சிறுகதைப் போட்டி – 13 : விண்ணைத் தொடு – பத்மா

பெங்களூரில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குடியிருப்பில் ஆதினியின் வீடு பரபரப்பாக இருந்தது. போர்டிகோவில் நாற்காலிகள் போடப்பட்டு பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அமர  வைக்கப்பட்டிருந்தனர். அனைவரும் இஸ்ரோ குடியிருப்பு விதிமுறைப்படி பாதுகாப்பு சோதனைகளைக் கடந்து ஆதினியின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

ஆதினி, இஸ்ரோவில் இளம் விஞ்ஞானி. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகாஷ்பவனில் மூன்று மாதம் தங்கியிருந்து அங்கு ஆட்டோமேஷன் அப்ளிக்கேஷன்களைப் புதுப்பிக்கும் பொறுப்புக்கு இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாள். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த புதுப்பிக்கும் பணியில் சென்ற முறை அனுபவத்தின் காரணத்தாலும் அவளின் திறமையான பணித்திறன் காரணமாகவும் இஸ்ரோ இரண்டாம் முறையாகவும் அவளையே தேர்ந்தெடுத்துள்ளது.

வாசல் வழியாக போர்டிகோவுக்கு வந்தாள் ஆதினி. ஐந்தரை அடி உயரம், மாநிறம், தினசரி உடற்பயிற்சிகளின் உபயத்தால் சிக்கென்ற உடல்வாகு, ஆழ்ந்த நீலநிற சேலையில் கம்பீரமாக நடந்து வந்தாள்.

“வாழ்த்துக்கள் மேடம்” கையில் குவிந்த பூங்கொத்துத்துகளை புன்னகையுடன் வாங்கி கொண்டு நாற்காலியில் அமர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர் கொள்ள தயாரானாள் ஆதினி.

“வாழ்த்துக்கள் மேடம், இரண்டாவது தடவையா நீங்க விண்வெளி பயணத்துக்கு செலக்ட் ஆகிருக்கிங்க. அதப்பத்தி சொல்லுங்க” ஒரு நிருபர் கேட்க தொண்டையை செருமிக்கோண்டு பேசத் தொடங்கினாள் ஆதினி.

“நம்ம விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகாஷ்பவன்ல சில அப்கிரேடிங் வேலைக்காக இஸ்ரோல என்னை செலக்ட் பண்ணிருக்காங்க. போன தடவை போய்வந்த அனுபவம் தான் இந்த தடவையும் என்னை செலக்ட் பண்ண முக்கிய காரணம். இதுக்கான டிரையினிங் திங்கள்கிழமை ஆரம்பிக்குது. ஒரு மாசம் பயிற்சி. ஆகஸ்ட் மாசம் பதினைஞ்சாம் தேதி நம்ம சுதந்திர நாள் என் பயணம் தொடங்குது. திட்டமிட்ட படி எல்லாம் நடந்தா நவம்பர் பதினைஞ்சு நான் திரும்பவும் உங்களை சந்திப்பேன்” இஸ்ரோ அனுமதித்த அளவில் விவரங்களை பகிர்ந்து கொண்டாள் ஆதினி.
இன்னொரு பெண் நிருபர் “இந்த மூணு மாசமும் நீங்க தனியா இருக்கணுமே, இந்த தனிமையை எப்படி கடக்க போறிங்க” என்றாள்.
புன்னகைத்த ஆதினி “நான் தனியா போறேன்னு யார் சொன்னது?” என கேட்டதும் திகைத்த முகங்களை பார்த்து “எனக்கு புக்ஸ் படிக்க ரொம்ப பிடிக்கும். புக்ஸ் அப்ளிகேஷன் ஒண்ணு பல ஆயிரம் புக்ஸோட என் கூட இருக்கு, இந்த தனிமை படிக்க கிடைச்ச ஒரு சந்தர்ப்பமா தான் பார்க்கறேன்” என்றாள்.
அடுத்த நிருபர் “நீங்க ஒய்வு நேரத்துல ஆன்லைன்ல தமிழ் பாடம் நடத்தறிங்களே, தமிழ்னா உங்களுக்கு அவ்வளவு இஷ்டமா?” என்றாள்.
“இங்கிலீஷ் எனக்கு பிழைப்பு மொழி. தமிழ் என் உணர்வு மொழி. நம்ம சங்க இலக்கிய பாடல்கள படிச்சு பாருங்க, காதல், வீரம், தாய்மை, வாழ்க்கை முறை, பிரிவு, இன்னும் இன்னும், அதுல இல்லாத உணர்வே இல்ல” எனப் பதிலளித்தாள் ஆதினி.
“உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு சங்க பாடலை பகிருங்க ப்ளீஸ் ” என்றார் ஒரு பெண் நிருபர்.
“ஓ, தாராளமா” என ஒரு நொடி யோசித்த ஆதினி சொல்ல ஆரம்பித்தாள்.

ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினை

பொரியரை வேம்பின் புள்ளி நீழல்

கட்டளை அன்ன வட்டரங் கிழைத்துக்

கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்

வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்

சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை

யுள்ளினென் அல்லனோ யானே யுள்ளிய

வினைமுடித் தன்ன இனியோண்

மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே

இது நற்றிணையில மூன்றாவது பாட்டு. இளங்கீரனார் என்ற புலவர் இயற்றிய பாடல்.

“விளக்கம் மேடம்?”

“தலைவன் பொருள் ஈட்ட தலைவியை பிரிந்து வெளியூர் செல்கிறான். போகும் வழியில் பாலை நிலத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை வருகிறது. செல்லும் வழியில் ஒரு வேப்பமரம் இருக்கிறது. பாலை நிலமானதால் அந்த மரத்தில் இலைகள் அவ்வளவாக இல்லாமல் இருக்கும் சில இலைகளின் நிழல் புள்ளி வைத்தது போல காட்சி தருகிறது. அந்த வேப்பமரத்தின் மேல் கிளையில் பருந்து ஒன்று முட்டையிடும் வலியில் இருக்கிறது. கீழே கல்வி கற்காத சிறுவர்கள் வெயிலின் தகிப்பையோ, பருந்தின் வேதனையையோ அறியாது நெல்லிக்காய்களை வட்டுகளாக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். வெயில் உள்ளிட்ட புற சூழ்நிலைகள் தலைவனுக்கு சோர்வை தருகின்றன. அவனுக்குத் தலைவியின் நினைவு தலைப்படுகிறது. நினைத்த காரியத்தை நிறைவேற்றினால் வரும் மகிழ்ச்சியை போன்ற இனிமையையுடைய தலைவி, நம்முடைய இல்லத்தில் அழகான விளக்கை ஏற்றி கவலையோடு நம்மை பற்றி நினைத்துக்கொண்டிருப்பாள் என தலைவன் சிந்தித்து தன் மனசோர்வை பின் தள்ளி பாலைநிலம் கடந்து பொருளீட்டி வீடு திரும்பினான்.

இதுல ஒரு லைன் வரும் பாருங்க, ‘உள்ளிய வினை முடித்தன்ன இனியோண்’, அதாவது, நினைச்ச வேலையை முடிச்சா ஒரு சந்தோஷம் வருமே, அந்த மாதிரி இனிமையான, இப்போ எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற வேலையை முடிச்சா எனக்கு வர்ற சந்தோஷத்தை அனுபவிக்க காத்துகிட்டு இருக்கேன்” என்றாள் ஆதினி.

இன்னொரு நிருபர் “மேடம், உங்க குடும்பத்தை பத்தி தெரிஞ்சுக்கலாமா” என்றார். “கண்டிப்பா, அப்பா ரிடையர்ட் பேங்க் ஆபிசர். அம்மா ஹவுஸ் வைஃப். இன்னொரு முக்கியமான நபரை அறிமுகப் படுத்தனும். அவருக்காக தான் வெயிட்டிங்” புன்னகையுடன் சொன்னாள்.

இன்னொரு நிருபர் “மேடம், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?” என்றார்.
சிறிது யோசித்த ஆதினி “அந்த பாட்டுல வர்ற தலைவி மாதிரி விளக்கேத்தி கண்மூடி நிக்கறப்ப மனசு முழுக்க ஒரு அமைதி நிறையுமே, அந்த அமைதி தான் கடவுள்ன்னா, எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஏதாவது கஷ்டமான நேரத்துல என் குடும்பம், நண்பர்களால எதுவும் செய்ய முடியாத நிலையில என் கைப்பிடிச்சி துணையா, ஒரு ஆறுதலான நம்பிக்கை, உள்ளுணர்வு, இதெல்லாம் தான் கடவுள்ன்னா, எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. இது என் தனிப்பட்ட கருத்து தான்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது பைக்கில் வந்த நபரை பார்த்து புன்னகைத்தாள். “ஹாய் அருண்” என்றவள் “இவர் தான் நான் அறிமுகப்படுத்த நினைச்ச நபர். என் வருங்கால கணவர், அருண். என்னோட வொர்க் பண்றாரு. மூணு வருட காதல். ரெண்டு வீட்டு பெரியவங்க ஆசிர்வாதத்தோட வர்ற தையில மேரேஜ்” என்றாள். அருணுடன் மெதுவாக பேசிய ஆதினி “எக்ஸ்க்யூஸ் மீ, நான் கொஞ்சம் அவசரமா ஆபீஸ் போகனும்” என்று அவர்களிடம் விடை பெற்று வீட்டுக்குள் சென்று பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டு அருணுடன் கிளம்பினாள்.
நாட்கள் ஓடின. இன்னும் இரண்டு நாளில் ஆதினி கிளம்ப வேண்டும். அருணின் பெற்றோர்களிடம் விடைபெற்றுக்கொள்ள அவன் வீட்டிற்கு வந்தாள் ஆதினி. “வாம்மா ஆதினி” அருணின் அம்மா உற்சாகமாக வரவேற்றார்.
“எப்படி இருக்கிங்க அத்தை, மாமா எங்க?” என்ற படி கண்களால் தேடினாள்.
“அருணும் மாமாவும் கடைக்கு போயிருக்காங்க” எ‌ன்றவர் தொடர்ந்தார் “உக்காரும்மா, காபி கொண்டு வரேன்” என்றாள்.
“இப்ப வேணாம் அத்தை, மாமாவும் அருணும் வரட்டும்” என்ற ஆதினி கையோடு கொண்டு வந்த பையை அத்தையிடம் கொடுத்தாள்.
“அத்தை, நான் நாளைக்கு கிளம்பறேன். வர மூணு மாசம் ஆகும். நான் வர்ற அன்னைக்கு நீங்க இந்த புடவை கட்டி என்னை வரவேற்கனும்” என்றாள். வெளியே சத்தம் கேட்டது. அருணும் மாமாவும் வந்து கொண்டிருந்தனர்.
“வாம்மா ” என்றபடி வந்த மாமா கையில் இருந்த பையை ஆதினியிடம் கொடுத்தார்.
 “எங்க சின்ன பரிசும்மா, பிரிச்சு பாரு” என்றார். ஆதினி பிரித்து பார்க்க சிறிய நகை பெட்டிக்குள் வைர மோதிரம் மின்னியது. அத்தை அந்த பெட்டியை வாங்கி மோதிரத்தைக் கையில் எடுத்து அருணின் கையில் கொடுத்தார்.
“மருமக கைல போட்டு விடுடா” என்றார். அருண் ஆதினி கைப்பிடித்து மோதிரத்தைப்போட ஏனோ கண்கள் கலங்கியது ஆதினிக்கு. அத்தை பதறியபடி “என்னம்மா, ஏன் அழற” என்றார்.
“தெரியல அத்தை, என்னமோ, மனசு ஒரு மாதிரி இருக்கு. என்னமோ பயம் வருது” என்றாள் ஆதினி.
“கடவுள் அருள் உன் கூட இருக்கும்மா. எல்லாம் நல்லபடி நடக்கும்” என்ற மாமா, “அருண், கூட்டிட்டு போயி சமாதானப்படுத்து” என்றார்.
அருணுடன் அவன் ரூமுக்கு வந்தாள் ஆதினி. உள்ளே வந்ததும் அவளை அணைத்து “என்னாச்சு டார்லு” என்றான் அருண்.
“தெரியல அருண். என்னமோ படபடண்ணு இருக்கு. நான் திரும்பி வர மாட்டேனோன்னு தோணுது. பட், எனக்கு இந்த மிஷன் ரொம்ப முக்கியம். எல்லாம் தயார். நாளைக்கு இந்நேரம் நான் உன்கூட இருக்க மாட்டேன்” கண்ணீருடன் சொன்னாள்.
“டார்லு, நானும் இந்த ப்ராஜெக்ட்ல தானே இருக்கேன். எல்லாம் பக்காவா இருக்குடா. ஒரு தப்பும் நடக்காது. ப்ளான் பண்ண படி நீ வருவ, நம்ம கல்யாணம் நடக்கும். முதல்ல பொண்ணு, அப்புறம் பையன், ரெண்டு குழந்தைங்க பெத்துக்குவோம்” என்றான்.
வெட்கத்துடன் குனிந்த ஆதினியின் முகவாயில் விரல் வைத்து நிமிர்த்தினான். அவள் கண்களை நோக்கியபடி இதழை வருடினான். அவன் இடக்கையால் அவள் இடையை இறுக்கி அவனுடன் அணைத்துக்கொண்டான். திமிரிய அவளிடம் ரகசியமாக “ராட்சசி, உனக்கு பிடிச்ச பாட்டுல தலைவன் பொருள் தேட போவான், தலைவி தவிப்பான். இங்க நீ போற. இது பொருள் தேட மட்டும் இல்ல. இது நம்ம நாட்டுக்கு நாம செய்யற சேவை. ஆகாஷ்பவன்ல இருந்து நாம தர்ற இன்பர்மேஷன் நம்ம மக்களுக்கு உதவும். இருந்தாலும் மூணு மாசம், உன்னை பார்க்காம, தவிச்சு போவான்டி இந்த தலைவன்” சொன்னவன் இதழில் தன் இதழை பதித்தாள் ஆதினி.
பிரிய மனமில்லாமல் பிரிந்து அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினாள் ஆதினி.

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here