சிறுகதைப் போட்டி – 34 : வள்ளல் – பத்மா [பகுதி 3]

<< வள்ளல் – பகுதி 2

அரண்மனை பரபரப்பாக இருந்தது. முரச நாட்டின் மூத்த சேனாதிபதி தன் பதவியில் இருந்து விலக எண்ணி குமணனிடம் அது குறித்து பேசியிருந்தார். அவர் விலகல் குறித்தும் அடுத்து அவர் இடத்திற்கு வருபவர் குறித்தும் இன்று முடிவாகவேண்டியிருந்தது. குமணன் அரசவைக்கு வந்துவிட்டான். தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்த குமணன் “வரவேண்டியவர் அனைவரும் வந்து விட்டனரா” என கம்பீரமாக கேட்டான். மந்திரி வேம்பன் எழுந்து “அரசே, அனைவரும் வந்து விட்டனர், ஒருவரை தவிர. தங்கள் இளவல் இளங்குமணன் இன்னும் வந்து சேரவில்லை” என்றார். சிறிது யோசித்த குமணன் “அவனை அழைத்து வர ஆள் அனுப்புங்கள். நாம் சபையை தொடங்குவோம். என் முடிவை மீறி அவன் என்ன சொல்லிவிட போகிறான்” என்றான் தம்பி மேல் உள்ள அன்பினாலும் நம்பிக்கையினாலும்.

“நாம் இன்று இங்கே கூடிய நோக்கம் உங்களுக்கு தெரிந்திருக்கும். நமது சேனாதிபதி வயது முதிர்வின் காரணமாக அந்த பதவியில் விலக விரும்புகிறார். அவரது சேவையை நானும் நாடும் போற்றி வணங்கி அவர் ஆசி வேண்டுகிறது” என்ற குமணன் தன் இருக்கையில் இருந்து எழுந்து சேனாதிபதியின் பாதத்தில் தன் வாளை வைத்து தன் சிரத்தை அந்த வாளின் மீது வைத்து வணங்கினான். “குமணா. உன் வீரத்தாலும், தர்ம சிந்தனையினாலும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உன் பெயர் வரலாற்றில் நிலைபெரும். நூறாண்டு வாழ்ந்து மக்களுக்கு நல் வழிகாட்டியாக இருப்பாயாக” என வாழ்த்தினார் சேனாதிபதி. எழுந்த குமணன் தன் இருப்பிடம் திரும்பினான். பின் அவையினர் அனைவரையும் சுற்றி பார்த்தான். “நம் சேனாதிபதியின் இடத்திற்கு யாரை நியமிக்கலாம். தங்கள் கருத்து என்ன” என்றான். மந்திரி வேம்பன் இளங்குமணன் பேரைக்கூற அவையினர் யாவரும் அதை வழி மொழிந்தனர். குமணன் சேனாதிபதியின் முகத்தை பார்த்தான். அவர் முகத்தில் அதிருப்தி தெரிந்தது. “தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் சேனாதிபதி” என்று குமணன் கூற “இளங்குமணன் நல்ல வீரன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் அவன் அப்பாவி. எடுப்பார் கைப்பிள்ளை. யார் எது சொன்னாலும் நம்பும் வெகுளி. இன்னும் பக்குவம் கைவரவில்லை” என்றார். தலை அசைத்து அவர் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்ட குமணன் “எனில், தங்களின் தேர்வு யார்” என்றான். “சால்வன். வீரத்தோடு தந்தையை போலவே மதியூகமும் நிறைந்தவன். இவனே எனது தேர்வு. எனினும் தாங்கள் தங்கள் இளவலை தேர்வு செய்வது தங்கள் விருப்பம்” என்றார் சேனாதிபதி. “ஆஹா, சரியான தேர்வு” என புகழ்ந்த குமணன் “தெளிவான காரணங்களுடன் சால்வன் இந்த பதவியை பெற தகுதியானவன் என எடுத்து சொல்லிவிட்டார் சேனாதிபதி. இதில் தங்கள் யாருக்காவது ஆட்சேபனை உண்டோ” என்று கூறி அவையினரை பார்த்தான் குமணன். அனைவரும் ஒருமனதாக ஒத்துக்கொள்ளவும் “சால்வன். வா, வந்து சேனாதிபதியின் வாளை பெற்றுக்கொண்டு அவர் பதவியினை ஏற்றுக்கொள்” என்றான். சால்வன் எழுந்து வந்து வாளை இரு கைகளையும் நீட்டி பெற்றுக்கொண்டான்.

சரியாக அந்நேரம் உள்ளே நுழைந்த இளங்குமணன் அதிர்ந்து நின்றான். தனக்கு தான் அடுத்த சேனாதிபதி பதவி கிடைக்கும் என நம்பி, பதவி கிட்டியதும் தாமரையை பார்க்க செல்லலாம் என ஆசையுடன் பார்த்துப்பார்த்து ஆடை அணிகலன்கள் அணிந்து உற்சாகமாக உள்நுழைந்தவன் கண்ணில் சால்வன் பதவியேற்பது பட்டதும் காலம்பன் சொன்னது சரி என்ற முடிவுக்கு வந்தான். தன் அண்ணன் தன்னை விட்டு இன்னொருவனை முன்னிருத்துவது அவனுள் ஆத்திரத்தை வரவழைத்தது. காலம்பன் நட்ட விதை துளிர்த்து வெகு சீக்கிரத்தில் மரமாக வளர்ந்து நின்றது. ஆத்திரத்தில் அறிவிழந்தான். “நிறுத்துங்கள்” என கூச்சல் எழுப்பிய படி வேகமாக நடந்து குனிந்த நிலையில் வாளை இருகைகளால் வாங்கிய படி இருந்த சால்வன் முதுகில் எட்டி உதைத்தான். அவையில் இவ்வாறாக அவமரியாதையாக நடப்பதைக்கண்டு குமணன் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தான். சரேலென தன் வாளை உருவியவன் இளங்குமணனை நோக்கி வாளை ஓங்கினான்.  “சபாஷ். உண்மை இன்று வெளிப்பட்டது. நான் கேள்விப்பட்டது உண்மை தான் போலும். தாங்கள் எனக்கெதிராக சதி செய்கிறீர்கள் என கேள்விப்பட்டேன். ஆனால் தாங்கள் என்னை கொல்லும் எண்ணம் கொண்டுள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்ள இன்று தான் சந்தர்ப்பம் கிட்டியது. ஏன் நிறுத்தி விட்டீர்கள். கேட்பவர்களுக்கு கேட்டதை எல்லாம் கொடுக்கும் தாங்கள் எனக்கு மரணத்தை பரிசிலாக்க துணித்துவிட்டீர்கள். ம்ம்ம்ம். நடத்துங்கள்” என ஆத்திரத்தில் அறிவிழந்து கூச்சலிட்டான்.

கேட்டுக்கொண்டிருந்த குமணன் அதிர்ந்து நின்றான். “தம்பி, நீ என் உயிர். நீ பிறந்தது முதல் உன்னை உயிராக எண்ணி வளர்த்து வருகிறேன். நான் ஏன் உன்னை கொல்ல போகிறேன். அவையில் நீ அவமரியாதையாக நடந்ததால் உன்னை எச்சரிக்க வாள் ஓங்கினேன். அதற்காக உன்னை கொன்று விடுவேன் என நினைப்பதா? சால்வனை தெரிவு செய்தது அவை, நான் அல்ல” என அவனை சமாதானப்படுத்த முயன்றார். “ஓஹ், எனக்கும் அனைவருக்கும் உண்மை தெரிந்து விட்டதால் சமாதானம் பேசுகிறீரோ. இனியும் ஏமாற தயாராக இல்லை இந்த இளங்குமணன்” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் குமணன். “இப்பொழுது உனக்கு என்ன வேண்டும். நிதானமாக கேள்” என்று குமணன் கேட்க நாவில் நின்று ஆடிய விதி சொல்லியபடி “உங்கள் பதவி தான் வேண்டும் எனக்கு. தர இயலுமா தங்களால்” என்றான் இளங்குமணன். சற்று யோசித்த குமணன் “ஏன் இயலாது? நீ என் தம்பி. இந்த நாட்டின் மேல் உனக்கும் உரிமை உண்டு. இதோ. இந்த கணம் முதல் நீயே மன்னன். போதுமா” என்றான். அவை திகைத்து நிற்க இன்னும் பேசினான் இளங்குமணன். “போதாது. தாங்கள் இங்கு உள்ளவரையில் எனக்கான முக்கியத்துவம் கிடைக்காது. எனவே தாங்கள் இந்த நாட்டை விட்டு நீங்க வேண்டும்” என அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தான். அதற்குள் இங்கு நடைபெறுவதை சேடி பெண்கள் மூலம் அறிந்து இருவரையும் சமாதானம் செய்யும் எண்ணத்துடன் அரசவைக்கு வந்த எழிலி இளங்குமணன் குமணனை நாட்டை விட்டு நீங்க சொன்னது கேட்டு உறைந்து நின்றாள். அவளை கண்டுவிட்ட குமணன் அவளருகில் வந்தான். தன் வலக்கையை நீட்டினான், அவனின் நீட்டிய கரங்களுக்குள் தன் கரத்தை வைத்தாள் எழிலி. அழுத்தமாக அவள் கரத்தை பற்றிய படி வெளியேற தொடங்கினான் குமணன். கண்ணீருடன் அவனுடன் நடந்தாள் எழிலி. சபையினர் நடப்பது கண்டு கல்லாய் உறைந்து நின்றனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here