சிறுகதைப் போட்டி – 35 : விடியல் – மாலா உத்தண்டராமன்

அது ஓர் சிறிய கிராமம். ஏறக்குறைய ஆயிரம் வீடுகள் – ஒவ்வொன்றிலும் ஐந்து பேர் என்று வைத்துக் கொண்டால், மொத்தத்தில் – சுமார் ஐயாயிரம் பேர் வாழ்கின்றனர் என்பதை விட, தற்போது வேதனையோடும், கவலையோடும் பொழுது கடத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை நிலை!  அந்த ஊர் முன்பு போல வளமாக இல்லை. திடீர் என வறட்சி நிலைக்கு தள்ளப் பட்டு விட்டது. ஊர் மக்களின் முகத்தில் புன்னகை மறைந்தோடி, இப்போது இனந்தெரியாத சோகம் அப்பியிருந்தது.

காரணம் என்ன?

கிராம முன்னேற்றம் என்ற நோக்கத்தில் அந்த ஊரில் புதிய தார் சாலை மற்றும் அரிசி ஆலை நிறுவி முடித்து, கூடுதலாக சில தொந்தரவுகளையும் உண்டாக்கி விட்டு, அகன்று விட்டார்கள் அந்த வேலைக்கான ஒப்பந்தக்காரர்கள். அதனால் – இவ்வளவு காலமாக நீர்பாசனத்துக்கு பேருதவி புரிந்து வந்த ஆற்றுத் தண்ணீர் வரவு தடைபட்டு விட்டது. ஊரே திரண்டு முறையிட்டும் கூட பலனில்லை. “எதற்கெடுத்தாலும் கூட்டம் கூட்டமாக வந்து போராட்டம் நடத்தறது தான் உங்க பிழைப்பாப் போச்சு.. நாங்க எப்படி தான் எங்க கடமையை செய்வது.. நல்ல காரியத்தை குறை கூறாதீங்க. ஒழுங்கு மரியாதையா ஊருக்கு போங்க.. இல்லாட்டி செக்யூரிட்டி ஆளைவச்சி விரட்ட வேண்டி இருக்கும்.!” எச்சரித்து வெளியேற்றினர் அலுவலர்கள். வேறு வழியின்றி ஏமாற்றத் தோடு ஊருக்கு திரும்பிவந்தார்கள் ஏழை மக்கள்.

எதிர்பாராத இந்த திடீர் மாற்றத்தால் – அந்த கிராமத்தில் வறுமை சூழ ஆரம்பித்தது.

“இந்த ஊர்ல கோடையில் செமவெயில் சாத்துது. பயிர் எல்லாம் காய்ஞ்சிடுச்சு.. பச்சை மரமெல்லாம் பட்ட மரமாயிடுச்சு.  அடுத்தாக மழை காலம் வந்தா ஊருக்குள் வெள்ளம் பூந்து வூட்டைகாலி பண்ணுது. புதுசா அரிசி ஆலை கட்டிணதும், தார் ரோடு போட்டதும் தான் இந்த கொடுமைக்கெல்லாம் காரணம்.. அதனால் பெரிய மண்மேடு உருவாகி ஆற்று நீரோட்டப் பாதை தடை பட்டு ஊருக்குள் தண்ணி திரும்பிடுது.  போன வருஷ வெள்ளத்தில சிக்கி ஜோடி மாடுல ஒருமாடு செத்திடுச்சு.. வாழ்வாதாரம் இல்லாமப் போச்சு. தண்ணி வயலுபக்கம் போனா நல்லது.. இந்த வருஷமாவது இதுக்கு  ஒரு முடிவு கட்டணும்னு போனீங்களே. போன காரியம் என்ன ஆச்சு.?.” கவலையோடு கேட்டார் பொன்னன்.

“அடபோப்பா.. கூட படித்த நண்பனாச்சேன்னு உதவி கேட்டேன்.  பதவி வந்ததும் அறவே மாறிட்டான் அந்த பாவிப்பயல். அவனுடைய தலைவரு வெறுப்புல இருக்காராம். இப்ப எந்த விஷயத்தையும் உடனே செய்ய முடியாத சூழ்நிலையாம்.. அவர் பணம் பண்ண முயற்சி செய்த அத்தனை காரியமும் தோல்வியாம். அதுக்கு காரணமாக இருந்த எல்லார் மீதும் வள் வள்ளுன்னு எரிஞ்சி விழறாராம்.. காலம் மாறிப் போச்சு. ஓசியில மடையை வயல் பக்கம் திருப்பறதுக்கு எந்த காண்ட்ராக்டரும் தயாராக இல்லையாம். நிறைய செலவாகும்னு விரட்டிட்டான்பா. பணம் பணம்னு அலையறானுங்க… முகத்தை ஏழு கோணலா வச்சிட்டு நடிக்கிறாங்கப்பா..” வேதனைப் பட்டார் இஸ்மாயில்.

“எனக்கும் அதேகதிதான்.. டவுன் ஃபாதர் மூலமாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம்.. இங்கே அங்கேன்னு ஒரு வாரம் அலையவச்சாங்க.. எல்லார் கிட்டேயும் கும்பிடுபோட்டு கெஞ்சி கூத்தாடி கேட்டு பார்த்தேன். கடைசியாக – அங்கே வேலை பார்க்கும் ஒரு நல்ல மனுஷி என்ன சொன்னாள் தெரியுமா..?வெறுங்கையோடு வீணாக இங்கே வந்து நிற்பதில் ஒரு பயனும் இல்லை.. தள்ள வேண்டியதை தள்ளினாத்தான் சம்மதிப்பாங்க.. வந்தால் தொகையுடன் வரணுமாம். இல்லாட்டி அடுத்த வருஷம் முயற்சிப்பதாக சொல்லி அனுப்பிட்டாங்க பொன்னா… இந்த வருஷம் முடியாதாம்….” பீட்டர் உதடு பிதுக்கினார்.

“ஐயோ..! இந்த மாசக் கடைசியில மழை வந்திடுமே.. வெள்ளம் புரண்டு ஊரிலிருக்கிற மிச்சம் மீதியையும் அழிச்சிடுமே.. யாருக்கும் கூலி வேலை கூட கிடைக்கலை. எல்லா வேலைகளையும் மெஷின் வச்சி முடிச்சிக்கிறாங்க.. பெண்டாட்டி பிள்ளைகள் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடக்க வேண்டியிருக்கு. நமது கையாலாகத்தனத்தை குத்திக்காட்டித் திட்டித் தீர்க்கறாங்க.. வீட்டுக்குள்ள அடியெடுத்து வைக்க முடியல.. கலியாணம் கருமாதி நடத்த கூட பணம் இல்லை.. வேளாண்மை நல்லா நடந்தாத்தானே வருமானம் கிடைக்கும். நமது பிழைப்பிலே மண்ணை அள்ளிப்போட்டுட்டுரோடு, ஆலைன்னு புதுதிட்டம் ரொம்ப அவசியமா என்ன.? மேலே நல்ல பெயரை வாங்கறதுக்காக நம்ம வயித்திலே கைவைக்கிறாங்க. அப்பதான் தேர்தலில் சீட்டு கிடைக்குமாம். நாக்கை தொங்க போட்டுக் கொண்டு நாய் மாதிரி அலையறானுங்க.. சொகுசு வாழ்க்கை வாழறவங்களுக்கு ஏழை கஷ்டம் எப்படி தெரியும்..?ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தான் ஓடிட்டிருக்கு.. எப்போது நமக்கு விடிவு காலம் பிறக்குமோ தெரியலை… கடவுள்தான் ஒரு வழிகாட்டணும்..” அழாத குறையாக புலம்பினர் 50 வயது கடந்த மூவரும்.

இவர்களின் திண்ணை உரையாடலை கேட்ட பொன்னன் மகன் ராமு,  வீட்டில் இருந்து விருட்டென வெளியேறி ஊருக்குள் ஓடினான். ஐந்து நிமிடத்தில் இருவரோடு திரும்பி வந்தான். அந்த இருவர் இஸ்மாயில் மகன் அகமது. பீட்டர் மகன் ஜேம்ஸ்.  மூவரும் பட்டப் படிப்பு முடித்து வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள். ஏழ்மைச் சூழ்நிலையில் இருந்த போதிலும் பொருளாதார சிரமங்களை எதிர்நீச்சல் போட்டு கடந்து வந்தவர்கள். மூவரின் கண்களிலும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் அணி வகுத்து நின்றன.  ஊர் மக்களின் முன்னேற்றத்துக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ அவர்கள் மனம் துடிதுடித்தது.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here