சிறுகதைப் போட்டி – 34 : வள்ளல் – பத்மா [பகுதி 1]

 

அடர்ந்த காடு. அந்த முன்பகல் நேரத்தில் பறவைகளின் ஆர்ப்பரிப்பு அதிகமாக இருந்தது. தூரத்தில் சிங்கங்கள் உறுமும் சத்தமும் நரிகள் ஊளையிடும் சத்தமும் கேட்டது. அங்கிருந்த குளத்தில் ஒரு பக்கம் யானைகள் நீர் அருந்திக் கொண்டிருந்தன. தாமரையும் அல்லியும் போட்டி போட்டு வளர்ந்திருந்த அந்த குளத்தில் சற்று தள்ளி மான்கள் தாகம் தணித்துக்கொண்டிருந்தன. குளத்தை ஒட்டிய புதரில் நெருப்பென தோன்றும் விழிகளோடு புலி ஒன்று அந்த மான்களை வேட்டையாட சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தது. புலியின் இருப்பை உள்ளுணர்வின் சக்தியால் அறிந்த மான்கள் அங்கிருந்து கிளம்ப எத்தனித்து ஓடத் தொடங்கின. மான்கள் தப்ப எண்ணிவிட்டதைக்கண்ட புலி தன் இரையை விட்டுவிட மனமின்றி மான்கூட்டத்தை துரத்த தொடங்கியது.

திடீரென காட்டின் ஓசைக்கு சற்றும் பொருந்தாமல் மனிதனின் கூக்குரல் கேட்டது. “ஓடாதே, நில், நீ எங்கு ஓடினாலும் உன்னை விட மாட்டேன்” என்றபடி தன் முன்னே ஓடியவனை துரத்திக்கொண்டு சென்றான் அவன். அவன் கையில் இருந்த பெரிய வாள் சூரிய வெளிச்சம் பட்டு மின்னியது. அவன் கையில் சிக்கிவிட கூடாதென மான் கூட்டத்தின் நடுவே புகுந்து ஓடினான் துரத்தப்பட்டவன். புலிக்கு பயந்து காற்றை கிழித்து ஓடிக்கொண்டிருந்த மான்களில் ஒன்று துரத்துபவன் மீது முட்டிவிட “அய்யோ” என்று அலறியபடி கீழே விழுந்தான் அவன். அவன் கையிலிருந்த வாள் தெரித்து அருகிலிருந்த சிறு பறவையின் மீது பட்டு டணாங் என ஒலி எழுப்பியது. அவனுடைய கூக்குரல் கேட்டதும் ஓட்டத்தை நிறுத்தி திரும்பி பார்த்தான் முன்னால் ஓடிக்கொண்டிருந்தவன்.

தன்னை துரத்தி வந்தவன் கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவன் “தம்பி” என கத்தியபடி அவனை நோக்கி விரைந்தான். அருகில் வந்து இன்னும் எழாமல் தரையில் விழுந்து கிடந்த அவன் தலையை தன் மடியில் எடுத்து வைத்துக்கொண்டான். “தம்பி, என்னாயிற்று” என பதற்றத்துடன் அவனை நோக்க, அவன் மூர்ச்சையடைந்திருப்பதை உணர்ந்தான். அவன் தலையை எடுத்து கீழே வைத்துவிட்டு தன்னை துரத்தியவனின் மூர்ச்சை தெளிவிக்க தண்ணீர் எடுத்து வர ஓடினான். தன் அங்கவஸ்திரத்தை நீரில் முக்கி எடுத்துக்கொண்டு வந்து மூர்ச்சை அடைந்திருந்தவன் முகத்தில் நீரை பிழிந்தான். ஈரத்துணியினால் அவன் முகத்தை துடைத்து விட்டான். அருகில் இருந்த காட்டு மரந்தின் பெரிய இலையை கொண்டுவந்து விசிறி விட்டான். ஈரமுகத்தில் காற்று பட்டதும் அவன் விழிகள் அசைந்தன. அவனிடம் அசைவை கண்டதும் திரும்ப குளத்திற்கு சென்று அங்கவஸ்திரத்தை நனைத்து கொண்டு வந்தான். “தம்பி, சிறிது நீர் அருந்து” என்றபடி அவன் வாயில் அங்கவஸ்திரத்தை பிழிந்தான். வாயில் சிந்திய நீரை சிறிது அருந்தியவுடன் சுயநினைவிற்கு வந்த அவன் ஒரு நொடி கண் மூடி நிகழ்ந்ததை நினைவுபடுத்தி கொண்டான். மான் தன்னை மோதி கடந்த வேகத்தில் கீழே விழுந்து விட்ட தன் மேல் ஏறி கடந்ததும், குழம்பால் தன் மார்பில் மிதித்த வேகத்தில் தான் சுயநினைவு இழந்ததையும் நினைவுக்கு கொண்டுவந்தான். ‘அப்படியாயின், அவன் தப்பி விட்டானா. பொல்லாத மான். அதனால் என் எண்ணம் தப்பிவிட்டதே’ என எண்ணிய படி கண்களை திறந்தவன் அந்த முகத்தை கண்டதும் “ஆஹா, அந்த பொல்லாத மான் செய்த காரியத்தால் நீ தப்பி விட்டாயோ என்று பயந்து விட்டேன். அந்த மான் எனக்கு நன்மையே செய்துள்ளது. தப்பி செல்ல முயன்ற உன்னை என் கைகளில் பிடித்து கொடுத்திருக்கிறது” என்றபடி அவனை பிடித்து கொண்டான்.

பிடிபட்டவன் தப்பிக்க முயலவில்லை. “தம்பி, நாம் இருவரும் சகோதரர்கள். என் மேல் உனக்கு ஏன் இவ்வளவு கொலைவெறி. என்ன தான் வேண்டும் உனக்கு, கேள், தருகிறேன்” என்றான் தன்னை துரத்தியவனை நோக்கி “என்ன வேண்டுமா, உன் உயிர் தான் வேண்டும். கொடுத்து விடுகிறாயா” என்றவன் ஏதோ நினைவு வந்தவனாய் “வாள், என் வாள் எங்கே” என கண்களை சுழற்றி தேடினான். “அங்கே இருக்கிறாயா, இதோ, உன் மரணத்தின் தூதுவனை கொண்டு வருகிறேன்” என்ற படி அந்த வாளை நோக்கி ஓடினான். அதற்குள் துரத்தப்பட்டவன் தப்பி ஓட எத்தனித்தான். “குமணா, தப்பி ஓடவா பார்க்கிறாய். இதோ, நான் உன்னை நெருங்கி விட்டேன். உன் அந்திம காலமும் உன்னை நெருங்கிவிட்டது” என்றபடி வாளை உயர்த்தி முழு பலத்துடன் சுழற்றினான். குமணன் என்று துரத்தியவனால் விளிக்கப்பட்டவனின் தலை மேலே பறந்து அங்கிருந்த குளத்தில் விழுந்தது. தலையை இழந்த உடல் ஓடிய வேகத்தில் இன்னும் இரண்டு தப்படிகள் ஓடி தடாரென கீழே விழுந்தது. துரத்தியவன் வாளை எரிந்து விட்டு “ஐயோ அண்ணா, உன்னை நானே கொன்றுவிட்டேனே” என கதறினான். எதேச்சையாக அவன் முகம் நீரை காண, நீரில் கண்ட தன் பிம்பத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியடித்து எழுந்தான் இளங்குமணன்.

இளங்குமணன் உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தது. கனவின் அதிர்ச்சியிலிருந்து அவன் மீள முடியாமல் கைகளை நீட்டி அருகிலிருந்த குடுவையை எடுத்து நீர் அருந்தினான். வெளியில் ஒன்றிரண்டு பறவைகளின் சத்தம் கேட்டது. தூரத்தில் சேவல் கூவும் ஒலி காதில் விழ பதறினான். ‘விடியும் நேரத்தில் கெட்ட கனா கண்டால் பலிக்குமே’ என எண்ணியவனின் உடல் நடுங்கியது. தூங்க எத்தனித்து தோற்று புரண்டு கொண்டேயிருந்தான். இவனது வேதனையை காண ஆதவனும் வந்தான்.