சிறுகதைப் போட்டி – 8 : வடிகால் – ப்ரீத்தி பட்டாபிராமன்

மணிமேகலை கடிகாரத்தைப் பார்த்தாள். இன்னும் முப்பது நிமிடங்களில் கல்லூரி முடிந்துவிடும். நாளை எடுக்க வேண்டிய செய்யுட்களைப் பார்த்துக்கொண்டும், குறிப்புகள் எடுத்துக்கொண்டுமிருந்தாள். அகநானூறில் மூழ்கிப்போனாள். கல்லூரி முடிந்ததைக்குறிக்கும் மணி அடித்தும் படித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று தன் மகனின் எண்ணம் வந்து கிளம்பினாள். கனவுபோல இருக்கிறது.

அவள் தந்தை மாணிக்கவாசகம் தமிழைத்தவமாகக்கருதியவர். ஆனால், அவர் செய்த அலுவலகப்பணி அதற்கு நேரம் தரவில்லை. அவரின் ஒரே மகள் மணிமேகலை. அவள் பிறந்த உடனே, முடிவு செய்துவிட்டார், அவளை தமிழாசிரியை ஆக்கவேண்டும் என்று.

மணிமேகலையின் மூன்றாவது வயதில் அவள் தாய் இறைவனடி சேர்ந்தார். இதற்கு பின்னர், மாணிக்கவாசகம் தமிழும் மணிமேகலையும் தான் வாழ்க்கை என்று இருந்தார்.

ஓய்வு பெற்றவுடன், அவர் செய்த முதல் வேலை, சங்க கால இலக்கிய புத்தகங்களை வாங்கியது தான். தமிழன்னைக்குத் தன்னால் இயன்றதைச் செய்யவேண்டும் எனக்கருதி, கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி பலரை தமிழின்பால் அழைத்தவண்ணம் இருந்தார்.

ஆனால், மணிமேகலையோ முதலில் பிடிக்காமல் தான் தமிழ் படிக்க ஆரம்பித்தாள். தன் தந்தையை மகிழ்ச்சியுற செய்வோம் என்று ஆரம்பித்து, தன் பெயரில் இருக்கும் காப்பியத்தைப் பற்றி கேள்வியுற்று, அதனைப்படித்தாள். விளைவு, சங்க கால இலக்கியங்களின் மீது தீராக்காதல். மாணிக்கவாசகம் எண்ணியதிற்கு ஒருபடி மேலாக, மணிமேகலை சங்க கால இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றாள். தான் நினைத்ததை நடத்தியக்களிப்பிலேயே, அவள் தந்தை அவளுக்குத்திருமணம் செய்வித்தார்.

மணிமேகலையின் கணவர் நாவுக்கரசன், சிறந்த தமிழ் அறிஞர். முனைவர் பட்டம் பெற்று ஒரு கல்லூரியில் தமிழ்த்துறைக்குத் தலைவராகத்திகழ்ந்தார். தான் எண்ணிய வாழ்க்கை அமைந்ததாக அவளும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள். தன் தந்தையை ஒரு கண்ணாகவும், தமிழை இன்னொரு கண்ணெனவும் எண்ணி, தன் கணவனை பாதையாகக்கொண்டு தன் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தாள்.

வாழ்க்கை தமிழ் தமிழ் என்று சென்ற சமயம், புயல் வீசத் தொடங்கியது.

நாவுக்கரசனுக்கு ஏற்கனவே மணமாகி, ஒரு ஆண் மகவும் இருப்பதை அறிந்தனர் தந்தையும் மகளும். அதிர்ந்தனர். அவன் முதல் மனைவிக்கு தமிழ் வராது; தன் வட்டத்திற்கும் அறிவிற்கும் அவள் எட்டவில்லை, எட்டவும் மாட்டாள் என்று கருதினான்; அவனுக்கு சரிசமமாக ஒரு மனைவி வேண்டும் என்று, மணிமேகலையை மணந்ததாகவும், இருவரையும் பார்த்துக்கொள்வதாகக்கூறியதைக்கேட்டு, பதில் சொல்ல முடியாமல் கலங்கினர். தன் மகளின் வாழ்க்கையை தானே பாழாக்கியதை எண்ணி எண்ணி, அத்துயரிலேயே உயிர் நீத்தார் மாணிக்கவாசகம்.

மணிமேகலை தன் மனத்தைக் கல்லாக்கினாள். நாவுக்கரசன் என்று வருகிறானோ வரட்டும் என்று எண்ணி தன் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தாள்.

வாழ்க்கை இலக்கின்றி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது,அவள் இல்லத்திற்கு அருகே, மழலையர் பள்ளி ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு வயது முதல் ஐந்து வயது வரை பல குழந்தைகள் அங்கே வந்து படித்தனர். அவளை அங்கே குழந்தைகளுக்கு தமிழ் பாடல்களை சொல்லித்தருமாறு கேட்டுக்கொண்டனர். முதலில் மறுத்தாலும், இளங்குமரனைப்பார்த்து ஒப்புக்கொண்டாள்.

இளங்குமரன் மூன்று வயது குழந்தை. அவனின் தமிழ் ஆர்வமும், பற்றும் அவளை வியக்க வைத்தன. இச்சிறு வயதிலேயே குறட்பாக்கள் சொல்லும் அளவிற்கு இருந்தது அவனது தமிழ் அறிவு. அவனிடம் பேச பேச, அதிசயித்துப்போனாள். அவனோடு நேரம் கழிக்கவே அப்பள்ளியில் சேர்ந்தாள். அவனின் முகத்தில் தன் சோகத்தை மறந்தாள்.

அவனை அழைத்துப் போக, அவன் தாய் வருவார். அவரிடம் பேசியதில்லையே என்ற ஏக்கம் அவளுக்குண்டு.

ஒரு மாலை வேளை, இருவரும் சந்தித்தனர். “வணக்கம். தாங்கள் தான் இளங்குமரனின் தாயாரோ?”, எனத்தயங்கினாள் மணிமேகலை. “ஆமாம். தாங்கள் தான் மணிமேகலை ஆசிரியையோ?”, என்று கண்களில் மரியாதையோடு வினவினாள் இளங்குமரனின் தாய். தலையசைத்தாள் மணிமேகலை. “தங்களைப் பற்றி இவன் பேசாத நாள் இல்லை! தங்களைப் போன்ற தமிழ்ப்பற்று மிக்கவர்கள் குழந்தைகளுக்கு ஆசிரியர் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி”, என புகழ, மணிமேகலை புன்னகைத்தாள். “இவனுக்குத் தான் ஏற்கனவே தமிழ்ப்பாடல்கள் பல தெரிந்திருக்கிறதே! வீட்டிலேயே ஓர் ஆசிரியர் உள்ள போது, எங்கள் பணி எளிதாகிறது.”, அவள் கூற, “மன்னிக்கவும்! எனக்குத் தமிழ் பற்றி ஒன்றும் தெரியாது. எல்லாம் இவன் தந்தையின் பயிற்சி. அவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்லூரியில் துறைத்தலைவராக உள்ளார்”, என்றாள் சிரித்தாள் அத்தாய்.

நாவுகரசனின் முதல் மனைவி தத்தை என்பதை உணர்ந்த மணிமேகலை, பிரமித்தாள். உலகம் மிகச்சிறியது என நொந்தாள்.அதற்கு மேல் அங்கே நிற்கமாட்டாமல் விடைபெற்றாள்.

தத்தைக்கு அவளின் முகவாட்டம் புரியவில்லை. அங்கிருந்தவர்களை விசாரித்தாள். மணிமேகலை யார் என உணர்ந்தாள்.

தத்தையின் தந்தையும் தமிழ்ப்பற்று மிக்கவர்; ஆனால், அவர் மனைவியோ ஆங்கிலமோகம் பிடித்தவர்.தன் மகளும் தன் கணவரைப்போல் ஆகவேண்டாம் என தத்தையை ஆங்கிலப்பள்ளியில் சேர்த்தார். தத்தையின் பெயரைத்தவிர அவள் வாழ்க்கையில் தமிழின் வாசனையே இல்லை. அதனாலேயே அவள் தந்தை ஒரு தமிழ் பேராசிரியருக்குத்தான் மணம் செய்யவேண்டும் என்று நாவுக்கரசனுக்குத் தத்தையைத் தந்தார்.

தத்தை உணர்ந்தாள், தன் கணவன் தன்னை நேசிக்கவில்லை என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் தெள்ளென தெரிந்தது. மகன் பிறந்தான், கணவன் மனம் மாறுவான் என்று நம்பினாள். ஆனால் இடியென விழுந்தது அவன் இரண்டாம் திருமண செய்தி. மகனுக்காக வாழத்துவங்கினாள்.

மகன் மனம் புண்படாமல் இருக்க, நாவுக்கரசனை வரப்பணித்தாள். அவனும் தன் மகனுக்காக வந்து வந்து அவர்களைச் சந்தித்தான்.

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here