமெதுவாக முருகேசனின் வயிற்றுக்குள் பசி அலாரம் சத்தங் கொடுக்கத் தொடங்கியது. அவனால் சிறு வயதிலிருந்தே பசி பொறுக்க முடியாது. அன்றைக்குக் காலை, மதியம் இரண்டு வேளையும் எதுவுமே சாப்பிடக் கிடைக்கவில்லை.

அம்மா இருக்கும் வரைக்கும் சமைத்துக் கொண்டிருந்தாள். ஸ்டவ் மற்றும் சமையல் பாத்திரங்கள் இருந்தன. ஆனால் சமைப்பதற்குத் தேவையான மண்ணெண்ணையோ அரிசி காய்கறிகளோ எதுவுமே இல்லை.

பேசாமல் சுருண்டு படுத்துக் கொண்டான். தூக்கமும் வரவில்லை. பசி பொறுக்கவே முடியாது என்றாகி, சைக்கிளை எடுத்துக் கொண்டு சாலையின் பிரதான வீதிகளில் அலைந்து எங்காவது ஏதாவது கடை திறந்திருக்கிறதா என்று தேடிப் பார்த்தான். மண்ணெண்ணை, அரிசி, காய்கறிகள் என்று ஏதாவது கிடைத்தாலும் வாங்கி வந்து சமைத்துக் கொள்ளலாம் என்று அலைந்து பார்த்தான்.

எங்கும் எதுவும் திறந்திருக்கவில்லை. சாலைகளில் அதிக நடமாட்டமும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. மறுபடியும் அறைக்கே திரும்பிப் போய் விட்டான். அவனுக்கு பக்கத்து வீடும் பூட்டிக் கிடந்தது.   அதில் ஒரு மலையாளக் கிறிஸ்துவக் குடும்பம் தங்கி இருந்தது. எங்கு போனர்களோ? ஒருவேளை அவர்களின் சொந்த ஊருக்குப் போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.

மாடிக்குப் போய் ஹவுஸ் ஓனரைப் பார்த்தால் சாப்பிட ஏதாவது கொடுக்க மாட்டாரா என்று யோசித்தான். ஆனால் தயக்கமாகவும் சங்கோஷமாகவும் இருந்தது. பசி அவனுடைய தயக்கத்தையும் சங்கோஷத்தையும் வென்றுவிட மெதுவாய் மாடியேறிப் போனான்.

மாடியில் வீட்டிற்கு முன்னால் விசாலமான முற்றம் ஒன்று இருக்கும். அங்கு தான் எப்போதும் ஹவுஸ் ஓனர் ஈஸிச்சேரில் சாய்ந்தபடி ஏதாவது வாசித்துக் கொண்டோ அல்லது கண்களை மூடித் தூங்கிக் கொண்டோ இருப்பார். மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.

இவனைப் பார்த்ததும் “வாங்க தம்பி; வாங்க. ஆச்சர்யமா இருக்கு….” என்று முருகேசனை வரவேற்று அவருக்கு அருகில் கிடந்த மர ஸ்டூலில் உட்கார வைத்தார்.

அவன் உட்கார்ந்ததும், ”அம்மாவைக் கடைசி வரைக்கும் கூட்டிக்கிட்டே வராம டபாச்சுக்கிட்டு இருக்கிறீங்களே…..” என்றார் அவனிடம் சிரித்தபடி.

” கிராமத்துல கொஞ்சம் வேலை இருக்கு அவங்களுக்கு. லெட்டர் போட்டுருக்கேன். ஹோட்டல் சாப்பாடு வயித்துக்கு ஒத்துக்க மாட்டேங்குதுன்னு. அதனால சீக்கிரமே வந்துடுவாங்க ஸார்.…..” என்று நெளிந்தபடி சமாளித்தான்.

”வராட்டாலும் பரவாயில்லை விடுங்க தம்பி. உங்களப்பத்தி யாரும் பிராது பண்ணல. அதனால நீங்க பாட்டுக்கு இருங்க. கிராமத்துக்காரங்களுக்கு பட்டணம் செட் ஆகாது. அதனால அவங்க அங்கேயே இருக்கட்டும். எனக்கு தண்ணியும் கொஞ்சம் குறைவாத்தான் செலவாகும். என்ன நான் சொல்றது….?” என்று மறுபடியும் ஆர்ப்பாட்டமாய்ச் சிரித்தார்.

”அப்புறம் சொல்லுங்க. என்ன விஷயமா அவ்வளௌதூரம் மாடியேறி வந்துருக்கீங்க…..” என்றார் முருகேசனின் தோளில் பிரியமாய்த் தட்டியபடி.

”பெருசா விஷயமெல்லாம் ஒன்னுமில்ல ஸார்; சும்மா தான் உங்களப் பார்த்துட்டுப் போகலாமின்னு வந்தேன்….” என்றான் மிகவும் சோர்வுடன்.

”அப்படியெல்லாம் விஷயமில்லாம இந்தக் கெழவனப் பார்த்துட்டுப் போக வர மாட்டீங்களே…..!” என்றவர், “லீவு; வெளியிலயும் போக முடியாது. போரடிச்சிருக்கும். சரி, மாடியில ஒரு கிழவன் வெட்டியாத்தான உட்கார்ந்து மோட்டுவளைய வெறிச்சிக்கிட்டு இருப்பான். அவன்கூடப் போய்க் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தால் நேரமாவது போகுமின்னு வந்துருப்பீங்க சரியா….” என்று அவரே கேள்வியும் பதிலுமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்.

இந்திய அரசியலின் ஸ்திரத்தன்மை பற்றி, ராஜீவ்காந்தியின் சிறப்புகள் பற்றி என்று பலவாறு பேசிக் கொண்டிருந்தார். முருகேசனின் மூளைக்குள் எதுவும் ஏறவில்லை. பசி உணர்வு மட்டுமே அவனை அப்போது ஆக்ரமித்திருந்தது. வெறுமனே அவருக்குக் காது கொடுத்துக் கொண்டிருந்தான்.

அவருடைய மகள் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து ஆச்சர்யமாய் முருகேசனைப் பார்த்தபடி, “என்ன ஸார், வீட்டுல தண்ணி எதுவும் வரலையா…..?” என்றாள் சிரித்துக் கொண்டு.

”அதெல்லாம் இல்லைங்களே, தண்ணியெல்லாம் தாராளமா வருது….” என்றான் முருகேசன் அவசரமாய். ”பிரச்னை எதுவும் இல்லைன்னா மாடியேறி வரமாட்டீங்களே….!” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஹவுஸ் ஓனர் அவளிடம், “நீ உள்ள போ….” என்று எரிந்து விழுந்தார்.

”அம்மா உன்ன சாப்பிட வரச் சொன்னா…..” என்று ஹவுஸ் ஓனரிடம் சொல்லியதும், முருகேசனை ஓரக்கண்ணால் பார்த்தபடி வீட்டிற்குள் போய்விட்டாள் அவள்.

”அப்புறம் தம்பி…..” என்று சொல்லியபடி ஈஸிச்சேரிலிருந்து எழும்பிய ஹவுஸ் ஓனர், அங்கு சிதறிக்கிடந்த தினசரிகளை எடுத்து ஒழுங்கு படுத்தி, முருகேசனிடம் கொடுத்தவர், “இதையெல்லாம் வரிவிடாம வாசிச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா பொழுது போயிடும் தம்பி…..” என்று அவனிடம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

முருகேசன் படி இறங்கிப் போகும்போது, “தம்பி ஒரு நிமிஷம்…” என்றார். முருகேசனுக்கும் நம்மை சாப்பிடத்தான் கூப்பிடப் போகிறார் என்ற நப்பாசை துளிர்த்தது.

”சொல்லுங்க ஸார்….” என்று சந்தோஷமாய் அவரை நோக்கித் திரும்பிப் பார்த்தான்.

”ஒன்னுமில்ல தம்பி. பேப்பரப் படிச்சிட்டு மறக்காம நாளைக்கு வந்து திருப்பிக் குடுத்துடுங்க; அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்…..” என்று சொல்லவும் “சரி ஸார்….” என்று சுரத்தில்லாமல் சொல்லியபடி வேகமாய்ப் படி இறங்கி அவனுடைய அறைக்குப் போனான் முருகேசன்.

அவனுடைய இத்தனை வருஷ வாழ்க்கையில் இப்படிப்பட்ட அகோர பசியை முருகேசன் ஒருநாளும் உணர்ந்ததில்லை.

கிராமத்தில் அவனுடையது மிகவும் சாதாரணமான ஏழைக் குடும்பம் தான். முருகேசனின் அம்மா கூடைக்காரியாக ஊருராய்ப் போய் காய்கறிகள் விற்றுத்தான் அவர்கள் ஜீவித்திருந்தார்கள். ஆனாலும் அவள் பட்டினியாய்க் கிடந்தாலும் முருகேசனை பசித்திருக்க ஒருபொழுதும் அனுமதித்ததில்லை.

இப்போது யோசிக்கும் போது அவன் சிறுவயதில் ஒரே ஒருமுறை பசியின் உக்கிரத்தை உணர்ந்தது ஞாபகமிருக்கிறது. அவனுக்கு அப்போது பத்து வயதுக்குள் தான் இருக்கும். அன்றைக்கு ஏதோ விடுமுறை தினம். அவன் பள்ளிக்குப் போகவில்லை.

பள்ளிக்குப் போயிருந்தால் பசியை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் காமராஜர் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தில் பள்ளிப் பிள்ளைகளுக் கெல்லாம் வயிறார உணவு கிடைத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது.

முருகேசனின் அம்மா காலையில் வேலைக்குக் கிளம்பும் போது எப்போதும் போல் ஒரு அலுமினிய தூக்குப் போணியில் கம்மங்சோற்றை அடைத்து அதன்மேல் கானப்பயறு துவையலையும் வைத்து அவனிடம் கொடுத்து வீட்டைப் பூட்டிவிட்டுப் போயிருந்தாள்.

அவன் அதை எடுத்துக் கொண்டு போய் பக்கத்து தெருவில் இருக்கும் அவனுடைய சின்னம்மா வீட்டில் வைத்துக் கொள்வான். அவர்களும் காலையில் காட்டு வேலைக்குக் கிளம்பிப் போகும்போது வீட்டை பூட்டிவிட்டுத்தான் போவார்கள்.

ஆனால் அவர்கள் வீட்டிற்கு முன் கூரை வேய்ந்த தாழ்வாரம் இருக்கும். வெயிலுக்கு நல்ல குளிர்ச்சியாக இருக்கும். மேலும் தாழ்வாரத்தில் இரண்டுபுறமும் திண்ணைகளும் குடிதண்ணீர் பானைகளும் வைத்திருப்பார்கள்.  விடுமுறை தினங்களில் முருகேசன் அக்கம் பக்கத்துப் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டு பகலெல்லாம் அங்குதான் இருப்பான்.

ஒவ்வொருநாளும் அம்மா காலையில் வேலைக்குக் கிளம்பிப் போகும் போது அவனுக்கு மூன்று பைசாவோ அல்லது ஐந்து பைசாவோ கொடுத்துவிட்டுப் போவாள். அவன் அதை வைத்து ஐஸோ, சர்க்கரை மிட்டாயோ அல்லது அவனுக்குப் பிடித்தமான ஏதோவொன்றை வாங்கித் தின்று கொள்வான்.

ஆனால் சம்பவ தினத்தன்று  சில்லறை இல்லை என்றோ அல்லது வேறெதோ காரணத்தாலோ முருகேசனின் அம்மா அவனுக்குப் பைசா எதுவும் தந்துவிட்டுப் போகவில்லை.  அவனும் அம்மாவின் கூடையை பிடுங்கி வைத்துக் கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிப் பார்த்தான். அவள் முருகேசனின் முதுகில் நாலு சாத்துசாத்தி கூடையைப் பிடுங்கிக் கொண்டு வேலைக்குப் போய் விட்டாள்.

முருகேசனும் கொஞ்சநேரம் அழுது பார்த்துவிட்டு அப்புறம் சின்னம்மாவின் வீட்டிற்குப் போய்விட்டான். அங்கு திண்ணையில் படுத்துக் கிடந்த போதுதான் பேரீச்சம் பழம் விற்பவர் பழைய ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம்பழம் என்று கூவிக்கொண்டு வந்தார். அவனுக்கு பேரீச்சம் பழம் சாப்பிட ஆசை வந்தது. காசு கொடுத்துவிட்டுப் போகாத அம்மாவின் மீது கோபம் வந்தது.

திடீரென்று அம்மா அவனுக்கு உணவு கொடுத்துப் போயிருந்த தூக்குப் போகாணி ஞாபகம் வரவே அதை பேரீச்சம் பழ வியாபாரியிடம் போட்டு பழம் வாங்கித் தின்ன முடிவு செய்தான். சாயங்காலம் அம்மா வந்து கேட்டால் ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என்றும் நினைத்துக் கொண்டான்.

அடுத்தநாள் முருகேசன் பள்ளிக்குப் போய்விடுவான் என்பதால் அம்மா இப்போதைக்கு அலுமினியப் போகாணியைத் தேடமாட்டாள். அடுத்தவாரம் விடுமுறையில் தான் உணவை அடைக்கும்போது தேடுவாள். சின்னம்மா வீட்டில் இருக்கும் என்று சொன்னால் அதைப்போய் தேடி எடுத்துவரச் சொல்வாள்.

அங்கில்லை தொலைந்து போய்விட்டது என்று சொல்லிக் கொள்ளலாம். ஒருவேளை அம்மாவிற்கு விஷயம் தெரிந்தாலும் அப்போதைக்கு நாயே பேயே என்று திட்டுவாள். நாலு அடி அடிப்பாள். அவனுடைய இறந்து போன அப்பனைக் கொஞ்ச நேரம் திட்டிப் புலம்பி அழுவாள்.

ஆனால் முருகேசன் இரவு சாப்பிட வரவில்லை யென்றால் அவளே சமாதானமாகி அவனைத் தேடிக் கொண்டுவந்து இழுத்துப்போய் உணவை ஊட்டிவிட்டு தூங்கப் பண்ணி விடுவாள் என்பதால் தூக்குப் போகாணியை விற்றுவிடத் தீர்மானித்தான்.

ஆனால் பாத்திரத்தில் மதிய உணவு இருக்கிறதே, அதை என்ன செய்வது என்று யோசித்தவன், தினம் தினம் கம்மங்கஞ்சி அல்லது கேப்பைக் கூழுதான்…. என்று அம்மாவை மனசுக்குள் திட்டிய்படி, இதை ஒரு நாளைக்குக் குடிக்காவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறதென்று நினைத்துக் கொண்டு சின்னம்மா வீட்டிலிருந்து கொஞ்சம் தூரமாய்ப் போய் மண்ணில் ஆழமாய்க் குழி தோண்டி அதற்குள் உணவைப் போட்டு  அதற்குமேல் மண்ணைப் போட்டு மூடி விட்டான்.

தூக்குப் போகாணியைக் கழுவி பேரீச்சம் பழ வியாபாரியிடம் கொண்டு போய்க் கொடுத்தால், “என்னப்பா, நல்ல பாத்திரத்தக் கொண்டு வந்து குடுக்குற? இதுக்கெல்லாம் பேரீச்சம் பழம் தரமாட்டேன். அப்புறம் உங்க அம்மா என்னைப் பார்த்தால்    திட்டித் தீர்த்துடும்…..” என்றார்.

”இல்லைங்க இது ஓட்டை விழுந்த பழைய பாத்திரந்தான்…..” என்று முருகேசன் சொல்லவும், ’அப்படின்னா பாத்திரத்தை சப்பளிச்சுக் குடு; அப்பத்தான் வாங்குவேன்….’ என்று முரண்டு பிடித்தார்.

’இதென்ன பெரிய ரோதணையாப் போச்சு….’ என்று மனசுக்குள் கறுவிய முருகேசன் கொஞ்சம் தூரமாய்ப் போய் ஒருபெரிய கல்லை எடுத்து பாத்திரத்தின் மீது அடித்து அதை பல கோணங்களில் நெளித்துக் கொண்டுபோய்க் கொடுத்து பேரீச்சம்பழம் வாங்கித் தின்று விட்டான்.

பேரீசம்பழம் செரிக்க எவ்வளவு நேரமாகும்? முருகேசனுக்கு வழக்கமான நேரத்திற்குப் பசிக்கத் தொடங்கியது. ஒருவேளை சாப்பிடவில்லை என்றால் என்னாகிவிடப் போகிறது என்று சின்னம்மா வீட்டுத் திண்ணையில் கவுந்தடித்துப் படுத்துக் கொண்டான் முருகேசன்.

வயிற்றுக்குள் ஊசிக்குத்தல் மாதிரி குத்தத் தொடங்கியது. சின்னம்மா வீட்டில் தண்ணீர் மட்டுமே இருந்தது. தண்ணீர் அதிகம் குடிக்கக் குடிக்க வயிறு வலிப்பது போலிருந்தது. பசி பொறுக்க முடியாது என்ற உணர்வு வந்ததும் முருகேசனுக்கு அழுகை வந்தது.

கிராமத்தில் பெரும்பாலும் சொந்தபந்தங்கள் தான். யாராவது வீட்டிற்குப் போய் நின்று பசிக்கிறது என்று சொன்னால்  கண்டிப்பாக சாப்பிட ஏதாவது கொடுப்பார்கள். ஆனாலும் அப்படிப் போய்க்கேட்க அவனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

காட்டிற்குப் போனால் சாப்பிடப் பச்சையாக ஏதாவது கிடைக்கலாம் என்று பக்கத்திலிருக்கும் காட்டிற்குப் போனான். ஆனால் அது அறுவடையெல்லாம் முடிந்து பயறு, தானியங்கள் எல்லாம் வீட்டிற்குப் போய்விட்ட காலம். தட்டாங்காய், கம்மங்கதிர் எதுவுமே அகப்படவில்லை. அன்றைக்குப் பார்த்து மிதுக்கம் பழம், இலந்தைப் பழம் என்று சாப்பிடக்கூடிய எதுவுமே கண்ணில் படவில்லை.

காட்டில் அலைந்து கொண்டிருந்தவனை காட்டுவேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த குருசாமி பார்த்து, “என்னய்யா, காட்டுல அலைஞ்சிக்கிட்டு இருக்கீங்க…..” என்று கேட்கவும், “சும்மாதான்….” என்று சமாளித்தான் முருகேசன். வேறு வழியில்லாமல் அவனுடனேயே வீட்டிற்குத் திரும்பினான்.

குருசாமி, முருகேசனின் சேக்காளி தான். இருவரும் ஒன்றாகத்தான் சாணி பொறுக்கிக் கொண்டும், வேப்பமுத்து பொறுக்கிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்கள். முருகேசனை விடவும் அவன் கொஞ்சம் பெரிய பையன்.

அவன் தான் பள்ளியில் மத்யானச் சாப்பாடெல்லாம் போடுகிறார்கள் என்று முருகேசனுக்கு ஆசைகாட்டி அழைத்துக் கொண்டு போய் பள்ளியில் சேர்த்துவிட்டான். விடுமுறை தினங்களில் குருசாமி அத்தக்கூலிக்கு காட்டுவேலைகளுக்குப் போய் வருவான்.

குருசாமி முருகேசனை அழைத்துக் கொண்டு அவனுடைய வீட்டிற்குப் போனான்.

“உட்கார்ந்து இருய்யா, முகங்கால் கழுவிட்டு வந்துர்றேன்; அப்புறம் ரெண்டு பேரும் விளையாடப் போகலாம்….” என்று சொல்லி முருகேசனை அவன் வீட்டிற்கு முன்னால் போட்டிருக்கும் கயிற்றுக் கட்டிலில் உட்கார வைத்துவிட்டு வெளியே போனான்.

முருகேசன் கயிற்றுக் கட்டிலில் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தான். எதற்கோ வீட்டிலிருந்து வெளியே வந்த குருசாமியின் அம்மா பார்வதி ”வாங்கய்யா….” என்று அவனை வரவேற்றவள், “வேலை முடிஞ்சு வரும்போதே விளையாடுறதுக்கு உங்களையும் கூட்டிக்கிட்டு வந்துட்டானாக்கும்…..” என்று மகனைக் கடிந்து கொண்டவள், முருகேசனைப் பார்த்து, “என்னய்யா, முகமெல்லாம் வாடிக் கெடக்கு….” என்றாள்.

முருகேசன் “அதெல்லாம் ஒண்ணுமில்ல பார்வதி…..” என்று சமாளிக்க முயலவும், “மத்தியானம் சாப்பிட்டீங்களாய்யா…..?” என்று கேட்டாள்.

முருகேசன் எதுவும் சொல்லாமல் பார்வதியைப் பரிதாபமாகப் பார்க்க, “அய்யய்யோ, ஒரு பச்சை மண்ணு பசியோட இருக்கிறதப் பார்த்தும் ஒண்ணுஞ் செய்ய முடியாத சண்டாளியா நான் ஆயிட்டேனே, சாமிமாருங்க எங்க வீடுகள்ளயெல்லாம் அன்னம் தண்ணிப் புழங்கக் கூடாதே….” என்று அரற்றினாள்.

அப்புறம் என்னவோ நினைத்துக் கொண்டவள், “பரவாயில்ல; பசிக்குப் பாவமில்ல. உள்ள வந்து சாப்பிடுங்கய்யா….” என்று வீட்டிற்குள் அழைத்துப் போய் பாய்விரித்து உட்கார வைத்தாள்.

தண்ணீர் ஊற்றிய வரகரிசிச் சோற்றைத் தண்ணீருடனேயே ஒரு அலுமினிய வட்டிலில் போட்டு, கடித்துக் கொள்ள உரித்த சின்ன வெங்காயமும் கொடுத்தாள். அப்போதைய அகோர பசிக்கு அது தேவாமிர்தமாக இருந்தது. அந்தச் சுவையுடைய உணவை அதற்கப்புறம் முருகேசன் எங்குமே சாப்பிட்டதில்லை.

அந்த சின்னவயது நிகழ்விற்கு அப்புறம் முருகேசன் ஒருநாளும் பசித்துக் கிடந்ததில்லை. ராஜீவ் காந்தியின் மரணம் அவனுக்கு மறுபடியும் அந்த அனுபவத்தைத் தந்ததில் எல்லோரின் மீதும் கோபம் வந்தது. மாலையில் அவனுக்குய் பசி பொறுக்க முடியாமல் ஆகிவிட்டது. முருகேசனுக்கு பசியை சமாளிக்கவே முடியாது என்று தோன்றியது.

சின்ன வயதில் ஏதோஒரு வகுப்பில் அவன் படித்திருந்த ஔவையாரின் வெண்பா ஒன்று அவனுக்கு ஞாபகம் வந்தது. அப்போது அது மனப்பாட செய்யுளாக இருந்ததால் இப்போதும் அப்படியே அவனுடைய ஞாபகத்தில் கிடந்தது. அவனையும் அறியாமல் அந்தச் செய்யுளை முனங்கினான்.

 ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது

ஔவையாருக்கும் பசித்திருந்த அனுபவம் நேர்ந்திருக்கலாம். அதனால் தான் ஒரே ஒருநாள் சாப்பாடு கிடைக்கவில்லை என்று அமைதியாக இரு என்றால் முடியாது என்று அடம்பிடிக்கிறாய். சரி, தாராளமாக உணவு கிடைக்கும் சமயங்களில் இரண்டு நாட்களுக்கான உணவை ஏற்றுக்கொள் என்று சொன்னாலும் அதற்கும் சம்மதிக்க மாட்டேனென்கிறாய். ஒவ்வொரு நாளும் உன்னை நிரப்புவதற்கு நான் எவ்வளவு சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. துன்பங்களையே தருகிற உன்னோடு வாழ்வது ரொம்பவும் கஷ்டம் தான் என்று வயிற்றுடன் சண்டை போடுகிறார்.

ஔவையின் பாடல் ஞாபகம் வரவே முருகேசன் மனசுக்குள் சிரித்துக் கொண்டான்.  தாம்பரம் தாண்டி வண்டலூரின் உட்பகுதிக்குள் போய் மண்ணெண்ணை, அரிசி… என்று ஏதாவது கிடைக்குமா என்று பார்த்து வரலாம் என்று கிளம்பிப் போனான்.

ஆனால் அங்கும் எந்தக் கடையும் திறந்திருக்க வில்லை.

சேரி மாதிரி இருந்த ஓரிடத்தில் ஒரு பெண் மீன் விற்றுக் கொண்டிருந்தாள். பக்கத்தில் ஒரு சிறு பெட்டிக்கடை பாதி திறந்து வைத்து வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. கடையில் கூட்டமாய் சிலர் நின்று ஏதேதோ வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அங்கும் உண்பதற்கான எந்தப் பொருளும் கிடைக்கவில்லை.

’பிரட்டாவது இருக்கா…?’ என்று முருகேசன் கடைக்காரரிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது கடையில் நின்று கொண்டிருந்த ஒருவன் அவனைப் பார்த்ததும் “ஸாப்; என்ன இந்தப் பக்கம்…..?” என்று ஆச்சர்யத்தில் முகம் மலர்ந்து சிரித்தபடி முருகேசனிடம் வந்தான்.

சாதாரண உடையில் இருந்தவனை முருகேசனுக்கு அடையாளம் தெரியவில்லை. உற்றுப் பார்த்தபோது அவன் பல்வீர்சிங். முருகேசன் தங்கி இருக்கும் வீடிருக்கும் தெருவில் கூர்க்காவாக இருக்கிறான்.

முருகேசன் அங்கு குடிபோன புதிதில் ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டின் கதவை யாரோ தட்டவும் போய்த் திறந்தால் காக்கி உடையில் இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

“யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான் முருகேசன் சற்றே எரிச்சலுடன்.

”இந்த ஏரியா கூர்க்கா ஸாப்….” என்றான்.

“உன்னை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லையே….” என்றான் சந்தேகமாய்.

“ஆனால் உங்களை நான் பார்த்துருக்கேன் ஸாப்; நேற்றைக்குக் கூட வேலை முடிந்து நடு ராத்திரியில் வீட்டுக்கு வந்தீர்களே…! அப்படி எல்லாம் அகாலத்தில் வராதீர்கள் ஸாப்; இந்தப்பக்கம் வழிப்பறிகள் சகஜம்….” என்றான்.

முருகேசன் அவனுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தான். சலாம் போட்டு வாங்கிக் கொண்டு போனான். இன்னொருநாள் இரவு வந்து கதவைத் தட்டினான். முருகேசன் என்ன வென்று விசாரித்த போது ’‘நான் டூட்டி மேல இருக்கேன் ஸாப்….” என்றான். “ஓ.கே. சந்தோஷம்….” என்றான் முருகேசன் சிரித்தபடி.

“உங்களுக்கு  டீ வாங்கியாரட்டுமா ஸாப்…..” என்று            அவனுக்கு டீ வேண்டும் என்பதை நாசூக்காக உணர்த்தினான். சில்லரைக் காசைக் கொடுத்து “எனக்கு வேண்டாம்; நீ குடித்துக் கொள்….” என்று அனுப்பி வைத்தான்.

அதற்கப்புறம் அவ்வப்போது வந்து பேசிவிட்டுப் போவான். எப்பவாவது அதிகாலையில் எழுப்பிவிடச் சொன்னால் மறக்காமல் வந்து எழுப்பி விடுவான். சில ஞாயிற்றுக் கிழமைகளில் பல்வீர்சிங் பகலிலும் தெருவில் அலைந்து கொண்டிருப்பதை முருகேசன் பார்த்திருக்கிறான்.

அவன் வீடுவீடாய்ப் போய் கதவுகளைத் தட்டி, “கூர்க்கா ஸாப்….” என்பான். சிலர் உடனேயே காசு கொடுத்து அனுப்புவார்கள். பெரும்பாலானவர்கள் ‘மாசம் பொறந்ததும் வந்து நிக்கனுமா? இன்னொருநாள் வாய்யா….’ என்று நாயை விரட்டுவது போல் விரட்டி அலைக்கழிப்பார்கள்.

இன்னும் சிலரோ ‘போனவாரம் தான வாங்கிட்டுப் போன; அதுக்குள்ள வந்து நிக்கிற…..” என்பார்கள். “அது போன மாசத்துக்கு ஸாப்…..” என்று கூர்க்கா பவ்யமாய் பதில் சொல்லிக் கொண்டிருப்பான்.

கூர்க்கா வந்தாலே அந்தத் தெருவிலிருக்கும் நாய்களெல்லாம் அவனைச் சூழ்ந்து கொள்ளும். அவைகளுக்கு கைநிறைய பிஸ்கட்களை வாங்கிக் கொண்டுவந்து போடுவான். தின்றதும் வாலை ஆட்டிக் கொண்டு அவைகள் கலைந்து செல்லும்.

முருகேசனுக்கு ஆச்சர்யமாக இருக்கும். அவனுக்குக் கிடைக்கிற மிகச் சொற்பமான ஊதியத்தில் நாய்களுக்கும் பிஸ்கட் வாங்கிப் போடுகிறானே என்றிருக்கும். அவனிடமே ஒருமுறை அதைப்பற்றி ஆதங்கப்பட்டபோது, “இருக்கட்டும் ஸாப்; வாயில்லா ஜீவன்கள் பசிக்கு சாப்பிட என்ன செய்யும்?” என்றான்.

“அதோட நாய்கள் தான் ஸாப் எங்களை மாதிரியான கூர்க்காக்களின் தோழன்கள். அவைகளும் எங்களோடு சேர்ந்து ராத்திரி காவலுக்கு அலையுதுங்களே…. எங்காவது ஏதாவது புது நடமாட்டம் இருந்தா குலைத்து எங்களுக்கு உதவி செய்யுதில்ல….” என்று சிரித்தான்.

பக்கத்தில் தான் தன்னுடைய வீடு இருப்பதாகச் சொல்லி முருகேசன் எவ்வளவோ மறுத்த போதும் வற்புறுத்தி அவனுடைய குடிசைக்கு அழைத்துக் கொண்டு போனான் பல்வீர்சிங்.

அவனின் மனைவியிடம் முருகேசனைப் பற்றிச் சொல்லி சீக்கிரம் ரொட்டி தட்டிக் கொடு என்றான். அவர்கள் ஹிந்தியில் பேசிக் கொண்டாலும் ஓரளவிற்கு முருகேசனுக்குப் புரிந்தது. அவளும் உடனே மண்ணெண்ணை அடுப்பைப் பற்ற வைத்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா…..” என்றான் முருகேசன் அவசரமாய்.

“நீங்கள் பசியோட இருக்குறது உங்கக் கண்ணைப் பார்த்தாலே தெரியுது ஸாப்.  எனக்குப் பசியோட மொழி புரியும். ஏன்னா நானும் அதை அனுபவிச்சிருக்கேன். அதனால கூச்சப்படாம சாப்பிடுங்க ஸாப்…..” என்றான்.

ரொட்டியும் உருளைக் கிழங்கு ஸப்சியும் அற்புதமான சுவையுடன் இருந்தன. உணவு வயிற்றுக்குள் இறங்க இறங்க வயிறு சுள்ளென்று பிடித்து இழுத்தது.

சாப்பிட்டுக் கொண்டுடிருக்கும் போது  முருகேசனுக்கு தோன்றியது.

உலகம் இயங்குவதற்கு அடிப்படை கடவுள், இயற்கை, அறிவியல் என்று ஆயிரம் வியாக்கியானங்கள் சொல்லப்பட்டாலும், பல்வீர்சிங், பார்வதி மாதிரியான உயிர்களின் பசியை உணர்ந்தவர்களால் தான் அது இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டதும் முருகேசனுக்குக் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் பொங்கி விட்டது.

Leave a Comment