வெற்றி கண்ட ஒரு வரலாற்றுப் புதினம்!!
வானவல்லியை அவன் எழுத துவங்கியிருந்த காலம் துவங்கி , வானவல்லி அவனது நினைப்பையும் , எழுத்தையும் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்திருக்க வேண்டும் , எப்போது பேசினாலும் வானவல்லி பற்றியே பேசுவான், சின்ன இடைவெளி கிடைத்தால் போதும் கம்ப்யூட்டர் திரையை வெறித்தபடி வெறித்தனமாக டைப் செய்ய ஆரம்பித்துவிடுவான்.
வாசகர் கடிதம்
Vijayan Durairaj
9/21/20241 min read
நம் கண் முன்னாலேயே பல நாட்களாக அமைதியாக அமர்ந்திருக்கும் நம் வீட்டு பூச்செடியொன்று திடீரென ஒரு நாளில் மொட்டு விட்டு, மலர்ந்து.. மலராகி... முதல் பூ பூக்கும் தருணத்தில் மனதில் ஒரு ஆனந்தம் ஏற்படுமே , அப்படி இருந்தது . வெற்றியின் புத்தகம் அச்சிற்கு சென்ற அந்த தருணத்தில்.
வானவல்லி : கரிகாலச்சோழனின் வாழ்க்கையை மையச்சரடாக கொண்டு பின்னப்பட்ட ஒரு வரலாற்று புதினம். நான்கு பாகங்களை கொண்ட இந்த பெருங்காவியம். வானதி பதிப்பகத்தின் புதிய வெளியீடாக இந்த வருட புத்தகத் திருவிழாவை அலங்கரிக்க இருக்கிறது.
பாகம் -1
வானவல்லி யின் வெற்றிக்கு மூல முதற் காரணம் ஒன்றே ஒன்று தான் அயராத அதி தீவிர அர்ப்பணிப்புடன் அவனிட்ட (இந்த நூலின் ஆசிரியனும் என் நன்பனுமான வெற்றிவேலிட்ட )அசாத்திய உழைப்பு.
வானவல்லியை அவன் எழுத துவங்கியிருந்த காலம் துவங்கி , வானவல்லி அவனது நினைப்பையும் , எழுத்தையும் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்திருக்க வேண்டும் , எப்போது பேசினாலும் வானவல்லி பற்றியே பேசுவான், சின்ன இடைவெளி கிடைத்தால் போதும் கம்ப்யூட்டர் திரையை வெறித்தபடி வெறித்தனமாக டைப் செய்ய ஆரம்பித்துவிடுவான்.
ஊர் சுற்றிப்பார்க்க நன்பர் வீட்டிற்கு சென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் !, அவன் அங்கு கிடைக்கும் சமயத்தின் ஓய்வு நேரத்தில் கூட வானவல்லியைத்தான் எழுதிக்கொண்டிருப்பான் .
எத்தனை அதீத உழைப்பு !
உழைப்பின் அதீதம் எத்தனை ருசிகரமானது என்பதை அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறிவார்கள். வானவல்லி புத்தகமாக வேண்டும் என்கிற அவனது பெருங்கனவு அவனது பற்பல இரவுகளின் உறக்கங்களை உணவாக்கி செரித்திரிக்கிறது.
ஆரம்ப நாட்களில் அவ்வப்போது அத்தியாயங்களை எழுதி முடித்த கையோடு அனுப்பிவைத்து அபிப்ராயம் கேட்பான். நானும் கத்துக்குட்டித்தனமாக எனக்குத்தெரிந்த ஏதாவதொன்றை சொல்லி வைப்பேன். கதையைப் பற்றி மணிக்கணக்கில் அலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பான்.
வெற்றிவேலின் கதை சொல்லல்களில் அலங்கார சொல் வரிசைகள் அதிகம் இருக்காது, அவனது எழுத்தின் சிறப்பு : நேருக்கு நேரான வார்த்தைகள், விளக்கமான காட்சி விவரிப்பு . வாசிக்கும்போதே வார்த்தைகள் உருவம் கொண்டு விடும்.
முதல் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் முதல் காட்சியிலேயே இதை உணர முடியும். சம்பாபதி வனம் கடந்து பத்திரை ஊருக்குள் நுழைகிறாள், வழிபறிக்காரர்கள் வழிமறித்து களவாட வருகிறார்கள். பயம் பீடித்த பதறிப்போயிருக்கும் பத்திரையை காக்க யாராவது வருவார்களா ! என படிக்கும் நாம் பதறும் போது நமது , கதையின் கதாநாயகி வானவல்லியின் Entry !.
கதாப்பாத்திரங்களும், கதைக்களமுமே ஒரு கதைக்கான முக்கிய அம்சங்கள் , கதையின் வெற்றி தோல்விகளை இந்த இரண்டும் தான் அநேகமாக தீர்மாணிக்கின்றன. வானவல்லிக்கு இந்த இரண்டும் மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றது. இந்த கதையின் முக்கிய சிறப்பாம்சம் அதன் கதாப்பாத்திரங்கள், கதாப்பாத்திரங்கள் அத்தனை உயிரோட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
கதையின் ஒரு இடத்தில் விறல்வேலின் மாமன் மகள் பூங்கோதை இறந்துபோகிறாள், அந்த காட்சியை கடந்தபோது உண்மையிலேயே மிக வருத்தமாக இருந்தது , அவள் இறந்த போது மனம் என்னவோபோல இருந்தது., அவளை கொலை செய்ததற்காக வெற்றிவேலை திட்டலாம் போலிருந்தது, ஆனால் அவளது மரணம் கதைக்கு மிக அவசியமான ஒன்று, கதையின் போக்கை தீர்மாணிக்கிற ஒன்று.,
ஒரு கதாசிரியன் தனது கதாப்பாத்திரங்கள் கதையினுள் மரணிக்கிறபோது வருத்தப்படுகிறான் என்கிற கருத்தை பாலுமகேந்திரா தனது ஜூலிகணபதி திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்.
கதாசிரியன் அவனாக விரும்பி அந்த கதாப்பாத்திரத்தை கொலை செய்யவில்லை, கதையின் போக்கு அவனை அதை செய்ய வைத்திருக்கிறது, பூங்கோதையின் மரணம் என்னை மட்டுமின்றி வெற்றிவேலையும் கூட பாதித்திருந்தது ! என்ன செய்ய கதைக்கு அது அவசியம் !
வானவல்லியை வாசிப்பவர்கள் அதன் கதைக்களத்தை, கதாப்பாத்த்திரங்களை, கதையை நிச்சயம் சிலாகிப்பார்கள், வாசகர்களிடையே வானவல்லி உரிய அங்கீகாரம் பெறும் என உறுதியாக கூறவேன் நான்.
முதல் பாகத்தில் கதை நாயகன் விறல்வேல், வானவல்லியிடம் அவனது காதலை தாழம்பூவில் கவிதையாக்கி சொல்லும் அந்த தருணம் ! எனக்கு மிக பிடித்திருந்தது,
அவர்களிடையே காதல் மலரும் நிமிடங்கள், அவர்களிடையேயான சிறு சிறு ஊடல்கள், சந்தர்ப்ப வசத்தால் ஏற்படும் பிரிவுகள், போன்ற உணர்வுகளை மிக நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறான் , சங்க இலக்கியங்களின் வாசனையை அனுபவித்து காட்சிப்படுத்தியிருக்கிறான் .
ஆங்காங்கே , இந்த கதை முழுக்க அவன் பயன்படுத்தியிருக்கும் உவமைகளும் மிக ரசனையானவை. "விடியலுக்காக இரவானது நட்சத்திரங்களுடன் தன்னையும் சாகடித்துக் கொள்வதில்லையா ! அதுபோலவே இருந்துவிட்டுப்போகிறேன் நானும் " என விறல்வேல் கூறும்போது நான் ஆச்சர்யத்துப்போனேன் !.
வானவல்லி பெருங்காவியம் வரலாற்று புதினப் பிரியர்களுக்கு மட்டுமின்றி இலக்கிய ரசனைக்காரர்களுக்கும் கூட நிச்சயம் விருந்தாக அமையும்.
காதல் காட்சிகளில் நம்மை கரைய வைக்கின்றன என்றால், போர்க்காட்சிகள் நம்மை உறைய வைக்கின்றன , அத்தனை விறுவிறுப்பாக சண்டைக்காட்சிகள் நகர்கின்றன.
பாகம் 2
இரண்டாம் புத்தகத்தில் கடலுக்குள், கப்பல்களுக்குள் நடக்கும் போர் பற்றி எழுதியிருப்பான் , Brilliant !! . ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போல இருந்தது.அத்தனை நேர்த்தியான காட்சியமைப்புகள்.
பாகம் 3
நான்காம் பாகம் இதுவரை எந்த வரலாற்றுப் புதின ஆசிரியரும் தொடாத புதிய களமான கரிகாலனின் இமய படையெடுப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.
பாகம் 4
வானவல்லி புதினத்திற்கு திரைக்கதை வடிவம் கொடுத்து பிரம்மாண்ட வடிவில் படமாக எடுத்தால் நிச்சயம் அமோக வெற்றி பெரும் என நம்புகிறேன் !.
வெற்றிவேல் , அவன் பெயரிலேயே வெற்றியை பொதித்து வைத்திருக்கிறான்.வெற்றி என்ற வார்த்தையை அவன் காதுகள், ஒலியை மொழியாக்கி புரிந்து கொள்ளத்துவங்கிய நாள் முதலாகவே கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
இன்னும் பல வெற்றிகள் உன்னைத் தேடி வரும். உன்னை நட்பென கொண்டதில் பெரும் சந்தோசம் கொள்கிறேன் !
உன்னதமானவர்களின் உன்னத கனவுகள் உண்மையாகும் என்ற கலாமின் வரிகளை உனக்கு மறுபடியும் நினைவுருத்துகிறேன் ! .
சர்வ நிச்சயமாக , வானவல்லி வரலாற்றுப் புதின வரலாற்றில் ஒரு வரலாறு படைக்கும்.
- விஜயன் துரைராஜ்