சிறுகதைப் போட்டி – 34 : வள்ளல் – பத்மா [பகுதி 2]

<< வள்ளல் – பகுதி 1

வள்ளல் – பகுதி 3 >> 

தப்பி ஓடிய காலம்பன் அச்சத்தில் ஆழ்ந்திருந்தான். கையில் வெட்டுபட்ட இடத்திலிருந்து உதிரம் வழிந்துகொண்டிருந்தது. மனதில் பதட்டம் அதிகமானது. இளங்குமணனின் தோழனாகிலும் குமணன் அவனை சமீபத்தில் கண்டதில்லை. ‘தான் சேனாதிபதியின் மகன் என தெரிந்தால் தந்தையின் பதவியும் பறி போகும். தனக்கும் தண்டனை கிடைக்கும்’  இவ்வாறெல்லாம் எண்ணி கலங்கி கொண்டிருந்த அவன் மனம் அதிலிருந்து விடுபட மார்க்கம் தேடியது. மனிதர்களின் இயல்பு அந்த நாளிலிருந்து இன்று வரை தான் தப்பிக்கும் மார்க்கம் பற்றியே முதலில் யோசிக்கும். தன் தவறு உணர்ந்து திருந்தும் மார்க்கம் தேடுவோர் சிலரே. காலம்பனும் அதற்கு விதிவிலக்கல்ல. தான் செய்த தவறை உணராது தான் தப்பிக்க என்ன வழி என்றே யோசித்தான். ‘குமணனுக்கு தன் தம்பி மேலான பாசம் ஊரறிந்தது. இளங்குமணன் மனதில் குமணனை பற்றி தவறான எண்ணத்தை உருவாக்கி அவர்கள் இருவரையும் பிரித்து நானும் தண்டனையிலிருந்து தப்புவேன், குமணனையும் பழி வாங்குவேன்’ என மனதிற்குள் சபதமிட்டான்.

அந்த சித்திரை மாதத்தில் உச்சி வெயில் நேரத்தில் அந்த கிழவர் வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவர் இல்லம் போலவே அங்கிருந்த விளைநிலங்களும் வெறுமையாக இருந்தது. அழுதழுது வரண்ட அவர் கண்கள் போல நிலங்கள் வரண்டு இருந்தன. சுற்றி சுழலும் காற்றின் ஒலியால் அவர் காதுகளில் கேட்டுக்கொண்டிருந்த அவர் மனைவியின் கதறலை குறைக்க முடியவில்லை. “இன்று மாலைக்குள் உணவுப்பொருள் வாங்க சில செப்புக்காசுகளாவது கிடைக்காவிட்டால் நான் என் குழந்தையோடு ஊர் எல்லையில் உள்ள குன்றின் மேலிருந்து குதித்து விடுவேன். இது நம் குழந்தை மேல் ஆணை” விடாது காதுக்குள் ஒலித்தது மனைவியின் குரல்.

‘பொருள் சேர்க்க தம்மை போன்ற புலவர்க்கு ஏதேனும் அரசனை பாடி இரப்பதை விட வேறு என்ன வழி இருக்க முடியும். குமணனை யாவரும் வள்ளல் என்கிறார்களே. சென்று யாசித்து பார்க்கலாம். நம் குறை தீருகிறதா என பார்க்கலாம்’ எண்ணி கொண்டே நடந்தார் அவர்.

வழியில் ஊர்வலம் ஒன்று எதிரில் வந்து கொண்டிருந்ததைக்கண்டு சாலையின் ஓரமாக ஒதுங்கினார். வந்த ஊர்வலத்தில் இருப்பவர்கள் யாரென அறிய ஆவல் கொண்டார். அவர்களின் தோற்றம் கண்டு அவர்களும் புலவர்களாக இருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டார். அவர்கள் வந்த திசையை வைத்து அவர்கள் முதிர மலையிலிருந்து வந்திருக்கக்கூடும் எனவும் குமணனை சந்தித்து வந்திருக்கலாம் என்றும் தீர்மானித்தார். அவர்கள் கையில் சில குடங்களும் இருந்தன. இரண்டு குதிரைகளும் இருந்தன.

வந்த புலவர் கூட்டம் அங்கிருந்த ஒரு அரச மரத்தின் கீழ் ஒதுங்கி மதிய உணவு உண்ண ஆயத்தமானது. கிழவர் கிளம்பலாமா என எண்ணி பின் அந்த புலவர் கூட்டம் உணவருந்தியதும் அவர்களிடம் குமணனை பற்றி தான் கேள்விப்பட்டதை உறுதி படுத்தலாம் என தீர்மானித்து அங்கிருந்த ஒரு கல்லின் மேல் அமர்ந்தார்.

புலவர் கூட்டத்தில் நடுநாயகமாக வந்தவர் அவர் மனைவியிடம் பேசியது அரசல்புரசலாக கிழவர் காதில் விழுந்தது. கிழவர் அந்த தம்பதிகளின் பேச்சை கவனிக்க விருப்பமில்லாமலும் காதில் விழும் வார்த்தைகளை தவிர்க்க முடியாமலும் நின்றிருந்தார்.

அவர்கள் உணவருந்தி முடித்ததும் அவர்கள் அருகில் சென்று நின்றார். இவரது வாடிய முகமும் கிழிந்த ஆடைகளும் அவரை ஒரு இரவலர் என எண்ணும்படி இருந்தது. அவரைக்கண்டதும் அங்கு நடுவில் அமர்ந்திருந்த, புலவர் போன்று தோற்றமளித்தவர் எழுந்து அருகில் வந்தார். அதற்குள் அவர் மனைவி மந்தார இலையில் உணவு கொண்டுவந்து கிழவரிடம் தந்து “தங்களை பார்த்தால் மிகவும் களைப்புற்றவராக தெரிகிறது. முதலில் உணவருந்துங்கள் ஐயா. பின்னர் நீங்கள் யாரென்று தெரிவிக்கலாம்” என்றாள். “ஆஹா. காலையில் நான் கூறிய வார்த்தைகளை மதியமே கடைபிடிக்க தொடங்கிவிட்டாயே. அருமை” என்றார் புலவர். “ஆம் ஐயனே. தாங்கள் கூறிய பாடல் என் மனதை விட்டு அகலவே இல்லை. பாடியே காட்டுகிறேன், கேளுங்கள் ஐயனே” என்றபடி பாட தொடங்கினாள்.

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,

பன் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,

கடும்பின் கடும் பசி தீர யாழ நின்

நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும்,

இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,

வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி, மனை கிழவோயே,

பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்து வேல் குமணன், நல்கிய வளனே.

உணவுண்ண அமர்ந்த கிழவர் இந்த பாடலை கேட்டார். அவள் பாடிய இசையில் செவி மகிழ்ந்தாலும், எழுத்தறிந்த புலவராதலால், உள்ளம் பாடலின் பொருளை பின்பற்றி சென்றது. குயிலையொத்த குரலில் முழு பாடலையும் பாடி முடித்த பின் கிழவர் ஒரு முறை அந்த பாடலின் பொருளை மனதிற்குள் தொகுத்து பார்த்தார்.

‘உன்னை விரும்பி வாழ்பவர்களுக்கும், நீ விரும்பி வாழ்பவர்களுக்கும், பல சிறந்த கற்புடைய உன்னுடைய சுற்றத்தாருள் மூதோர்க்கும், உறவினர்களின் கொடிய பசி தீர உனக்குக் கடன் தந்தவர்களுக்கும், யாரென்று நினையாது, என்னோடும் கலந்து ஆலோசிக்காமல், நாம் சிறப்பாக வாழலாம் என்றும் எண்ணாது, நீயும் எல்லோருக்கும் கொடுப்பாயாக, பழங்கள் தொங்கும் முதிர மலைக்குத் தலைவனான, திருந்திய வேலையுடைய குமணன் கொடுத்த செல்வத்தை’