சிறுகதைப் போட்டி – 11 : வடக்கிருந்தவர் – சோ.சுப்புராஜ் [2]

05,நவம்பர் 1995 ஞாயிறு:

நிறைய பயங்களும் கொஞ்சம் நம்பிக்கையும் சுமந்து மலேசியாவிற்குப் பயணமானேன். முதல் விமானப் பயணம் – அதுவும் வெளிநாட்டிற்கு. விமானம் ஏதோ காரணத்தினால் மிகவும் கால தாமதமாகப் புறப்பட்டது. நடுநிசியா அதிகாலையா என்கிற குழப்பமான 00:30 மணி நேரத்திற்கு விமானம் கோலாலம்யூர் நோக்கிக் பறக்கத் தொடங்கியது.

பெரிய விமானம்; நிறைய காலி இருக்கைகள். அழகழகான விமானப் பணிப்பெண்கள்; ஆனாலும் ரசிக்க முடியாதபடி சந்தோஷமும் பதட்டமுமான ஒரு கலவையான மனநிலை.

அர்த்த ராத்திரியிலும் சைவமா அசைவமா என்று கேட்டு உணவு பரிமாறினார்கள். நான் அசைவம் சாப்பிடுவேன் என்றாலும் வயிறு எதுவும் பிரச்னை பண்ணி விடுமோ என்று பயந்து சைவமே கொடுக்கச் சொன்னேன். மதுவும் வேண்டுமா என்று கேட்டார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டேன். எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் நாளைக்கே உலகம் அழிந்துவிடும் என்பது போல மதுவை வாங்கி வாங்கி குடித்துக் கொண்டிருந்தார். இருளில் மிக நெருக்கத்தில் பஞ்சுப் பொதிகளாகத் மிதந்து கொண்டிருந்த வானம் மிகவும் ரசிக்கும் படி இருந்தது.

06,நவம்பர் 1995  திங்கள்:

அதிகாலை 4:00 மணிக்கு கோலாலம்பூரில் வந்திறங்கினேன். மலேசிய நேரம் 06:30. விளக்குகளால் கோலாலம்பூரே ஒளிர்ந்து கொண்டிருந்தது. உடன் பயணித்தவர்களைப் பின் தொடர்ந்தே போய் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து விட்டேன்.

கைக் கடிகாரத்தை மலேசிய நேரத்திற்கு மாற்றி வைத்துக் கொண்டேன். டாக்ஸிகளும் பார்வையாளர்களும் வரவேற்க வந்திருப்பவர்களுமாய் விமான நிலையம் பரபரப்பாக இருந்தது. வரவேற்க வந்திருப்பவர்களினூடே என் பெயரையோ, கம்பெனியின் பெயரையோ சுமந்து கொண்டு யாராவது தட்டுப் படுகிறார்களா என்று தேடினேன். ஏஜெண்ட் அப்படித் தான் சொல்லியிருந்தார்.

ஆனால் அப்படி யாருமே தட்டுப் படவில்லை. அங்கும் இங்கும் அலைந்து தேடிப் பார்த்தேன். மலேசிய நேரம் 08:30 மணி வரைக் கம்பெனியிலிருந்து என்னை அழைத்துப் போக யாரும் வந்திருக்கவில்லை. மனசுக்குள் பயம் துளிர் விடத் தொடங்கியது.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கும் இங்கும் அலையும் போது விமான நிலையத்தில் காசு போட்டுப் பேசும் டெலிபோன்கள் நிறைய இருப்பதைப் பார்த்திருந்தேன். ஒரு கடையில் பத்து ரிங்கட்டு நோட்டைக் கொடுத்து சில்லறை மாற்றி என்னிடமிருந்த கம்பெனி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரில் இருந்த போன் நம்பருக்குத் தொடர்பு கொண்டேன். ரிங் போய்க் கொண்டிருந்தது. ஆனால் யாரும் எடுப்பதாகவே தெரியவில்லை.

அலுவலக நேரம் இன்னும் தொடங்கி இருக்காது. காத்திருக்கலாமா என்று யோசித்தேன். பதட்டமாகவும் பயமாகவும் இருந்தது. ஒரு டாக்ஸி பிடித்து பங்ஸார் பாருவிலிருந்த அலுவலகத்தில் போய் இறங்கினேன்.

அட்மின் அதிகாரி வெண்டி வாங்; சீனப் பெண். வழுவழுப்பான செழுமையான தொடைகளைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஏர்போர்ட்டுக்கு யாரும் வராததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். உங்களின் இந்திய நண்பர் ஒருவரைத்தான் ரிசீவ் பண்ணுவதற்கு அனுப்பியிருந்தோம் என்றாள்.

அலுவலகத்தில் வேலையில் சேர்வதற்கான பூர்வாங்க பாரங்களைப் பூர்த்தி செய்த பின்பு,  கம்பெனி காரில் ஸிரிபெட்டாலிங் என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தாள்.

எனக்காக கம்பெனி ஏற்பாடு செய்திருந்த அபார்ட்மெண்ட் வானைத் தொட்டுவிடும் வசீகர உயரத்தில் 18வது மாடியில் இருந்தது. விஸ்தாரமான பளபளவென்ற மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு எல்லா வசதிகளுடன் ஃபர்னிஷ் செய்யப் பட்டிருந்தது. ரொம்பவும் பிரமிப்பாகவும் பயமாகவும் சந்தோஷமாகவும் இருந்த்து. மனசுக்குள் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்.

அபார்ட்மெண்ட்டிலிருந்து நடந்து போகும் தூரத்தில் வேலைத்தளம் (Project Site) எண்டா பேரேட் (ENDAH PARADE) என்னும் பெயரில் விஸ்தாரமான பரப்பில் விரிந்து கிடந்தது. ஓட்டுநர் அழைத்துப் போய் அங்கிருந்தவர்களிடம் என்னை அறிமுகப் படுத்திவிட்டு விடை பெற்றுக் கொண்டார்.

அகோரமாய்ப் பசித்தது. காலையிலிருந்து எதுவும் சாப்பிட்டுருக்க வில்லை. சைட்டிலிருப்பவர்களிடம் விசாரித்து – வாயில் நுழையாத அவர்களின் சீனப் பெயர்கள் எதுவும் இன்னும் ஞாபகத்தில் பதியவில்லை –  சாப்பாட்டுக்கடைகள் இருக்கும் பகுதிக்கு வந்தேன்.

பெரும்பாலான கடைகளில் எல்லாம் காலியாகி விட்டிருந்தது. ஒரே ஒரு கடையில் (சீன உணவகம்) சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட என்ன இருக்கிறது என்று ஆங்கிலத்தில் கேட்டேன். ஏதோ புரியாத வார்த்தையில் ஒரு உணவின் பெயரைச் சொல்லி அது மட்டுமே இருக்கிறது  என்றான். சரி கொடு என்று சைகையில் சொல்லி உட்கார்ந்து கொண்டேன்.

வேகவைத்து தோலுரித்துத் தொங்கிக் கொண்டிருந்த கோழி இறைச்சியிலிருந்து கொஞ்சம் வெட்டி எடுத்து சிறு துண்டுகளாக்கி இளம் மஞ்சளாய் இருந்த அரிசிச் சாதத்தில் கலந்து சிவப்பாய் (சாஸ்?) ஏதோ தெளித்து ஸ்பூனும் ஃபோர்க்கும் வைத்துக் கொடுத்தான்.

இறைச்சியில் மசாலா எதுவும் இருக்கவில்லை. குமட்டிக் கொண்டு வந்தது; சாப்பிட்டால் வாந்தி எடுத்து விடுவேனோ என்று மிகவும் பயமாக இருந்தது. சாப்பிடாமல் திரும்பிப் போய் விடலாம் என்று கூட யோசித்தேன். ஆனாலும் பசி அந்த எண்ணத்தை வென்றுவிட, ஒருவழியாய் சாப்பிட்டு விட்டேன். ஒன்றும் ஆகவில்லை. இரவுக்கு ப்ரட்டும் பழங்களும் வாங்கிக் கொண்டு ரூமிற்கு வந்து விட்டேன்.

இரவு நீண்ட நேரத்திற்கு தூக்கமே பிடிக்கவில்லை. மலேசியாவிற்கும் இந்தியாவிற்குமான இரண்டரை மணி நேர வித்தியாசத்தை உடம்பு பழகவில்லை. பலப்பல நினைவுகள்; சிதறும் சிந்தணைகள்…. எல்லாவற்றையும் சமாளித்து இரவு ஒரு மணிக்கு மேல் தான் தூக்கம் வந்து ஒருவாறு தூங்கி விட்டேன்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here