சிறுகதைப் போட்டி – 11 : வடக்கிருந்தவர் – சோ.சுப்புராஜ் [1]

காளிமுத்து மாமா மனப்பிறழ்வு நோய்க்கு ஆட்பட்டு அதற்கான மருத்துவம் எதையும் ஏற்றுக் கொள்வதற்குப் பிடிவாதமாக மறுத்து செத்துப் போனார். எலக்ட்ரிக் சுடுகாட்டில் எரிந்து பிடி சாம்பலாகி, அதற்கான 16ம் நாள் காரியங்களும் முடிந்து சொந்த பந்தங்கள் அணைவரும் அவரவர்களின் தினப்படி அவசரங்களைத் துரத்திக் கொண்டு கலைந்து போய் விட்டார்கள்.

இந்துமதியும் டெல்லிக்குத் திரும்பிப் போகவேண்டும். ஆனால் அக்காள் பாண்டிச் செல்வியை என்ன செய்வதென்று தான் அவளுக்குப் புரியவில்லை. எப்போதும் அவள் ”அவரு மனசுக்குள்ள என்னவோ ஒரு பெரிய குறையோ, வெளியில சொல்ல முடியாத வலியோ இருந்துருக்கு; கடைசி வரைக்கும் நம்மளால அது என்னன்னு கண்டுபிடிக்கவே முடியலயேடீ! அவர நான் இன்னும் கொஞ்சம் கவனமா பார்த்துருக்கலாமோ…” என்று திரும்பத் திரும்பப் புலம்பிக் கொண்டிருந்தாள்.

இந்துமதிக்கும் மனசுக்குள் அந்தக் குறை நெருடத் தான் செய்தது. மாமா ஏன் அத்தணை பிடிவாதமாக வம்படியாக சாவை நோக்கி தன் நாட்களை நகர்த்திக் கொண்டு போனார்?

இரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஒரு நள்ளிரவில் இந்துமதிக்கு அவளின் அக்காளிடமிருந்து டெலிபோன் வந்தது. ”உங்க மாமா கொஞ்ச நாளாவே என்னவோ  போல இருக்கார்; எனக்கு ரொம்பவும் பயமா இருக்குடி; உடனே இங்க கிளம்பி வர முடியுமா….” அழுது கொண்டே அரையும் குறையுமாகப் பேசினாள்.

இந்துமதி வீட்டிற்குப் போய் இறங்கியதும், அவளைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள் பாண்டிச்செல்வி. மாமாவின் அறையைத் திறந்து உள்ளே போன இந்துமதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அறையில் துர்வாடை நிரம்பிக் கிடந்தது. ஆஜானுபாகுவான மாமா ஒரு நேர் கோட்டைப் போல இளைத்துக் கிடந்தார். கட்டிலில் படுத்தபடி விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவள் “இந்து வந்துருக்கேன் மாமா…” என்றபடி நரம்புகளும் எலும்புகளும் துருத்திக் கொண்டிருந்த அவரின் கையை ஆதரவாய்த் தொட்டாள். அப்படியா என்பது போல் ஒரு பார்வை; அதற்கு மேல் அவரிடம் எந்தச் சலனமும் இல்லை.

இந்துவிற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. மாமா வாஞ்சையும் அன்பும் நிரம்பியவர். அதுவும் இந்துவின் மீது அவருக்கு தனியான பிரியம்; அவருக்குக் குழந்தைகள் இல்லையாதலால் அவளைத் தன் குழந்தையாகவே பாவித்துப் பழகுவார். அவரின் உதாசீனம் இந்துமதியை ரொம்பவும் சங்கடப் படுத்தியது.

“நாலைஞ்சு மாசமாவே இப்படித் தாண்டி இருக்கார்; அந்த ரூமுக்குள்ள போயி அடஞ்சுக்குறார். வேலைக்குப் போறதில்ல; அன்ன ஆகாரம் எதுவும் அதிகம் எடுத்துக்கிறதில்ல; பருக்கைகளை எண்ணி என்ணி சாப்புடுறார். கவுச்சி இல்லாம ஒரு கவளம் கூட சாப்புடாத மனுஷன், இப்ப கவுச்சி வச்சுக் குடுத்தா தட்டை வீசி எறியிறார்.

வீட்டுலயும் கவுச்சி சமைச்சா அந்த வாடை வந்தாலே சமையலறைக்கு ஓடி வந்து பாத்திரத்தை கீழ போட்டு உடைக்கிறார். அதிகம் பேசுறதுமில்ல…  டாக்டர்ட்ட கூப்பிட்டாலும் வர்றதில்ல; டாக்டர் யாரையாச்சும் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தா, ரூமுக்குள்ள போயி தாழ்ப்பாள் போட்டுக்கிட்டு வரவே மாட்டேங்குறார்….” அழத் தொடங்கினாள் அக்காள்.

இந்துமதி ஒரு மனநோய் மருத்துவரை வீட்டிற்கு அழைத்து வந்து தாழ்ப்பாள் போட்ட அறையை உடைத்துக் கொண்டு உள்ளே போனபோது மாமா ஆடை களைந்து அம்மணமாய் நின்றார். அதையும் மீறி அவரை அணுகிய போது டாக்டரிடம் ஒரு வார்த்தை கூட பேச மறுத்துவிட்டார். தூங்குவதற்கு ஊசி போட்டு அவரை ஆம்புலன்ஸில் அள்ளிப் போட்டுக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

மருத்துவ மனையிலும் அவர் எதையும் பேசுவதற்குத் தயாரில்லை. பெரும்பாலும் தூக்கத்திலேயே கிடத்தப் பட்டிருந்தார்; ஏனென்றால் விழித்திருக்கும் போதெல்லாம் தற்கொலைக்கு முயன்றார். மருத்துவரிடம் அவர் ”நான் வாழத் தகுதி யில்லாதவன்; என்னை சாக விடுங்கள்…” என்றே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்துமதிக்கு மாமாவைப் பற்றி நினைக்க நினைக்க அழுகை பொங்கியது. அவளின் வாழ்க்கையின் பல திருப்பங்களுக்கு அவர் தான் வாசலாகவும் வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார். மாமா மட்டும் அக்காளின் புருஷனாக வந்திருக்க வில்லையென்றால் இந்துவின் வாழ்க்கை ஏதோ ஒரு கிராமத்தில் சட்டி பானைகள் கழுவிக் கொண்டிருக்கும் சராசரி கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையாகத்தான் முடிந்து போயிருக்கும்.

இந்துவின் அக்கா பாண்டிச்செல்வி ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிக்கவில்லை. ஏனென்றால் படிப்பறிவில்லாத அவர்களின் கிராமத்து அப்பா அவளை படிக்க விடவில்லை. ஆனால் இந்து இப்போது டெல்லியில் உள்ள மிகப் பிரபலமான மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்.

இதை சாத்தியப் படுத்தியது மாமா தான். இந்துவின் அப்பா அவளின் படிப்பையும் நிறுத்திவிட முயன்ற ஒவ்வொரு கட்டத்திலும் கிராமத்திற்குப் போய் அவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி இந்துவை தொடர்ந்து படிக்க வைத்தார். அதனால் அவரை இந்தக் கோலத்தில் பார்க்கவே நெஞ்சு பதறியது இந்துவிற்கு.

சங்ககாலத்தில் வடக்கிருந்து உயிர்நீத்தல் என்றொரு சமண மரபு புழக்கத்திலிருந்திருக்கிறது. அதன்படி தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ள நினைப்பவர்கள் ஏதாவது நீர்நிலைக்குப் போய் வடக்கு முகமாகத் திரும்பி உட்கார்ந்து கொண்டு எதுவும் சாப்பிடாமலேயே இருந்து உயிரை விட்டு விடுவார்களாம்.

கோப்பெருஞ்சோழன் என்னும் அரசன் அப்படித்தான் உயிர் நீத்ததாக மாமாவே இந்துவிற்குக் கதை சொல்லி இருக்கிறார். அப்படி உயிர்நீத்தலை நியாயப்படுத்தி கோப்பெருஞ்சோழனே எழுதிய புறநானூற்றுப் பாடலையும் அவளுக்குப் பாடிக் காட்டியிருக்கிறார். அந்தப் பாடல்கூட இந்துவின் மனதில் அப்படியே பசுமையாக இன்னும் ஞாபகத்தில்  இருக்கிறது.

செய்குவம் கொல்லோ நல்வினை!எனவே
ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,
செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,
தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே

மாமாவின் தமிழ் உச்சரிப்பு துல்லியமாகவும் இசை லயத்துடனும் இருந்தது. ”இன்ஜினியரிங் படிச்ச உங்களுக்கு எப்படி மாமா இவ்வளவு தமிழார்வம்….?” என்ற அவளின் கேள்விக்கு, பதிலேதும் சொல்லாமல் அவளின் தலையை வருடியபடி மெல்லியதாய் சிரித்தார். கவிதையைச் சொன்னவர் அதன் அர்த்தத்தையும் சொற்களை உடைத்து சொல்லிக் கொடுத்தது இந்துவின் காதுகளுக்குள் அப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here