மூன்றாவது காதல்
“அதுல எனக்கு தப்பு இருக்கற மாதிரி தெரியல வசந்தி. என்கூட இருக்கறவங்கள பத்தி எனக்கு எல்லாமே தெரியும். எப்போ கோபம் வரும், எப்போ சந்தோசமா இருப்பாங்க, என்ன செஞ்சா சமாதானம் ஆகுவாங்க, எந்த மொக்க கடிக்கு சிரிப்பாங்கன்னு இன்னும் எனக்கு அவுங்கள பத்தி நெறைய தெரியும். புடிச்சிது கேட்டேன்.”
சிறுகதை
Writer C. Vetrivel
9/21/20241 min read
ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்தபடியே அலைகள் பாதத்தைத் தொடாதபடி சற்றுத் தள்ளி நுரை பொங்கிய கடலலைகளையே பார்த்தபடி நடந்துகொண்டிருந்தான் சுதன்.
அப்போது அவனுக்குப் பின்னால் தொலைவிலிருந்து எழுந்த, “சுதா....” என்ற குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
அங்கே வசந்தி அவனை நோக்கி வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தாள். அந்தக் குளிர்ந்த காற்றிலும் அவளது முகத்தில் வியர்வைத் துளிகள் முத்து முத்துக்களாய் நின்றதைப் பார்த்தபடியே சுதன் நிற்க, “எத்தன முறைங்க உங்க நம்பருக்கு டிரைப் பண்றது? போன அட்டண்ட பண்ண முடியாத அளவுக்கு பிசியா சுதன்?” எனக் கேட்டபடியே அவனை முறைத்தாள்.
அவள் கூறியதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த சுதன் சட்டைப் பையில் பின்புறமாக வைத்திருந்த போனை எடுத்துப் பார்த்தான்.
ஏழு மிஸ்டு கால் இருந்தது. அனைத்துமே வசந்தியின் நம்பரிலிருந்து தான் வந்திருந்தன.
“சாரி...” எனக் கூறிக்கொண்டே அவன் சைலன்ட் மோடினை லவுட் மோடிற்கு மாற்றி அவளை சோகத்துடன் பார்த்தான்.
“பேச முடியாதுண்ணா நம்பரையே குடுத்துருக்க வேண்டியதில்லையே சுதன். எதுக்கு நம்பர கொடுத்துட்டு இப்படி இன்சல்ட் பண்றீங்க?”
“ரியல்லி சாரி, வசந்தி. ரூம்ல புக் படிக்கும்போது சைலன்ட்ல போட்டேன். ரிமூவ் பண்ண மறந்துட்டேன். எக்ஸ்ட்ரீம்லி சாரி” எனக் கூறிக்கொண்டு அவளை நோக்கினான்.
அவள் முகத்தில் வழியத் தொடங்கியிருந்த வியர்வையை கைக்குட்டையினால் துடைத்தபடியே நடக்கத் தொடங்கினாள். குற்ற உணர்ச்சியுடன் அவளது பின்னாலேயே நடந்துகொண்டிருந்தான் சுதன்.
சுதனும், வசந்தியும் சென்னையில் அருகருகில் வசிப்பவர்கள். சுதனுக்குப் பூர்வீகம் தஞ்சாவூர் அருகில் ஒரு கிராமம். வசந்தி சென்னைதான். படிப்பு, பார்க்கும் வேலை என அனைத்திலும் இருவரும் முரண்பட்டிருந்தாலும் இருவருக்கும் ஒத்த ஒரு விஷயம் இருக்கிறதென்றால் அது புத்தகங்கள் மட்டும்தான். ஒரு முறை அண்ணா நூலகம் சென்று நள்ளிரவில் திரும்பியபோது தான் இருவரும் முதன்முதலில் பேசிக்கொண்டார்கள். அதற்கு முன் இருவரும் வீட்டிற்கு அருகில் பல முறை பார்த்திருந்தாலும் பேசிக்கொண்டதில்லை. பேசவேண்டிய அவசியமும் இருவருக்கும் ஏற்பட்டதில்லை. இருவருக்கும் பழக்கம் அப்போது ஏற்பட்டதுதான். அதன் பிறகு வாசித்த புத்தகங்களைப் பற்றி பேசிக்கொள்வது. புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வது என்று இருவருக்கும் இடையே நட்பு வளர்ந்துகொண்டிருந்தது. அதை நட்பு எனக் கூட கூற இயலாது. புத்தகம் சார்ந்து இருவரும் பழகிக் கொண்டார்கள். அவ்வளவுதான்.
சற்றே அகலமாக, நீண்ட அடியை வைத்து வேகமாக கோபத்துடன் சென்றுகொண்டிருந்தாள் வசந்தி. அவளது நடைக்கு ஈடு கொடுத்தபடியே வேகமாக நடந்த சுதன், “வசந்தி... நான்தான் சாரி கேட்டுட்டேன்ல” எனத் தெரிவித்தான்.
“சாரி சொன்னா போதுமா?”
“வேற என்ன பண்ணனும்???”
“நீங்க என்ன பண்ணுனாலும் என் கோபம் இன்னைக்குத் தணியாது! எவ்ளோ முக்கியமான விசயத்த இன்னைக்கு சொல்லலாம்னு உங்கள கூப்டா, நீங்க...” எனக் கூறியபடியே மீதி வாக்கியத்தை உதட்டோடு பற்களால் கடித்தாள்.
“என்ன முக்கியமான விஷயம் அது?”
“ரெண்டு மாசமா உங்ககிட்ட சொல்லலாமா இல்ல வேணாமான்னு யோசிச்சு இன்னைக்கு சொல்லியே ஆகணும்னு உங்கள கூப்டேன். உங்களுக்குக் கொடுத்து வச்சது அவளதுதான். லீவ் இட்”
“நான் மெரீனா வந்துருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”
“உங்களுக்கு கால் பண்ணி பாத்துட்டு நொந்து போயி பொழுது போக்கலாம்னு இங்க வந்தேன். இங்க வந்தா, எனக்கு முன்னாடி நீங்க நிக்கிறீங்க!” எனக் கூறிவிட்டு எதிரில் ஐஸ்கிரீம் விற்றுக்கொண்டிருந்தவனிடம் இரண்டு கோன் வாங்கி ஒன்றை சுதனிடம் நீட்டினாள்.
அதை வாங்கிக்கொண்ட சுதன் சுவைத்தபடியே கடற்கரையில் கைவிடப்பட்டுக் கிடந்த படகில் அமர்ந்தான். அவனருகில் வசந்தியும் அமர்ந்தாள். இருவரில் யார் நகர்ந்தாலும் இருவரது தோள்களும் உறவாடிக்கொள்ளும் தொலைவில் அமர்ந்திருந்தாலும், இருவருக்குள்ளும் நீண்ட அமைதி பெரும் இடைவெளியுடன் அங்கே நிலவிக்கொண்டிருந்தது.
அப்போது வசந்தி, “சுதன்...” என அழைத்தாள்.
“கோபம் ஒருவழியா போயிடுச்சா? சொல்லுங்க வசந்தி...” என்றான்.
எதிரில் பார்வைக்கு எட்டிய தூரம் வரையிலும் நீலப் போர்வை போர்த்தியிருக்க, கடலும் வானும் எந்தப் புள்ளியும் சந்தித்துக் கொள்கிறது என்பதை அறிய முடியாத தொடுவானத்தில் பார்வையைப் பதித்தபடியே, “சுதன்... வாட் டூ மீன் லவ்?” எனச் சிறு புன்னகையுடன் சுதனிடம் கேட்டாள்.
“இத்தன மாசமா இல்லாம திடீர்னு ஏன் இப்படி ஒரு கேள்வி?”
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே சுதன்.”
“காதல்....” எனத் தொடங்கிய சுதன் அமைதியானான். பிறகு சொற்களைத் தேடிக்கொண்டு, “காதல் ஒரு அழகான உணர்வு, எல்லாருக்கும் அடிப்படையானதும் கூட...”
“அடிப்படையானதுன்னா?”
“அடிப்படைன்னா... தூக்கம், பசி, காமம் மாதிரி அதுவும் ஒரு அடிப்படையான உணர்வு. அவ்ளோதான்.”
“அப்படின்னா... இந்த உன்னதமானது, உயர்வானது, அப்படிங்கற கோட்பாடுலாம்?”
“சுத்த முட்டாள்தனம்!”
“முட்டாள் தனமா?”
“ம்ம்ம்...”
“அப்டினா, காதலும் முட்டாள் தனந்தானா?”
“இல்ல, காதல் முட்டாள்தனம் இல்ல.”
“புரியல சுதன்...”
“காதல் முட்டாள்தனம் இல்ல வசந்தி. அந்த உணர்வு எல்லாருக்கும் வேணும். அத உன்னதமானது, உயர்வானதுனு எல்லாரும் உயர்த்தி புடிச்சிகிட்டு தூரத்துல வச்சி அன்னியப்படுத்திப் பார்க்கறதுதான் முட்டாள்தனம்னு சொல்ல வரேன்.”
“அப்படின்னா... ‘காதல்... காதல்... காதல்...’ ‘காதல் போயின்’ ‘சாதல்... சாதல்... சாதல்...’னு நீண்ட வசனம் பேசுறது?”
“அது மோசமான பைத்தியக்காரத்தனம்” எனச் சத்தமாக கூறிய சுதன், “காதல் போனா சாவுன்னா, நான்லாம் இதுக்கு முன்னாடி ரெண்டு வாட்டி செத்து போயிருக்கனும்...” எனச் சற்றே மெதுவாக அவள் கேட்காதபடி தெரிவித்தான்.
“என்ன சொன்ன? என்ன சொன்ன? காதல் இல்லாட்டி சாவுன்னா ரெண்டு வாட்டியா?” என அரைகுறையாக காதில் விழுந்ததை கேட்டு அவனிடம் திரும்பவும் கேட்டாள் வசந்தி.
“காதல் போனதுக்கு அப்புறம் சாவுன்னா இந்நேரம் ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டாங்க. காதல் இல்லேன்னா சாவுங்கறது பைத்தியக்காரத்தனம்...”
“அப்படின்னா, பாரதி பைத்தியக்காரருன்னு சொல்றியா?”
“பாயும் ஒளி நீ எனக்கு, பார்க்கும் விழி நான் உனக்கு; தோயும் மது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு என்று சொன்ன காதல் கவிஞர் ஆயிற்றே அவர். அவர அப்படி சொல்ல முடியுமா?”
“..............”
“பாரதி மட்டும் இல்ல. காதலப்பத்தி எழுதுன எல்லா கவிஞர்களுமே காதல் புனிதமானது, உயர்வானதுன்னு எழுதி ஒட்டு மொத்த உலகத்தையுமே கெடுத்து வச்சிருக்காங்க... அதப் படிச்ச நாமளும் அதே நெனப்புலையே காதலிக்க ஆரம்பிக்கறோம். காவியங்களிலும், கவிதைகளிலும் படிச்ச காதல நாம நிஜ வாழ்க்கைல எதிர்பார்க்குறது பெரிய மடத்தனம். அதே நெனப்புலயே காதல் போச்சின்னா சாகுரதுங்கறது பெரிய முட்டாள்தனம். கவிஞர்கள நான் முட்டாள்கள்னு சொல் வரல வசந்தி. அவுங்க சொன்னத நாம அப்படியே நம்பி கனவு உலகத்த நிஜ உலகத்திலயும் எதிர்பார்த்து ஏங்குறோம்ல. அதுதான் பைத்தியக்காரத்தனம்!”
“அப்படின்னா... சாரு தெளிவா இருக்கீங்க...”
எந்தப் பதிலையும் கூறாமல் ஒற்றைச் சிரிப்பு ஒன்றை மட்டும் உதிர்த்தான் சுதன்.
“சுதன்...”
“கேளுங்க வசந்தி.”
“இவ்வளவு தெளிவா பேசுறீங்களே, இதுக்கு முன்னாடி காதலிச்சிருக்கீங்களா?”
“ம்ம்ம்... ரெண்டு வாட்டி...”
“ரெண்டு வாட்டியா...?” அதிர்ச்சியுடன் கேட்டாள் வசந்தி.
“ம்ம்ம்...” அவளது கண்களைப் பார்த்தபடியே தெரிவித்தான் சுதன்.
“அந்தக் காவியக் காதல்களப் பத்தி நானும் தெரிஞ்சிக்கலாமா?” எனச் சிரித்தபடியே வினவினாள் வசந்தி.
“ஒன்னு ஸ்கூல் படிக்கும்போது என்னோட பிரண்டு மேல வந்தது!”
“இன்னோன்னு?”
“காலேஜ் படிச்சி முடிச்சதும் என்னோட ஸ்கூல் பிரண்ட் மேல வந்தது.”
“ரெண்டாவது பொண்ணுக்கு உன்னோட முதல் காதல பத்தி தெரியுமா?”
சுதன் சிரித்தபடியே, “ரெண்டு பெரும் பிரண்ட் தான். என்னோட ஸ்கூல் கிளாஸ் மேட். போத் நோவுண் ஈச் அதர் வெல்” என்றான்.
“ரெண்டு பேருமே உன்னோட பிரண்டா???”
“ம்ம்ம்...”
“போத் சைட் ஆர் சிங்கிள்?”
“சிங்கிள் ஒன்லி!”
“நீங்க தான் புரபோஸ் பண்ணுனீங்கலா?”
“ஆமாம்...” எனக் கூறிக்கொண்டே தலையை ஆட்டினான் வசந்த்.
“ஒன் சைடு விரகத்தில இனி காதலே வேண்டாம்னு முடிவெடுத்துட்டீங்கன்னு நெனைக்கறேன். அதனாலதான் காதல் மேல உங்களோட எண்ணம் மாறிடுச்சீன்னு நெனைக்கறேன்.”
“இல்ல வசந்தி, அந்த இரண்டு காதலும் என்ன எந்த விதத்திலையும் பாதிக்கல. அப்போ நான் எப்படி இருந்தேனோ, இப்பவும் அப்படியே தான் இருக்கும்.”
“அப்படின்னா...?”
“ஜஸ்ட் வெயிட்டிங் பார் மை தேர்ட் லவ்!”
“தேர்ட்?”
“எஸ்” எனச் சிரித்தபடியே தெரிவித்தான் சுதன்.
அவன் கூறியதைக் கேட்டுச் சிரித்த வசந்தி, “பிரண்ட் மேல லவ் வரது தப்பு இல்ல சுதன். அவுங்களோட நம்பிக்கைய சீற்குலைக்கற மாதிரில இது இருக்கு?” என வினவினாள்.
“அதுல எனக்கு தப்பு இருக்கற மாதிரி தெரியல வசந்தி. என்கூட இருக்கறவங்கள பத்தி எனக்கு எல்லாமே தெரியும். எப்போ கோபம் வரும், எப்போ சந்தோசமா இருப்பாங்க, என்ன செஞ்சா சமாதானம் ஆகுவாங்க, எந்த மொக்க கடிக்கு சிரிப்பாங்கன்னு இன்னும் எனக்கு அவுங்கள பத்தி நெறைய தெரியும். புடிச்சிது கேட்டேன்.”
“ஐ தின்க்?”
“யூ திங்க் வாட் வசந்தி?”
“இல்ல, பிரண்டுக்கு புரபோஸ் பண்றது சரின்னு எனக்கு தோணல...”
சிறிது நேரம் அமைதியாகவே அமர்ந்திருந்தான் சுதன். அப்போது ஒரு பெண் அவர்களைக் கடந்து சென்றாள். அவளைப் பார்த்தபடியே சுதன், “வசந்தி, முதல் பார்வைல வரதுதான் காதல்னு நீங்க நெனக்கிறீங்களா???”
“முதல் பார்வைன்னு இல்ல. ஆனால்...”
“ஆனா... தயக்கமில்லாம சொல்லுங்க வசந்தி?”
“என்னதான் இருந்தாலும், நம்ம கூட இருக்கற பிரண்டுக்கு புரபோஸ் பண்ணுறது வல்கரா இருக்காதா?”
“என்ன கேட்டா பழகாத பொண்ணுகிட்ட போயி முதல் பார்வைலவே காதல்ல விழுறதுதான் வல்கர்னு சொல்லுவேன்!”
“எப்புடி?”
“ஒரு பையன நீங்க முதல்ல பார்க்குறீங்க? வேணாம். ஒரு அழகான பொண்ண நான் பார்க்கறேன்னு வச்சிகுங்க. அவள்ட்டேருந்த என்ன முதல்ல எது இழுக்கும்?”
“இழுக்கும்னா?”
“வசீகரிக்கும். என்ன எது முதல்ல காதல் வயப்படுத்தும்?”
“அழகு!”
“அழகுன்னா???”
“அழகுன்னா, அத எப்டி சொல்லறது?”
“நான் சொல்லவா???”
“வேணாம்... எனக்கு புரியுது. அதுக்கு நீ விளக்கம் கொடுக்க வேணாம்.”
“இப்ப சொல்லு, எந்த பழக்கமும் இல்லாம, அந்தப் பொண்ணப் பத்தி நமக்கு எதுவும் தெரியாம உடல் ஈரப்பு அடிப்படைல ஒரு பொண்ணுகிட்ட புரோபோஸ் பண்ணுறது வல்கர் இல்லையா!”
“.......” வசந்தி எதுவும் சொல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
“என்கூட சில வருஷம் பழகுனதுக்கு அப்புறமா எனக்கு இவுங்க கூட வாழ்ந்தா என் எதிர்காலம் அழகா இருக்கும்னு தோணுச்சி. அதனால கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன். அதுல எனக்கு தப்பு இருக்குதான்னு தெரியல...”
“நம்ம ஊர்ல நெறைய கல்யாணம் அப்டிதானே நடக்குது. ஒரு நாள்ல பொண்ணு பார்த்து புடிச்சிருக்குன்னு சொல்லி தானே கல்யாணம் பண்றாங்க. அத நீங்க தப்புன்னு சொல்றீங்களா சுதன்?”
“கண்டிப்பா வசந்தி. முதல் பார்வைல புடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு ரெண்டே காரணம் தான். ஒன்னு அவ அழகா, கவர்ச்சியா இருக்கணும். ரெண்டாவது பொண்ணோட அப்பா வசதியா இருக்கணும். செக்சுக்கு அழகு, கவர்ச்சி; ஆடம்பரத்துக்கு பணம் இத ரெண்ட விட்டா முதல் பார்வைல ஓகே சொல்றதுக்கு வேற என்ன இருக்கு சொல்லுங்க?”
அப்போது வசந்தி அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“நம்ம ஊர்ல நடக்கற பல கல்யாணத்துல முதல் இரவு லைசென்சுடு ரேப் தானே நடக்குது. அங்க காதல், தாம்பத்யம் ஏதாவது இருக்குமா சொல்லுங்க....?” எனக் கூறியவன் எழுந்து நின்றான்.
வசந்தி சிந்தித்தபடியே அந்த படகிலேயே சாய்ந்திருந்தாள்.
“வாங்க கிளம்பலாம்...”
“ம்ம்ம்...” எனக் கூறிக்கொண்டு எழுந்தவள் சிந்தித்தபடியே நடக்கலானாள்.
“வசந்தி...”
“சொல்லுங்க சுதன்”
“எதுக்கு அத்தன முற எனக்கு கால் பண்ணிருந்தீங்க?”
“அத நிச்சயமா நீங்க தெரிஞ்சிகிட்டே ஆகணுமா?”
“ம்ம்ம்... சொல்லுங்க.”
“அத சொல்றதுக்கு இப்போ நேரம் வரலன்னு நெனைக்கறேன்.”
“எப்போ நேரம் வருமாம்?”
“வரும்போது நானே சொல்றேன்” எனத் தெரிவித்தவள் கையை நீட்டினாள்.
“எதுக்கு இப்போ கைய நீட்டறீங்க?”
“கைய நீட்டுங்க சொல்றேன்!”
சுதனும் கையை நீட்டினான். அவனது கையைப் பற்றி குலுக்கிக் கொண்டவள். “சுதன், இனி நீங்களும் நானும் பிரண்ட்ஸ்” எனப் புன்னையுடன் தெரிவித்தாள்.
“பிரண்ட்ஸ்???”
“எஸ்ஸ்ஸ்ஸ் டியர்”
“அப்போ, இத்தன நாளா???”
“அது வேறடா...” எனத் தெரிவித்தவள் அவனது கையைப் பற்றியபடியே அந்தக் கடற்கரையில் அவனுடன் நடந்து சென்றாள் வசந்தி.
அப்போது பெருகி வந்த பெரும் அலை ஒன்று அவர்களது இருவரது பாதத்தையும் ஒரே நேரத்தில் நனைத்துவிட்டுச் சென்றது.
சி.வெற்றிவேல்
சாளையக்குறிச்சி...
Subscribe to our newsletter
Enjoy exclusive special deals available only to our subscribers.