சிறுகதைப் போட்டி – 7 : வருவான் காதல் தேவன் – அபிராமி பாஸ்கரன்

சோறுடைக்கும் சோழவள நாட்டில் திருவையாற்றுக்கு அருகே காவிரியின் தென்கரையில் அமைந்த திருவேதிக்குடி அன்று மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. புற்கள் மீது படர்ந்திருந்த பனித்துளி நல்லாளை, தன்னுள் அடக்கிவிடும் நோக்குடன் கீழ் திசை வானில் கதிரவன் மெல்ல உதித்துக் கொண்டிருந்தான். அதிகாலையின் அந்த அழகிய வேளையில் திருவேதிக்குடியில் சலசலப்பு மிகுந்திருந்தது. மக்கள் ஆங்காங்கே கூடி நின்று பேசும் வண்ணமிருந்தனர். பெண்கள் அதிகாலையில் செய்ய வேண்டிய தங்கள் அன்றாட வேலைகளையும் மறந்து சிறு சிறு கும்பலாக பிரிந்து நின்று பரபரப்புடன் பேசிக்கொண்டிருந்தனர். ஆண்கள் ஆங்காங்கே நின்று பேசுவதும், விரைந்து செல்வதுமாக இருந்தனர். அந்த ஊரில் மட்டுமல்லாது சோழ தேசம் முழுவதுமே அன்று அதிகாலை இந்த காட்சிகளை காணும்படி இருந்தது. அதற்கு காரணம், முதல் நாள் இரவுக்கிரவே, சோழ நாட்டின் அரசர் ஆதித்த சோழரின் வீரர்களால், சோழ நாட்டில் பரவியிருந்த ஓர் செய்தி தான்.

அப்பொழுது சோழ தேசம் பல்லவ, பாண்டிய பேரரசுகள் போல் இல்லாமல் நிலப்பரப்பில் மிகவும் குறுகி இருந்தது. சங்க காலத்தில் புகழ் பெற்று விளங்கிய ஓர் பேரரசு கால ஓட்டத்தில் தன் பெருமையினை இழந்து, தற்பொழுது ஓர் சிற்றரசு போல் இருப்பதை எண்ணி சோழ தேசத்தில் கலங்காதவர்களே இல்லை எனலாம். தற்போது விஜயாலய சோழர் மற்றும் அவரது மகன் ஆதித்த சோழரின் முயற்சியால் சோழ நாடு கொஞ்சம் மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ளதை எண்ணி சோழ நாட்டு மக்கள் மனம் நெகிழ்ந்திருந்தனர். அந்த காலக்கட்டத்தில் பல்லவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் போர்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமிருந்தது. இதில் சோழ தேசம் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஒவ்வொரு முறையும் யார் பக்கமாவது நின்று போரிட வேண்டிய நிர்பந்தமும் இருந்தது. அந்த நிர்பந்தத்திற்கு ஏற்றாற் போல் சோழ நாட்டுப் படைகள் ஒவ்வொரு போரிலும் மாறி மாறி பாண்டிய படைகளுடனோ அல்லது பல்லவ படைகளுடனோ இணைந்து போரிட்டு கொண்டிருந்தன. அன்று அதிகாலை முதல் சோழ தேச மக்களிடையே நிலவிய குழப்பத்திற்கு காரணம், விரைவில் வரப் போகின்ற யுத்தத்தில் சோழ படைகள் யாருக்கு துணையாக நின்று போரிட போகிறது என்பது குறித்து தான். பாண்டிய பல்லவ போரினை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று மட்டுமே ஆதித்த சோழர் அனைத்து ஊர் சபைகளுக்கும் செய்தி அனுப்பியிருந்தார்; இந்த முறை யார் பக்கம் துணையாக நின்று போரிட போகிறோம் என்பது குறித்த தகவல் ஏதுமில்லாததால் சோழ நாட்டு மக்கள் குழம்பி போயினர். சோழ நாட்டு படைகள் இம்முறை யார் பக்கம் துணையாக போரிட போகின்றன என்பது குறித்து தான் அந்த அதிகாலை வேளையில் சோழ தேசமெங்கும் வாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சோழப்படை இம்முறை இணைய போவது அபராஜித பல்லவரின் படையுடனா அல்லது வரகுணவர்ம பாண்டியரின் படையுடனா என்பது புரியாத புதிராக இருந்தது. யார் பக்கம் துணையாக நின்று போரிட்டால் சோழ தேசத்திற்கு நன்மை என்று ஆங்காங்கே மக்களிடையே பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றது. இதே நிலை தான் திருவேதிக்குடியிலும் காணும்படியாக இருந்தது.

ஊர் முழுக்க அத்தனை விவாதங்கள் நடைபெற்று மக்கள் அனைவரும் பரபரப்பை அடைந்திருந்த அந்த சமயத்தில், இவற்றில் எதுவுமே ஒரு நங்கையின் இதயத்தில் பதியவில்லை. தன் இல்லத்தினுள் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த அவளது கவனம் வேறெதிலோ லயித்திருந்தது. வெளியில் நடைபெறும் சலசலப்புகள் எதுவும் அவளது கவனத்தை கலைக்கவில்லை. அவளது பாதி திறந்து, பாதி மூடியிருந்த விழிகள் அந்த வீட்டின் மேற்கூரையை நோக்கிக் கொண்டிருந்தன. அவள் ஒரே இடத்தை வெகு நேரம் நோக்கி கொண்டிருந்ததில் இருந்து அவளது சிந்தனை ஏதோ ஒரு விஷயத்தில் நிலைத்திருந்ததை யூகிக்கும்படி இருந்தது. கோவில்களில் செத்துக்கப்படும் தேவதையின் சிற்பம் போல் அழகுடன் விளங்கிய அந்த நங்கையின் பெயர் முத்துநகையாள். முத்துநகையாள் தன் இல்லத்தின் மேற்கூரையை பார்த்தவாறு கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டு, பழைய சிந்தனைகளில் மூழ்கியிருந்தாள்.

சில மாதங்களுக்கு முன் ஒரு முன்மாலை வேளையில், திருவேதிக்குடியில், சிலம்புக்கழி போட்டி நடைபெற்றது. ஊர் மக்கள் அனைவரும் ஓர் திறந்த வெளியில் கூடியிருக்க, அவ்வூர் இளைஞர்கள் சிலம்புக்கழி போட்டியில் ஈடுபட்டனர். போட்டி வெகு சுவாரசியமாக சென்றுக் கொண்டிருந்தது. இளைஞர்களிடையே சிலம்பு சண்டையில் கடும்போட்டி நிலவினாலும், அனைவரையும் ஒவ்வொருவராக வெற்றிக்கொண்டு, போட்டியில் நிலைத்து நின்றுக்கொண்டிருந்தான் தீரன் என்னும் பெயர் கொண்ட இளைஞன். பெயருக்கு ஏற்றாற்போல் நல்ல தீரத்துடன் விளங்கிய அவனை சிலம்பு சண்டையில் எதிர்த்து போரிட்டு யாராலும் வெற்றிக்கொள்ள இயலவில்லை. அவனது ஆஜானுபாகுவான தோற்றமும், அவனது விழிகளில் இருந்த கூர்மையும், நெரித்த புருவமும், அவனது முகத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த தாடியும், முறுக்கிவிடப்பட்ட மீசையும், அகன்ற மார்பும், திண்ணிய தோள்களும், கட்டுக்கோப்பான தேகமும் அவன் ஒரு சிறந்த வீரன் என்பதை சொல்லும்படி இருந்தன. அவனது சிலம்புக்கழி சுழன்ற வேகத்திற்கு யாராலும் ஈடுகொடுக்க இயலவில்லை. அவனுடன் அதிக நேரம் போரிட்டுக் கொண்டிருந்தவன் அவனது நண்பன் நந்தன் மட்டுமே. நந்தனும் சிறந்த சிலம்பாட்ட வீரன் தான் என்றாலும், தீரனது வீரம் நந்தனை விட அதிகமாக அன்று வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இருவருமே ஒருவரையொருவர் எந்த வித தீவிர காயத்திற்கும் ஆளாக்கிவிட கூடாது என்ற கவனத்துடனே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். தீரன் நந்தனின் வலது கையினையே குறி வைத்து சிலம்பத்தை சுற்றிக் கொண்டிருந்தான்; நந்தனது கையில் இருந்து அவனது சிலம்புக்கழியினை தட்டிவிட்டு வெற்றிக்கொள்ள நேரம் எதிர்நோக்கி சண்டையிட்டுக் கொண்டிருந்தான். ஆனால், நந்தனுக்கோ தீரனது தாக்குதலில் இருந்து தன்னை காத்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது.

இருவரது சிலம்புக்கழிகளும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்தன. இப்படியே இரு நாழிகைகள் சென்றன. நந்தன் சிறிது களைப்புற்றவனாக காணப்பட்டான். அந்த களைப்பில் ஓர் நொடி நந்தன் அசந்த சமயத்தில், தீரன் அவனது வலது கை மணிக்கட்டில் தன் சிலம்புக்கழியினால் ஓங்கி அடித்தான். அவனது அந்த தாக்குதலை சிறிதும் எதிர்பாரா நந்தன், அந்த தாக்குதலில் நிலைக்குலைந்தான். அதை சமாளித்து, அடுத்த தாக்குதலை தான் தொடுத்து விட வேண்டும் என்று நினைத்த நந்தனின் சிலம்புக்கழி கண்ணிமைக்கும் நேரத்தில், மின்னல் போல் சுழன்ற தீரனது சிலம்புக்கழியினால் தாக்கப்பட்டு, நந்தனின் கையில் இருந்து விலகி தூர போய் விழுந்தது. கூடியிருந்த மக்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். தீரன் அந்த சிலம்புக்கழி போட்டியில் வெற்றியாளனாக வாகை சூடினான்.

கூட்டத்தில் ஒருத்தியாக நின்று அந்த சிலம்புக்கழி போட்டியினை கண்டுக்கொண்டிருந்த முத்துநகையாள், தொடக்கத்தில் சாதாரணமாக எல்லோரையும் போல்தான் அப்போட்டியினை ரசித்துக் கொண்டிருந்தாள். தீரன் ஒவ்வொருவராக வெற்றிக்கொள்ள வெற்றிக்கொள்ள அவள் இதயத்தில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தாள். அவன் சிலம்புக்கழியினை சுற்றிய லாவகமும், எதிராளிகளை வீழ்த்திய வேகமும் அவளை மிகவும் கவர்ந்தன. இதற்கு முன் எத்தனையோ முறை தீரனை அவள் பார்த்திருந்தாலும், அன்று அவன் அவளுக்கு மிகவும் புதிய ஒருவனாக தென்பட்டான். மணந்தால் வீரன் ஒருவனையே மணக்க வேண்டும் என்று கனவு கண்டுக்கொண்டிருந்த முத்துநகையாளுக்கு, தீரனது வீரம் மிகவும் பிடித்திருந்தது. அவளது மனம் மெல்ல அவன் வயப்பட்டது. அவன் நந்தனுடன் சண்டையிட்ட இரண்டரை நாழிகை பொழுதில், முத்துநகையாள் தன் மனதினை முழுவதும் தீரனிடத்தில் ஈடுப்படுத்திவிட்டாள். அவன் நந்தனை வெற்றிக்கொண்டு, அப்போட்டியில் வெற்றிவாகை சூடியதும், ஓடி சென்று அவனை ஆரத்தழுவி, அவனது அகன்ற மார்பில் சாய்ந்துக் கொள்ள அவள் மனம் துடித்தது. ஊரார் முன்னிலையில் அவ்வாறு செய்ய அவள் நாணம் அவளை தடுத்தது. ஏதும் செய்ய இயலாதவளாய் தீரனை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு சிலை போல் நின்றாள்.

இரு மாதங்கள் கழித்து ஓர் நாள் வைகறை பொழுதில் ஆற்றில் நீர் எடுக்க முத்துநகையாள் சென்றாள். வழியெங்கும் அவளுக்கு தீரனை தவிர வேறு எண்ணமே இல்லை. இந்த இரு மாதங்களில் ஒவ்வொரு நொடியும் அவளுக்கு தீரன் குறித்த சிந்தனை தான். அவனுடன் வாழ்வதற்கு அவள் மனம் துடித்தது. அன்று நடந்த சிலம்புக்கழி போட்டிக்கு பிறகு அவள் எவ்வளவு முயன்றும் தீரனை அவளால் காண இயலவில்லை. விசாரித்து பார்த்ததில் வாள் சண்டை பயிற்சிக்காக தலைநகரில் உள்ள போர் பயிற்சி பாசறைக்கு அவன் சென்று விட்டதாக தெரிந்தது. தன் விதியை நொந்துக் கொண்டு, அவனை குறித்த சிந்தனையில் காலம் கழிக்கலானாள்.

தாருகாவன ரிஷிகளின் ஆணவத்தை அடக்க, பிச்சாடனர் வேடம் தாங்கி வந்த சிவபெருமானின் அழகில் மயங்கி, ரிஷி பத்தினிகள் அவர் பின்னாலேயே சென்றார்கள் என்ற, புராணக்கதையை கேட்கையில் எல்லாம் முத்துநகையாள், ‘அது எவ்வாறு ஓர் ஆடவனின் அழகில் அவ்வாறு பெண்களால் மயங்க இயலும்’ எனக் கேட்டுவிட்டு நகைப்பாள். இப்பொழுது தானே ஒருவன் மீது மையல் கொண்டு சுற்றுவதை எண்ணி அவளுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

அன்றும் அவன் குறித்த சிந்தனையுடனே ஆற்றிற்கு சென்றவளுக்கு, அங்கு கண்ட காட்சியினை நம்புவதா வேண்டாமா என்ற சந்தேகமே வந்துவிட்டது. ஆற்றின் நடுப்பகுதியில் தீரன் நீந்திக்கொண்டிருப்பது தெரிந்தது. தன் கண்களையே நம்பாதவள் போல், கண்களை நன்றாக அழுத்தி துடைத்துக்கொண்டு மீண்டும் நோக்கினாள். ‘ஆம் அவரே தான்!’ என அவள் மனம் இடித்துரைத்தது. லட்சம் பட்டாம்பூச்சிகள் அவளது இதயத்தில் ஒரு சேர பறப்பது போன்றதோர் உணர்வு மேலிட்டது. சுற்றும் முற்றும் பார்த்தாள். வெகு தூரத்தில் சிலர் குளித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களை தவிர அங்கு வேறு மனித நடமாட்டமே அந்நேரத்தில் இல்லை. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவள் மனம் கூறியது. இன்று எப்படியேனும் அவரை சந்தித்து, தன் மனதினை அவரிடம் வெளிப்படுத்தி விட வேண்டும் என்று உள்ளத்தினுள் உறுதிப்பூண்டுக் கொண்டாள். அவன் குளித்து முடித்து கரையேறி வரும்வரை அங்கேயே காத்திருக்க எண்ணி, அருகில் இருந்த புன்னை மரம் ஒன்றின் வேரில் அமர்ந்துக்கொண்டாள். அவனிடம் எவ்வாறு தன் மனதினை வெளிப்படுத்துவது என்று மனதிற்குள் நிறைய முறை ஒத்திகை பார்த்துக்கொண்டாள். அவன் மறுப்பாக சொல்லிவிட்டால் அதன் பின் தன் கதி என்னவென்று எண்ணியபொழுது அவள் உடல் நடுக்கம் கொண்டது. சட்டென்று வியர்த்து கொட்டியது. தன் சேலைத் தலைப்பினால் வியர்வையினை ஒற்றி எடுத்துக் கொண்டே, மனதினுள் ‘அவர் மட்டும் மறுப்பாக ஏதும் கூறிவிட்டால், இந்த ஆற்றிலேயே பாய்ந்து உயிரினை மாய்த்துக்கொள்ள வேண்டியது தான்; அவர் இல்லாத ஓர் வாழ்க்கை வேண்டவே வேண்டாம்; அவரை நினைத்த உள்ளத்தில் வேறு ஒருவனை நினையேன்’ என சபதம் எடுத்துக்கொண்டாள். இதெல்லாம் ஒருபுறம் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும், அவளது கண்கள் அவனை விட்டு நொடி நேரமும் அகலவில்லை. ஆண்மகன் ஒருவன் குளிப்பதை பார்ப்பது தகாத செயல் என்று அவள் அறிந்திருந்தாலும், தீரன் அவளுக்கு வேற்று மனிதனாக தோன்றவில்லையாதலால், அவன் குளிப்பதையே கண் இமைக்காமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அரை நாழிகை கழித்து, தீரன் கரையேறுவதற்காக கரையினை நோக்கி நீந்தத் தொடங்கினான். முத்துநகையாள் அமர்ந்திருந்த இடத்திற்கு சற்று தொலைவில் தீரன் கரையேறியதும், அவனிடம் பேசும் நோக்குடன் முத்துநகையாள் புன்னை மரத்தின் வேரினை விட்டெழுந்து, அவனை நோக்கி செல்வதற்கு அடி எடுத்து வைத்தாள். அதே நேரத்தில் எங்கிருந்தோ வந்த நந்தன் தீரனுடன் இணைந்துகொண்டு,  அவனுடன் ஏதோ பேசலானான். நந்தனை பார்த்ததும் முத்துநகையாளுக்கு பெரிதும் ஏமாற்றாமாக இருந்தது. நந்தன் சென்றதும் தீரனுடன் பேசலாம் என்று அங்கேயே காத்திருந்தாள். சிறிது நேரம் கழித்து தீரன் நந்தனுடன் பேசிக்கொண்டு அவனுடனே ஊருக்குள் சென்று விட்டான். முத்துநகையாளுக்கு அழுகை பீறிட்டது. அவனுடன் தன்னால் பேச முடியாமல் போய்விட்டதை எண்ணி துக்கம் அவளுக்கு நெஞ்சை அடைத்தது. சோகத்துடன், தண்ணீர் கூட எடுக்காமல் வீட்டினை நோக்கி உணர்வற்றவள் போல் நடந்தாள்.

அதற்கு பிறகு வந்த நாட்களில் கூட, அவளால் தீரனை தனிமையில் சந்திக்கவே இயலவில்லை. ஊரார் யாரேனும் ஒருவர் அவனுடன் இருந்துக்கொண்டே இருந்தனர். தன் மனதினை அவனிடம் வெளிப்படுத்த இயலாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

இவ்வாறு பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த முத்துநகையாளை, “முத்துநகை, முத்துநகை! எழுந்திரு” என்ற அவளது தோழி ராதையின் குரல் சுயநினைவிற்கு கொண்டு வந்தது.

“என்னடி ராதை?” என அலுத்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள் முத்துநகையாள்.

“வெளியில் ஊரே பரபரப்பாக உள்ளது. நீ என்னடி இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்?”, என்றாள் ராதை.

“நான் உறங்கவில்லையடி! அவரை குறித்து தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உனக்கு தான் தெரியும் அல்லவா! என்னால் அவரிடம் இன்று வரை என் மனத்தினை வெளிப்படுத்த இயலவில்லை. ஏன் பேசுவதற்கு கூட சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. உன்னை அவரிடம் தூது போக சொன்னால், நீயோ உன் தமையன் நந்தனுக்கு தெரிந்தால் உன்னை கொன்றுவிடுவார் என அஞ்சி தூது செல்ல மறுக்கிறாய். நான் என்ன தான் செய்வது. என் விதியினை நொந்துக் கொள்வதை தவிர வேறு என்ன என்னால் செய்து விட முடியும். நேற்றிரவு போர் குறித்த செய்தி வந்ததில் இருந்து, மனம் நிலைக்கொள்ள மறுக்கிறது. அவர் எப்படியும் போருக்கு செல்லாமல் இருக்க மாட்டார். அவர் போருக்கு செல்வதற்குள் என் காதலை அவரிடம் நான் வெளியிட்டு கூறியே தீருவேன். அதற்கான வழிமுறை என்ன என்பது குறித்து தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்”

“முத்துநகை…..”, என ஏதோ சொல்ல முடியாமல் திணறினாள் ராதை.

“என்னடி? சொல்”, என்றாள் முத்துநகை.

“நான் தீரன் அண்ணா பற்றிய செய்தி ஒன்றை உன்னிடம் சொல்ல தான் இப்பொழுது வந்தேன்….”, என மீண்டும் இழுத்தாள் ராதை.

முத்துநகை பரபரப்புடன், “என்ன செய்தி? சீக்கிரம் சொல்”, என்றாள்.

“தீரன் அண்ணா நேற்றிரவு செய்தி வந்த உடனே தலைநகருக்கு சென்று விட்டார். அரசரின் படையில் அவரும் இருக்கிறாராம். நேரடியாக தகைநகரில் இருந்தே போர்க்களம் சென்று விடுவாராம். என் தமையன் கூறினார். என் தமையனும் கூட நாளை தீரன் அண்ணா இருக்கும் படையில் இணைய தலைநகர் செல்கிறார்”, என்று வேகமாக கூறி நிறுத்தினாள் ராதை.

ராதை கூறிய செய்தியை கேட்டதும், முத்துநகைக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் விதி தன்னுடன் இவ்வாறு விளையாடுகிறதே என எண்ணி அதிரிச்சியடைந்தாள். போருக்கு செல்வதற்கு முன் அவரிடம் தன் காதலை வெளிப்படுத்த எண்ணியவளுக்கு, ராதை கூறிய செய்தி பேரிடியாக இருந்தது.

“முத்துநகை! ஊரார் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். இம்முறை நம் சோழப்படை யார் பக்கம் துணையாக போரிட போகிறது என்பது குறித்து மக்களிடையே மிகுந்த குழப்பம் நிலவுகிறது”, என்றாள் ராதை.

“நிறுத்து ராதை. ஊரார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன! என் காதலை அவரிடம் வெளிப்படுத்த இயலவில்லை. எனக்கு அச்சமாக உள்ளது. அவரது நினைவினால் என் உடல் இளைத்து, என் வளையல்கள் என் கைகளை விட்டு கழலத் தொடங்கிவிட்டன. இதை கண்டால் என் தாய் நிச்சயம் கண்டுப்பிடித்துவிடுவார்கள் நான் காதல் வயப்பட்டிருக்கிறேன் என்று. என் காதலை என்னவருக்கு வெளிப்படுத்தும் முன், என் தாய் என் காதலை கண்டுபிடித்து விடுவார்களோ என எண்ணியெண்ணி தினமும் அச்சம் கொள்கிறேன். என்னவரிடம் என் காதலை வெளிப்படுத்த இயலாமல் இருப்பதற்கு இவ்வூர் மக்களும் ஓர் காரணம். நான் அவரை சந்திக்க முயல்கையில் எல்லாம் ஊரார் யாரேனும் ஒருவர் அவருடன் இருந்தார்கள். அன்று சிலம்புக்கழி போட்டியின் முடிவில் அவரை ஆரத்தழுவிக் கொள்ள மனம் துடித்தது. அப்பொழுதும் இந்த ஊரினை முன்னிட்டே நான் அவரை நெருங்க முடியாமல் என் நாணம் தடுத்தது. இவ்வாறு எனக்கும் அவருக்கும் இடையில் நந்தி போல் எப்பொழுதும் இவ்வூர் ஏதோ ஓர் விதத்தில் குறுக்கிட்டுக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது நான் இரண்டும் கெட்டான் நிலையில் தவிப்பது போல், இவ்வூரும், சோழப்படை இப்போரில் பாண்டியர் படையுடன் இணைவதா, பல்லவ சேனையுடன் இணைவதா என இரண்டும் கெட்டான் நிலையில் குழம்பித் தவிக்கட்டும்” என்று அழுதுக்கொண்டே கூறினாள் முத்துநகையாள்.

அவளை சமாதானம் செய்ய எவ்வளவு முயன்றும் ராதையால் இயலவில்லை. ராதை அவளை அந்நேரத்தில் தொந்தரவு செய்யக் கூடாது என்றெண்ணி அங்கிருந்து வெளியறினாள். முத்துநகை கயிற்றுக்கட்டிலில் சாய்ந்துக்கொண்டு அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள்.

**************

உச்சிவேளையில் ஆதவன் தன் வெப்பம் முழுவதையும் கக்கிக் கொண்டிருந்தான். அவ்வளவு வெயிலையும் பொருட்படுத்தாது சோழ நாடு வெற்றியினை கொண்டாடிக் கொண்டிருந்தது. நடந்து முடிந்த போரில், சோழப்படை பல்லவர் பக்கம் துணையாக நின்று, பாண்டியர் படையை வெற்றி கொண்டிருந்தது. சோழ நாட்டு வீரர்கள் தங்கள் மாவீரத்தினை திருப்புறம்பியம் போர்க்களத்தில் நிலைநாட்டினர். சோழப்படை மட்டும் அல்லாது கங்க நாட்டு சேனையும் பல்லவர் சைன்யத்திற்கு துணையாக வந்து போரிட்டது. கங்க மன்னர் பிருத்திவீபதி போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார். அவருக்கு போர்க்களத்தில் ஓர் பள்ளிப்படை கோவிலும் கட்டப்படலாம் என்ற பேச்சு பரவலாக காணப்பட்டது. இப்போரில், ஆதித்த சோழர் வெறியுடன் எதிரிகளை கொன்றுக்குவித்து போரிட்டதை குறித்து, மக்கள் சிலிர்ப்புடன் பேசிக்கொண்டனர். அவர் மட்டுமல்லாது, தன் மேனியில் தொன்னூற்றாறு விழுப்புண்களை உடைய விஜயாலய சோழரும் இம்முதிய பிராயத்தில் போர்க்களத்தில் நிகழ்த்திய வீர சாகசங்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தன. தோற்று ஓடிய பாண்டியர் படையை துரத்திக் கொண்டு சோழப் படையில் ஓர் பிரிவினர் சென்றிருப்பது மக்களின் உற்சாகத்தை பன்மடங்காக்கியது. சோழ தேசம் முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்கள் களைக்கட்டியது. வெற்றிக் கொண்டாட்டத்தில் சோழ தேசம் அல்லோலகல்லோலப்பட்டது. வெற்றி பெற்று திரும்பிய வீரர்கள் ஒவ்வொருவரையும் மக்கள் மனதார போற்றி புகழ்ந்தனர். ஒருபுறம், போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு உரிய இறுதி மரியாதைகள் செய்துக் கொண்டிருந்தனர்.

முத்துநகையாள் தன் வீட்டின் வாயிலில் நின்றவாறு வெற்றிக் கொண்டாட்டங்களை எவ்வித சலனமுமின்றி பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கு வந்த ராதை தயங்கி நின்றாள். அவளை தன் கண்களால் அளந்த முத்துநகையாள், உதட்டில் புன்சிரிப்புடன், “தோற்றோடும் பாண்டிய சைனியத்தை துரத்தி செல்லும் நம் சோழப் படையில் அவரும் சென்றிருக்கிறார். அதுதானே இப்பொழுது நீ கூற வந்தது?”, என வினவினாள்.

ராதை மிகுந்த ஆச்சர்யத்துடன், “உனக்கு எவ்வாறு இது தெரியும்! எனக்கே சற்றுமுன் போர்க்களத்தில் இருந்து திரும்பி வந்த என் தமையன் கூறித்தான் இச்செய்தி தெரியும்”, எனக் கூறி முத்துநகையாளை மேலும் கீழும் நோக்கினாள்.

முத்துநகையாள் மெலிதாக ஓர் புன்னகை புரிந்து, “அவர் பிறந்த என் மாமியின் வயிறு புலி இருந்துவிட்டு போன கல்குகை போன்றது. அப்படிப்பட்ட வயிற்றில் பிறந்த மாவீரர் எப்பொழுதும் போர்க்களத்தில் தான் இருப்பார் என்று எனக்கு தெரியும்”, என்றாள்.

ராதை அவளை மேலும் ஆச்சர்யத்துடன் நோக்கி, “முத்துநகை! தீரன் அண்ணா போர்க்களத்தில் இருந்து வெற்றி வீரராக திரும்பி வந்த பின் உன் மனதினை அவரிடம் வெளியிட காத்திருந்தாயே! இப்பொழுது இன்னும் நாள் தள்ளிக்கொண்டே போகிறதே!”, என வருத்தத்துடன் கூறினாள்.

“எத்தனை நாள் வேண்டுமானாலும் ஆகட்டும். அவர் போர்க்களத்தில் இருந்து திரும்பி வந்ததும் அவரிடம் என் காதலை வெளியிடுவேன். என் காதல் தேவன் என்னை தேடி நிச்சயம் கூடிய விரைவில் வருவார்”, என்று உறுதி நிரம்பிய குரலில் கூறிய முத்துநகையாள், தீரனது வரவினை எண்ணி நம்பிக்கையோடு காத்திருக்கத் தொடங்கினாள். அவளது நம்பிக்கை கூடிய விரைவிலேயே நிறைவேற போவதை அறிந்த இயற்கை அன்னை தன் தளிர் பூக்கரங்களால், அந்த உச்சி வேளையிலும் அவளை தழுவி சென்றாள்.

 

கதைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட பாடல்கள் :

புறநானூறு 83.

பாடியவர்: பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்.

பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி.

திணை: கைக்கிளை.

துறை: பழிச்சுதல்.

பாடல் பின்னணி:   சோழ மன்னன் மீது காதல் கொள்கின்றார் ஓர் இளம் பெண் புலவர். தன் தாய்க்கு தான் அஞ்சுவதைப் பற்றியும், தன்னுடைய காதல் பெருமையை அறியாத ஊரைப் பற்றியும் எண்ணி, இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

 

அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என்

தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே,

அடு தோள் முயங்கல் அவை நாணுவலே,

என் போல் பெரு விதுப்புறுக, என்றும்

ஒரு பால் படாஅது ஆகி

இரு பாற்பட்ட இம் மையல் ஊரே.

 

பொருளுரை:  வீரக்கழல் அணிந்த கால்களையும் கருமை நிறத் தாடியையுமுடைய இளைஞன் மேல் கொண்ட காதலால், என் வளையல்கள் கழல்கின்றன. என்னுடைய காதல் என் தாய்க்கு தெரிந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.  என் தலைவனின் வலிய தோள்களைத் தழுவ விரும்புகின்றேன்.  ஆனால் அவையில் பலரும் இருப்பதால் நாணமாக உள்ளது.  என்னைப் போன்று பெரியதாக நடுங்கட்டும், ஒரு பக்கம் சாராது, இரு பக்கமுமாக உள்ள இந்த மயங்கும் ஊர்.

புறநானூறு 86.

பாடியவர் – காவற்பெண்டு.

திணை – வாகை.

துறை –  ஏறாண் முல்லை.

 

பாடல் பின்னணி:  பெண் புலவர் காவற்பெண்டின் வீட்டிற்கு வந்த ஒருவர், “உங்கள் மகன் எங்கு உள்ளான்?” என்று அவரிடம் கேட்க, அதற்கு அந்த வீர்த்தாயின் பதிலாக அமைந்த பாடல் இது.

 

சிற்றில் நற்றூண் பற்றி, நின் மகன்

யாண்டு உளனோ என வினவுதி, என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க் களத்தானே.

 

பொருளுரை:   என் சிறிய இல்லத்தில் உள்ள நல்ல தூணைப் பற்றிக் கொண்டு “உன் மகன் எங்கு உள்ளான்?” என்று கேட்கிறாய். என் மகன் எங்கு இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது.  அவனைப் பெற்ற என் வயிறு புலி இருந்து விட்டுப் போன கல் குகையைப் போன்றது .  அத்தகைய வீரம் பொருந்திய அவனைப் போர்க்களத்தில் தான் காண முடியும்!

 

-அபிராமி பாஸ்கரன்

Leave a Comment