சிறுகதைப் போட்டி – 20 : வண்ண வண்ணக் குடைகள் – அகில்

விண்ணைத் தொட முயலும் மலைகள். விண்ணிலிருந்து கீழே வீழும் அருவிகள். வெள்ளியம் நாட்டில்  பச்சைப்பசேல் என மரங்களும் செடிகளும் கொடிகளும் சூரியன்  எட்டிப் பார்க்க இயலாத அடர்ந்த காடுகளும் மலை முழுவதும் நிறைந்திருந்தது. இனிப்பைத் தேடி வரும் எறும்பைப்போல   ஆய் எயினன்  என்னும் இந்த இனியவனைத் தேடி இரவலர் வரும்  நாட்டின் எல்லை சிறியது என்றாலும் பேரரசனை விட புகழ் மிக்கவன். முருகனைப் போன்ற அழகு வாய்ந்தவன். சூரபதுமனை அழித்த முருகனைப் போன்றே  வீரத்திலும் தீரத்திலும் சிறந்தவன்.

முழங்கால்  வரை நீண்ட கைகளை உடையவன். வாரி வாரி வழங்கியதால் சிவந்த கைகளை உடையவன்.  அகந்தை அற்ற அருளாளன்.

நடு இரவிலும் தன்னை  நாடி வரும் இரவலருக்கு யானைகளையே பரிசாக வழங்கக் கூடியவன். பெண்களுக்கு பொன்னும்  மணியும் அணிகலன்களையும்  தருபவன்.

முருகனைப் போன்ற அழகு வாய்ந்தவன்  என்பதால் கட்டழகன்  அன்புக்கு ஏங்காத  கன்னியரும்  இல்லை. பாட்டாலும் நாட்டியத்தாலும் அழகாலும் அறிவாலும் நளினப் பேச்சாலும் இவ்வுலகில் ஆண்களின் மனத்தைக்  கொள்ளை கொண்டவர்கள்  பலர். ஆனால் பூங்குழலி…..

ரங்களும் நடுங்கும் குளிர்காலம். மனிதர்கள் தங்கள் வீட்டிற்குள்  பாதுகாப்பாய் அடைந்து கொள்கிறார்கள். ஆடு மாடுகளைக் கூட பாதுகாக்க அவற்றை மேய்ப்போர் உள்ளனர். ஆனால் மரப்பொந்துகளிலும், கிளைகளிலும் வாழும் பறவைகள் குளிரால் நடுங்கின. பறவைகள் இரை தேட முடியாத    மழைக் காலத்திலும்  உணவளிப்பவள் பூங்குழலி. பல வண்ணப் பறவைகளுக்கு, பலஇனப் பறவைகளுக்கு அடைக்கலம் தருபவள். கோலூன்றி நடக்கும் வயதான தன் தாத்தா பாட்டியுடன் ஓலைக் குடிசையில் இருந்தாள்.

பூங்குழலி  மாந்தளிர் போன்றவள். நீண்ட கண்கள் .மெல்லிய உறுதியான கைகள். நீண்ட கூந்தல். மெலிந்த இடை அல்குலையும் உடைய சிலை போன்றவள். பூங்குழலி மென்மையானவள். தன்னைக் காத்துக் கொள்ளும் வீரமும் தீரமும் மிக்கவள்.

நாட்டுவளம் காண வந்த எயினன் இந்த  மானைக்  கண்டான். அவளின் செயல் கண்டான். நாட்டு மக்களைக்  காக்கும் தன்னை விட வாய் பேச  முடியாத உயிர்களான பறவைகளைக் காக்கும் இவளே சிறந்தவள் என்று எண்ணினான்.

மனத்திற்குப் பிடித்த செயல்களே மற்றவரின் மனதிற்குள் புகுவதற்குக் காரணம். தாய் தந்தையர் இல்லாத அவள் பறவைகள் மீது  கொண்ட பரிவு, எயினனுக்கு அவளிடம் ஈர்ப்பை உண்டாக்கியது. பூங்குழலியை தினமும் சந்தித்தான். அவளை சந்திக்கும் போது தன்னை மறந்தான்.  பல நாட்கள் நிலவு  விடைபெறும் வரையிலும்  அவளின் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருப்பான்.

மன்னனாக  இருந்தாலும் தான் யார் என்பதையும்  தன் காதலையும்  பூங்குழலியிடம்  சொல்லவேத் தயங்கினான். ஒருவேளை தன்  காதலை மறுத்து விட்டால் என்ன செய்வது என்று  எண்ணினான். ஆனால் காதலை வாயால் சொல்லாவிட்டால் என்ன? கண் ஆயிரம் கவிதைகளைச் சொல்லுமே?

“பறவைகளின் பாதை விசாலப்பார்வை: அவைகளுக்கு   விதிகள் இல்லை, விபத்துகளும் இல்லை. யாரையும் அழிக்காத, யாரையும் பின்பற்றாத பாதை பறவைகளின் பாதை. பசித்தால் இரை தேடுகின்றன. களைத்தால் கூடு திரும்புகின்றன.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதையாமல் இருப்பது பறவைகள் வாழும் காட்டுக்குள் தான்.  நிடத நாட்டு அரசன் நளனையும், தமயந்தியையும் சுயம் வரத்தில் இணைத்தது ஓர் அன்னப்பறவை.    ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமக்கு வார்த்தை. புறாவுக்கு அதுதான் வாழ்க்கை..   உறவுகளை அழைத்து  உண்ணும் காக்கை. பருந்திடம் இருந்து தன் குஞ்சுகளைக் காக்கும் கோழி.  மரங்களைத் துளையிடும் மரங்கொத்தி.

இப்படி எத்தனையோ பறவைகள்” என்று  எயினனிடம் கூறினாள் பூங்குழலி.

ருநாள் தன் தந்தை வெளியன் வேண்மானின் விருப்பத்திற்கு ஏற்ப சேர மண்ணுக்குத்  துணையாக போருக்குப் படை கொண்டு செல்ல  வேண்டிய நிலை ஏற்பட்டது. போரில் சேர அரசன் வெற்றி பெற்றான். ஆனாலும் அங்கேயே மழைக்காலம்   முழுவதும் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தினமும் பூங்குழலியின் காதல் அவன் மனதில் இருந்தது. காதலா ? கடமையா ? என்ற நிலை ஏற்பட்ட பொழுது கடமையே  முன்னால் நின்றது. கைதேர்ந்த ஓவியன் போல் நாளும் தன் மனதிற்குள் பூங்குழலியை  வரைந்தான்.

பல நாட்கள்  கழித்து எயினன் பூங்குழலியைக் காண வந்தான். மழைக் காலத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அவள்  குடிசை வீடுகள்  அடித்துச் செல்லப்பட எங்குச்  சென்றாள்  எனத் தெரியவில்லை. அவளின் வயதான தாத்தா பாட்டியும் இல்லை. உயிருடன் இருக்கிறாளா என்பதும் தெரியவில்லை.

அங்குள்ள பறவைகளும் எயினைப் போலவே பூங்குழலியைத் தேடித்திரிந்தன.  தன் காதலியின் நினைவாக பறவைகளுக்கு பாதுகாப்பு அளித்து வளர்க்க முற்பட்டான்.

“ எயினனின் நண்பன் குட்டுவன் “பறவைகளை கூண்டிலில் வைத்து வளர்க்கலாம்: உணவு  அளிக்கல்லாம் பாதுகாக்கலாம் ”  என்றான்.

“ பறவைகளை வளர்ப்பது என்பது கூண்டில் அடைத்து பாதுகாப்பது அல்ல.  அவைகள் வாழ மரங்களையும்  சோலைகளையும் குளங்களையும்  அமைக்க வேண்டும். மேலும்  அவைகளை வேட்டையாடாமல் இருப்பதே பறவைகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவியாகும்”, என்றான்.

பார்க்கும் இடமெல்லாம் பறவைகளின் கூட்டம். பறப்பதில் தான் எத்தனை அழகு!  பறந்து செல்லும் பறவைகளைப் பார்க்கும் பொழுது  எண்ணங்களுக்கும் சிறகுகள் முளைக்கின்றன. மேகம் கண்டு ஆடும் மயில்கள் , மங்கையர் நடை பயிலும் அன்னங்கள், உயரத்தில் பறந்தாலும் உலகை கவனிக்கும் பருந்து, புணர்வை  உணர்த்தும் நீரில் வாழும்  மகன்றில் பறவைகள். இவை அனைத்தும்   வாய் பேச முடியாதது. எனினும்  ஆய் எயினனின்   உணர்வால்   உள்ளத்தால்   ஒன்றிய நண்பர்கள்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here